×

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் திரியும் மாடுகள் ஏலம் விடப்படும்: அங்காடி நிர்வாகம் எச்சரிக்கை


அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றுத்திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு ஏலம் விடப்படும், என்று கோயம்பேடு அங்காடி நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் காய்கறி, பூ மற்றும் பழக்கடைகள் இயங்கி வருகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து காய்கறிகள், பழங்கள் ஆகியவை இங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. நாள்தோறும் சுமார் 10 டன்னுக்கும் அதிகமான காய்கறிகள், பழங்கள் இங்கு விற்பனை செய்யப்படுகிறது. காய்கறிகள் விற்பனை செய்ததுபோக மீதமாகும் காய்கறிகள், பழங்கள் ஆகியவை மார்க்கெட் வளாகத்தில் கொட்டி வைக்கப்படுகிறது. இந்த காய்கறி, பழம் கழிவுகளை சாப்பிட வரும் கால்நடைகள் பொதுமக்களுக்கும், வியாபாரிகளும் இடையூறு ஏற்படுத்துகிறது.

சில மாடுகள், மார்க்கெட்டிற்கு வரும் பொதுமக்களை விரட்டிச் சென்று முட்டுகிறது. இதனால் பொதுமக்கள் காயமடைவது தொடர்கதையாக உள்ளது. கோயம்பேடு மேம்பாலத்தில் இருந்து மதுரவாயல், பூந்தமல்லி செல்லும் பிரதான சாலையில் கூட்டம் கூட்டமாக மாடுகள் சுற்றித்திரிவதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதோடு விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே, மதுரவாயல், பூந்தமல்லி பிரதான சாலைகள், கோயம்பேடு மார்க்கெட் வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிக்க வேண்டும், என்று கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் கோர்க்கைவிடுத்தனர். அதன்பேரில், கோயம்பேடு மார்க்கெட் அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி தலைமையில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் பிடிக்கும் பணி நேற்று முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டது.

அதேபோல், கோயம்பேடு மார்க்கெட், மதுரவாயல், பூந்தமல்லி பிரதான சாலைகளில் சுற்றித்திரிந்த 20க்கும் மேற்பட்ட கால்நடைகளை பிடித்தனர். மேலும், அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர். அப்போது, கால்நடைகளின் உரிமையாளர்கள் இனி வரும் காலங்களில் கோயம்பேடு மார்க்கெட் வளாகத்திற்குள் மாடுகள் வராது, என்று கடிதம் எழுதிக்கொடுத்துவிட்டு மாடுகளை ஓட்டிச் சென்றனர். அப்போது, அங்காடி நிர்வாகத்தினர் இனி வரும் காலங்களில் மார்க்கெட் வளாகத்திற்குள் மாடுகள் வந்தால் ஏலம் விடப்படும், என்று எச்சரித்தனர்.

இதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட் அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி கூறுகையில், ‘‘கடந்த 2023 மே மாதம் தொடங்கி தற்போது வரை பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையில் சுற்றித்திரிந்த 175 மாடுகள் பிடிக்கப்பட்டு ₹3.50 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித் திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு, ஏலம் விடப்படும்,’’ என்றார்.

The post பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் திரியும் மாடுகள் ஏலம் விடப்படும்: அங்காடி நிர்வாகம் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Coimbed ,Annanagar ,Market Complex ,Coimbed Shop Administration ,Coimbed market complex ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED மும்பையில் இருந்து மொத்தமாக...