×

பெண்கள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்திய கட்டணமில்லா பஸ் பயண சேவை திட்டம்: திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை 7.45 கோடி முறை பெண்கள் பயணம்

திருவண்ணாமலை, மே 24: முதல்வரின் முதல் கைெயழுத்தில் அமல்படுத்தப்பட்ட முத்தான திட்டமான பெண்களுக்கு கட்டணமில்லா பஸ் பயணத்தின் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் கோடிமுறை பயன்படுத்தி பயனடைந்துள்ளனர். பெண்களுக்கு கிடைக்கும் கல்வியும், பொருளாதாரமும் அவர் சார்ந்த குடும்பத்தையும், நாட்டையும் முன்னேற்றும் ஆயுதமாக மாறுகிறது. ஒரு சமுகத்தின் ஒட்டுமொத்த வளாச்சி, பெண்களின் வளர்ச்சியை அடிப்படையாக கொண்டே அமைகிறது. எனவேதான், திமுக ஆட்சிக்கு வரும்போதேல்லாம் பெண்களின் நலன் சார்ந்த திட்டங்களுக்கு முன்னரிமை அளிக்கப்படுகிறது.

தொடக்க மற்றும் நடுநிலைக் கல்வியுடன் பெண்கள், பள்ளிப்படிப்பை பாதியில் கைவிடும் அவல நிலையை மாற்றியது கடந்த 1989ல் கலைஞர் கொண்டுவந்த திருமண உதவித்திட்டம். தற்போது, மாணவர்களுக்கு நிகராக மாணவிகள் பள்ளிப்படிப்பை தொட்டுவிட்டனர். எனவே, பெண்கள் உயர்கல்வியை பெற வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன், புதுமைப்பெண் திட்டமாக உருமாறியிருக்கிறது. அதேபோல், மகளிர் சுய உதவிக்குழுக்களை கடந்த 1989ம் ஆண்டு தருமபுரியில் முதன்முதலாக கலைஞர் தொடங்கி வைத்தார். இத்திட்டம் படிப்படியாக வளர்ந்து, மாநிலம் முழுவதும் மகளிர் குழுக்கள் தன்னிகரில்லா தனிப்பெரும் சக்தியாக உருவாகியிருக்கிறது. நிதி மேலாண்மை திறன் மிக்க, பொருளாதார வலிமை பெறறவர்களாக பெண்கள் உயர்ந்துள்ளனர்.

அதேபோல், கலைஞர் உரிமைத் தொகை திட்டம் மூலம், குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ₹1000 வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியிருக்கிறார். இத்திட்டம், பெண்களின் வாழ்வில் மிகப்பெரும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. குடும்பத்திற்காக உழைக்கும் உழைப்பும், சமூகத்துக்கான உழைப்புதான் என முதல்வர் அங்கீகரித்து உரிமைத் தொகையை வழங்கியிருக்கிறார் என பெண்கள் பெருமிதப்படுகின்றனர்.
இத்திட்டங்களுக்கு எல்லாம் முத்தாய்ப்பாக அமைந்தது, பெண்களுக்கான கட்டணமில்லா பஸ் பயண திட்டமாகும். கடந்த 7.5.2021 அன்று முதல்வராக பொறுப்பேற்றதும் மு.க.ஸ்டாலின் கையெறுத்திட்ட முத்தான முதல் திட்டம் இதுவாகும். முதல்வர் கையெழுத்திட்ட மறுதினமே இத்திட்டம் நடைமுறைக்கும் வந்துவிட்டது. பெண்கள் அன்றாடம் நேரடியாக பயன்பெறும் இத்திட்டம் மகத்தான வரவேற்பை பெற்று, வெற்றிகரமாக 3 ஆண்டுகளை கடந்திருக்கிறது.
உழைக்கும் பெண்கள், அன்றாடம் பணிக்கு செல்லும் பெண்கள், உயர்கல்வி பெறும் மாணவிகள் இத்திட்டத்தால் மிகப்பெரும் பயனடைகின்றனர். சுய தொழில் செய்யும் பெண்களுக்கு உறுதுணையாக இருக்கிறது. சமீபத்தில், மாநில திட்டக்குழு நடத்திய கள ஆய்வில், இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு பெண்ணும் மாதந்தோறும் ₹888 வரை சேமிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.

இத்திட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு, சிறு, குறு நிறுவனங்களில் பணிபுரியவும், துணிக்கடை, பல்பொருள் அங்காடி போன்ற வணிக நிறுவனங்களில் பணிபுரியவும் கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு வரும் பெண்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. அதன்மூலம், தனிநபர் வருமானமும், குடும்ப வருமானமும் உயர்ந்திருக்கிறது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சுமார் 7,500 நகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதில், சராசரியாக நாளொன்றுக்கு 35 லட்சம் முதல் 40 லட்சம் பெண்கள் பயணம் செய்கின்றனர். அதன்படி, மாநிலத்திலேயே அதிக கிராமங்களை கொண்ட, திருவண்ணாமலை மாவட்டத்தில் பெண்களின் வாழ்வில் மிகப்பெரும் முன்னேற்றத்தை இத்திட்டம் ஏற்படுத்தியிருக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 10 பேரூராட்சிகள் உள்ளன. பெரும்பான்மையாக 860 கிராம ஊராட்சிகள் உள்ளன. எனவே, கிராமப்புற பெண்கள் நகரங்களை நோக்கி அன்றாடம் பணிக்காக, கல்விக்காக வந்துசெல்ல வேண்டிய அவசியம் உள்ளது. அதனால், இத்திட்டத்தில் நேரடியாக பயன்பெறும் மாவட்டங்களில் திருவண்ணாமலை முக்கிய இடத்தை பெற்றிருக்கிறது.திருவண்ணாமலை மாவட்டத்தில், தமிழ்நாடு அரசின் கட்டணமில்லா பஸ் பயண திட்டத்தின் மூலம் இதுவரை 7 கோடியே 45 லட்ச்து 17 ஆயிரத்து 66 முறை பெண்கள் பயணம் செய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. மேலும், இத்திட்டத்தின் தேவை அறிந்து, பெண்கள் அதிகம் பயணிக்கும் வழித்தடங்களை கண்டறிந்து, கூடுதலாக நகர பேருந்துகளை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.சிறுமிகள் முதல் முதியவர்கள் வரை அனைத்துத்தரப்பு பெண்களும் நேரடியாக அன்றாடம் பயன்பெறும் மகத்தான இத்திட்டம், பெண்களின் வாழ்வில் மட்டுமின்றி, மாவட்டத்தின் வளர்ச்சிக்கும் மைல் கல்லாக அமைந்திருக்கிறது.

The post பெண்கள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்திய கட்டணமில்லா பஸ் பயண சேவை திட்டம்: திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை 7.45 கோடி முறை பெண்கள் பயணம் appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai district ,Thiruvannamalai ,Thiruvannamalai district ,Chief Minister ,
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்களவைத்...