×

சூழ்ந்த மழைநீரை வெளியேற்ற வலியுறுத்தி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

 

கரூர், மே 24: கரூர் ஈரோடு சாலையில் ஆண்டாங்கோயில் மேற்கு ஊராட்சி பகுதியில் மருத்துவர் நகர் உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில, கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக மருத்துவர் நகரைச் சுற்றி மழைநீர் சூழ்ந்து பல்வேறு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்ட 20க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று காலை கரூர் ஈரோடு சாலையில் அமர்ந்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தனர்.

இந்த போராட்டம் காரணமாக போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் போலீசார் விரைந்து வந்து, பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.மழைநீர் வடிகால் வசதி இல்லாத காரணத்தினால், மழைக்காலங்களில இதுபோன்ற நிகழவுகள் ஏற்படுகிறது. எனவே, இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என மக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

தொடர்ந்து, இந்த பிரச்னை குறித்து அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து, அனைவரும் அங்கிருந்து சென்றனர். கரூர் ஈரோடு சாலையில் நடைபெற்ற இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக இந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

The post சூழ்ந்த மழைநீரை வெளியேற்ற வலியுறுத்தி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : Karur ,Doctor ,Nagar ,Andangoil West Panchayat ,Karur Erode Road ,Dr. ,Dinakaran ,
× RELATED கரூர்- திருச்சிராப்பள்ளி ரயில்வே...