×

தாமரைப்பட்டி முதல் வாடிப்பட்டி வரையிலான நான்கு வழிச்சாலையில் அணுகுசாலை அவசியம்: விவசாயிகள், பொதுமக்கள் ேகாரிக்கை


அலங்காநல்லூர்: மதுரை மாவட்டத்தில் தாமரைப்பட்டி முதல் வாடிப்பட்டி வரை உருவாகும் நான்கு வழிச்சாலையில் அமைக்கப்படும் பாலங்களின் அருகே, அணுகுசாலை அமைக்கப்பட வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மாவட்டத்தில், திருச்சி மற்றும் திண்டுக்கல் ஆகிய நகரங்களில் இருந்து நான்கு வழிச்சாலை மதுரைக்கு வருகிறது. இச்சாலைகளை இணைக்கும் வகையில் புதிய நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதன்படி மேலூரை அடுத்த சிட்டம்பட்டி டோல்கேட் பகுதியில் துவங்கும் இந்த சாலை தாமரைப்பட்டி, வாடிப்பட்டி, தாதம்பட்டி வரை செல்கிறது. இந்த சாலை பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதற்காக பல்வேறு இடங்களில் விவசாய நிலங்கள், கிணறுகள், தோப்புகள் உள்ளிட்டவை கையகப்படுத்தப்பட்டன. இந்த சாலை பணிகள் தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது.

இந்தநிலையில் ஆங்காங்கே அமைக்கப்படும் இணைப்பு சாலைகளில் இருந்து, பொதுமக்கள் அருகில் உள்ள தங்கள் கிராமங்களுக்கு செல்ல அணுகுசாலை அமைக்கப்பட வேண்டியது அவசியம். ஆனால், அலங்காநல்லூர், சின்ன இலந்தைகுளம், வாடிப்பட்டி வரையிலான பல்வேறு இடங்களில் அணுகு சாலைகள் அமைக்கப்படவில்லை. இதனால் இப்பகுதி மக்களும், விவசாயிகளும் பெரிதும் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து அலங்காநல்லூர் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுப்பராயலு கூறியதாவது: இந்த நான்கு வழிச்சாலை இணைப்புக்கான புதிய சாலையில் அலங்காநல்லூர், வலசை, சின்ன இலந்தைகுளம், கொண்டயம்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமைக்கப்படும் மிக பிரம்மாண்டமான இணைப்பு பாலம் அருகில் அணுகு சாலை அமைக்கப்படவில்லை. இதனால் இந்த சாலையை அடுத்துள்ள பல்வேறு சிறு கிராமங்கள் போக்குவரத்து வசதியின்றி துண்டிக்கப்படும் சூழ்நிலை எழுந்துள்ளது.

இதனால் இந்த கிராமங்களுக்கான அரசு பஸ் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்படும். மேலும், துண்டிக்கப்பட்ட நிலையில் விடப்படும் பல்வேறு கிராம மக்கள் பல கி.மீட்டர் நடந்து சென்று பேருந்துகளை பிடிக்கும் நிலை உருவாகும். மேலும், இந்த சாலையை அடுத்துள்ள விவசாய நிலங்களுக்கு விவசாயிகள் சென்றுவர முடியாத நிலை உருவாகும். இதனால் அவர்கள் தங்கள் விளைபொருட்களை விற்பனைக்காக சந்தைகளுக்கு எடுத்துச்செல்வது மற்றும் விவசாய பணிகளான நடவு மற்றும் அறுவடை பணிகளுக்கான வாகனங்களை கொண்டு செல்வதில் பெரும் சிரமத்தை மேற்கொள்ள நேரிடும். இந்த பிரச்னை குறித்து பலமுறை இப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் நெடுஞ்சாலை பணியை மேற்கொள்ளும் கட்டுமான நிறுவனத்திடம் முறையிட்டுள்ளனர்.

இருப்பினும், இந்த சாலை பணிகளில் தற்போது அமைக்கப்பட்டு வரும் பாலங்களின் அருகே அணுகுசாலை அமைப்பதற்கான எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. இதன் காரணமாக சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். ஏனெனில் தங்கள் கிராமத்தை கடந்து செல்லும் நான்கு வழிச்சாலை அருகே தங்கள் வசதிக்கான அணுகுசாலை அமைக்கப்படாவிட்டால் எப்படி தங்கள் விவசாய நிலங்களுக்கு செல்வது என புரியாமல் அவர்கள் தவிக்கின்றனர். எனவே இந்த பிரச்னையில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு சாலை பணிகள் நிறைவடையும் முன்பே எத்தனை இடங்களில் அணுகு சாலை அவசியம் என்பதை ஆய்வு செய்து அவற்றை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post தாமரைப்பட்டி முதல் வாடிப்பட்டி வரையிலான நான்கு வழிச்சாலையில் அணுகுசாலை அவசியம்: விவசாயிகள், பொதுமக்கள் ேகாரிக்கை appeared first on Dinakaran.

Tags : Thamaraipatti ,Vadipatti ,Alankanallur ,Tamaraipatti ,Madurai ,Madurai district ,Trichy ,Dindigul ,Dinakaran ,
× RELATED அலங்காநல்லூர் அருகே ஓட, ஓட விரட்டி வாலிபர் படுகொலை