×

அதானி நிலக்கரி ஊழல் குறித்து விரைவாக விசாரணை நடத்த வேண்டும்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 21 சர்வதேச அமைப்புகள் கடிதம்

புதுடெல்லி: அதானி குழுமத்தின் நிலக்கரி ஊழல் குறித்து விரைவாக விசாரணை நடத்த வலியுறுத்தி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு சர்வதேச நாடுகளை சேர்ந்த 21 அமைப்புகள் கடிதம் எழுதி உள்ளன. இந்தோனேசியாவிலிருந்து தரம் குறைந்த நிலக்கரியை மிகக் குறைந்த விலைக்கு வாங்கி வந்து, அதை இந்தியாவில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு அதிக விலைக்கு அதானி குழுமம் விற்றதை லண்டன் ‘பைனான்சியல் டைம்ஸ்’ இதழ் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியிருந்தது.

இதைத்தொடர்ந்து பாஜக ஆட்சியில் அதானி நிறுவனம் மிகப்பெரிய அளவுக்கு நிலக்கரி ஊழலில் ஈடுபட்டது அம்பலமாகியிருக்கிறது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியிருந்தார்.மேலும் அதானி நிறுவனத்தின் இந்த வெளிப்படையான ஊழல் மீது சிபிஐயோ அல்லது அமலாக்கத்துறையோ, வருமான வரித்துறையோ ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என்று ராகுல் காந்தி கேள்விகளை எழுப்பி இருந்தார். இந்த சூழலில் நிலக்கரி ஊழல் விவகாரம் குறித்து சர்வதேச நீதிக்கான ஆஸ்திரேலிய மையம், பேங்க் ட்ராக், பாப் பிரவுன் அறக்கட்டளை, கலாச்சாரம் அசுத்தம், ஈகோ, எக்ஸ்டிங்க்ஷன் கிளர்ச்சி, பூமியின் நண்பர்கள் ஆஸ்திரேலியா, லண்டன் மைனிங் நெட்வொர்க், மேக்கே கன்சர்வேஷன் குழு, சந்தைப் படைகள், பணம், கிளர்ச்சி, நிலக்கரிக்கு அப்பால் நகர்த்துதல், , ஸ்டாப் அதானி, சன்ரைஸ் இயக்கம், டிப்பிங் பாயிண்ட், டாக்ஸிக் பாண்ட்ஸ் உள்ளிட்ட 21 சர்வதேச அமைப்புகள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு ஒரு பரபரப்பு கடிதத்தை எழுதி அனுப்பி வைத்துள்ளன.

அதில் கூறியிருப்பதாவது: இந்தோனேசிய நிலக்கரி இறக்குமதியை அதிக விலைக்கு விற்ற அதானி குழும நிறுவனங்களை விசாரித்து, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் தாக்கல் செய்துள்ள வழக்கை விரைந்து தீர்த்து வைக்க வேண்டும். இதில் லண்டனை தளமாகக் கொண்ட பைனான்சியல் டைம்ஸின் செய்தி, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் ஊழல் அறிக்கையிடல் திட்டத்தின் (ஓ.சி.சி.ஆர்,பி ) அறிக்கையின் ஆவணங்களை தலைமை நீதிபதி கருத்தில் கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் அதானி குழுமம் தரம் குறைந்த நிலக்கரியை அதிக விலைக்கு விற்பதன் மூலம் மிகப்பெரிய மோசடியை செய்துள்ளது ஊர்ஜிதமாகியுள்ளது. இந்த விவகாரத்தில் நாங்கள் அனைவரும் உறுதியாக ஒருங்கிணைந்து நிற்கிறோம். அதே போன்று அதானி குழுமம் தமிழ்நாட்டுடனான பரிவர்த்தனைகளில், ‘‘தரம் குறைந்த நிலக்கரியை அதிக விலைக்கு அனுப்பி உள்ளது. எனவே விலை குறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்து அதிக விலைக்கு விற்றதாக கூறப்படும் அதானி குழுமத்தின் மீதான விசாரணையை மீண்டும் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் தொடங்க வேண்டும். இதுகுறித்து உச்ச நீதிமன்றம் உடனடியாக விசாரணை நடத்தி உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

The post அதானி நிலக்கரி ஊழல் குறித்து விரைவாக விசாரணை நடத்த வேண்டும்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 21 சர்வதேச அமைப்புகள் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Chief Justice ,New Delhi ,Adani Group ,Indonesia ,Dinakaran ,
× RELATED எதிர்கட்சிகளின் அழுத்தம், சுப்ரீம்...