×
Saravana Stores

கொடைக்கானல் கோடை விழா படகு அலங்கார போட்டியில் கலக்கிய ‘ஜல்லிக்கட்டு காளை’

கொடைக்கானல்: கோடை விழாவையொட்டி, கொடைக்கானலில் நேற்று நடந்த படகு அலங்காரப் போட்டியில், ஜல்லிக்கட்டு காளை போன்ற அலங்காரங்கள் சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்ந்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் கோடைவிழா மற்றும் மலர் கண்காட்சி கடந்த 17ம் தேதி தொடங்கியது. அன்று முதல் தினசரி பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. நேற்று கொடைக்கானல் ஏரியில் படகு அலங்கார போட்டி நேற்று நடைபெற்றது.

இதில், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த படகில் தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சித்துறை திட்டங்கள் குறித்து விளக்கும் வகையில் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. சுற்றுலாத்துறை படகில் ஜல்லிக்கட்டு உருவங்கள் பூக்களால் அலங்கரிங்கப்பட்டிருந்தன. தோட்டக்கலைத் துறை படகில் கார்னேஷன் மலர்களால் வாத்து உருவம் அமைக்கப்பட்டிருந்தது.
மீன்வளத்துறை படகில் மீன்வளர்ப்பு திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டிருந்தது. இதில் ஜல்லிக்கட்டு காளை சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்ந்தது. முன்னதாக படகு அலங்கார அணிவகுப்பு போட்டியை கொடைக்கானல் ஆர்டிஓ சிவராமன் தொடங்கி வைத்தார்.

பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவிற்கு ஆர்டிஓ தலைமை வகித்து பரிசுகளையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன் முன்னிலை வகித்தார். சுற்றுலாத்துறை அலுவலர் கோவிந்தராஜ், உதவி அலுவலர் சுதா, சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாளர் அன்பரசன், கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலமுருகன், பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். படகு அலங்காரப்போட்டியில் ஊரக வளர்ச்சித்துறை முதல் பரிசையும், மீன்வளத்துறை இரண்டாம் பரிசையும் பெற்றது. படகு அலங்கார அணி வகுப்பை சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசித்துச் சென்றனர்.

The post கொடைக்கானல் கோடை விழா படகு அலங்கார போட்டியில் கலக்கிய ‘ஜல்லிக்கட்டு காளை’ appeared first on Dinakaran.

Tags : Jallikattu Kalai ,Kodaikanal Summer Festival Boat Decoration Competition ,Kodaikanal ,fair ,Dindigul district ,
× RELATED கொடைக்கானல் வனப்பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்