×

ரசாயன தொழிற்சாலையில் நடந்த வெடிவிபத்து பலி 11 ஆக அதிகரிப்பு: ஆலை உரிமையாளர்கள் மீது வழக்கு

தானே: மகாராஷ்டிரா மாநிலம் தானே நகரின் டோம்பிவிலி பகுதி தொழிற்பேட்டையில் அமைந்துள்ள ‘அமுதன் கெமிக்கல்’ என்ற நிறுவனத்தின் ரசாயன உலை வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த வெடிவிபத்தின் சப்தம் ஒரு கி.மீ. தொலைவுக்கு கேட்டது. விபத்துக்குள்ளான ஆலைக்கு அருகில் உள்ள கட்டடங்களின் கண்ணாடி ஜன்னல்கள் விரிசல் அடைந்ததால் மக்கள் பீதியடைந்தனர். அப்பகுதியில் பலரது வீடுகள் சேதமடைந்தன.

தகவலறிந்து வந்த தீயணைப்புப் படையினர் மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர், இடிபாடுகளில் தீயில் கருகியிருந்த 2 பெண்கள் உள்பட 8 பேரின் உடல்களை மீட்டனர். பல்வேறு மாதங்களாக மூடப்பட்டிருந்த இந்த ஆலை கடந்த சில நாள்களுக்கு முன்பே செயல்பட தொடங்கியது என்றும், உயிரிழந்தவா்கள் அனைவரும் அருகிலுள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. மேலும் தீக் காயத்துடன் மீட்கப்பட்ட 48 பேர் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ சிகிச்சைக்கான செலவை மாநில அரசே ஏற்கும் என்று முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை வெளியிட்ட அறிவிப்பின்படி, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 3 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகினர். இதன் மூலம் வெடிவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. இச்சம்பவத்தில் மேற்கண்ட நிறுவன உரிமையாளர்கள் மல்டி மேத்தா மற்றும் மலாய் மேத்தா ஆகியோர் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post ரசாயன தொழிற்சாலையில் நடந்த வெடிவிபத்து பலி 11 ஆக அதிகரிப்பு: ஆலை உரிமையாளர்கள் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Thane ,Amudan Chemical ,Dombivili ,Maharashtra ,Dinakaran ,
× RELATED மராட்டியத்தில் வரலாற்று புகழ்பெற்ற...