×

கடலூர் அரசு மருத்துவமனையில் சிறுவன் இயக்கிய ஆம்புலன்ஸ் மோதி 3 பெண்கள் படுகாயம்: வீடியோ வைரல்

கடலூர்: கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். உள் நோயாளிகளாகவும் பலர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு பலர் வந்தனர். அப்போது மருத்துவமனைக்கு நோயாளியை ஏற்றிக் கொண்டு தனியார் ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது.

ஆம்புலன்ஸை நிறுத்திவிட்டு நோயாளியை டிரைவர் மருத்துவமனைக்கு ஸ்டெச்சரில் அழைத்து சென்றார். அப்போது மற்றொரு ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்குள் நுழைய வழியில்லாமல் நின்றது. எனவே தனியார் ஆம்புலன்சில் உதவியாளராக வந்திருந்த 17 வயது சிறுவன், அதை இயக்கினான். அப்போது அங்கு நின்றிருந்த மூன்று பெண்கள் மீது பயங்கரமாக மோதியது. அவர்களை சிறிது தூரம் ஆம்புலன்ஸ் இழுத்து சென்றது.

பொதுமக்கள் கூச்சலிடவே சிறுவன் ஆம்புலன்ஸை நிறுத்தினான். ஆம்புலன்ஸ் மோதியதில் காயமடைந்த கடலூர் புருகீஸ்பேட்டையை சேர்ந்த உஷா (52), நெய்வேலியை சேர்ந்த கமலா (28), ஒறையூரை சேர்ந்த மாலதி (29) ஆகியோர் அதே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் அந்த சிறுவன் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஆம்புலன்ஸ் டிரைவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கடலூர் அரசு மருத்துவமனையில் சிறுவன் இயக்கிய ஆம்புலன்ஸ் மோதி 3 பெண்கள் படுகாயம்: வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Tags : Cuddalore government ,Cuddalore ,Government General Hospital ,Manjakuppam ,Cuddalore Government Hospital ,
× RELATED கடலூரில் சிறுவன் இயக்கிய ஆம்புலன்ஸ் மோதி விபத்து: 2 பெண்கள் காயம்