×

அரசு துறைகளில் லஞ்சம் வாங்குவோர் இனி தப்பிக்க முடியாது தமிழ்நாட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி வேட்டை தொடங்கியது

* இந்து சமய அறநிலையத்துறை நில அளவை ஆய்வாளருக்கு சொந்தமான இடங்களில் சோதனை

சென்னை: தமிழகம் முழுவதும் லஞ்சம், ஊழல் செய்யும் அரசு ஊழியர்களுக்கு எதிரான நடவடிக்கையை லஞ்ச ஒழிப்புத்துறை தொடங்கியுள்ளது. தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் வருவாய்துறை, மாநகராட்சி, நகராட்சி, போக்குவரத்து துறை, இந்து அறநிலையத்துறை, வனத்துறை என பல்வேறு துறைகளில் பொதுமக்களிடம் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது அளிக்கப்படும் புகார்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி அபய்குமார் சிங் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை மாவட்டம் வாரியாக அரசு அதிகாரிகள் மீது பொதுமக்கள் அளிக்கும் லஞ்ச புகார்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில், கடந்த மார்ச் 21ம் தேதி நிலம் பத்திரம் பதிவு செய்ய ஆவடி துணை சார் பதிவாளர் அமல்ராஜ் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக, கோட்டீஸ்வரன் என்பவர் அளித்த புகாரின்படி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் லஞ்ச பணம் வாங்கும் போது கையும் களவுமாக அவரை கைது செய்தனர்.

அதேபோல் சேலம் மாவட்டத்தில் புதிய ரேஷன் கார்டு வாங்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது செய்யப்பட்டார். நீலகிரி மாவட்டம் உதகமண்டலம் கம்பட்டி கிராமத்தை சேர்ந்த ஜெயகணேஷ் என்பவர் தனது விவசாய நிலத்தின் சிட்டாவில் பெயர் சேர்க்க தும்மன்ட்டி கிராம நிர்வாக அலவலகர் கற்பகம் என்பவரை அணுகி உள்ளார். அவர் சிட்டாவில் பெயர் சேர்க்க ரூ.6 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

அதை தொடர்ந்து ஜெயகணேஷ் லஞ்ச ஒழிப்புத்துறையில் அளித்த புகாரின்படி, ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கற்பகம் மற்றும் அவரது கார் டிரைவர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தர்மபுரி மாவட்டம் ஆரூர் தாலுகா அட்டியனூர் கிராமத்தை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் தனது நிலத்திற்கு உட்பிரிவு பட்டா வழங்க எச்.அகரம் கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசனை அணுகியுள்ளார்.

அப்போது அவர் தனது உதவியாளர் மூலம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டு ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கும் போது கடந்த ஏப்ரல் 12ம் தேதி கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். மேலும், கஞ்சிபுரம் மாவட்டத்தில் சுகாதாரத்துறை துணை இயக்குநராக இருந்த போது எழும்பூர் சுகாதார மற்றும் குடும்பநல பயிற்சி பள்ளி முதல்வர் பழனி வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.79 கோடி சொத்துகள் சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து கடந்த 14ம் தேதி அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தி, பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்தனர்.

சென்னை மாநகராட்சி 15 மண்லத்திற்கு உட்பட்ட பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்ற புகார் அளித்த பொன் தங்கம் என்பவரிடம் ரூ.3 லட்சம் லஞ்சம் வாங்கிய சிறப்பு தாசில்தார் சரோஜா மற்றும் 2 காவலர்கள் உள்பட 3 பேரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கையும் களவுமாக கடந்த 14ம் ேததி கைது செய்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகா ஜமீன் ஊத்துக்குளியை சேர்ந்த வழக்கறிஞர் நசிமா என்பவரிடம் சொத்து வரியில் பெயர் மாற்றம் செய்ய ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் பொள்ளாச்சி நகராட்சி வருவாய் அலுவலர் மற்றும் வரிவசூலர் யோகேந்திரனை லஞ்ச ஒழிப்புத்துறை கையும் களவுமாக கைது செய்தனர்.

அதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பட்டா மாறுதலுக்காக செல்வராஜ் என்பவர் கிராம நிர்வாக அலவலர் லஞ்சம் கேட்பதாக சமூக வலைத்தளங்களில் வீடியோவாக பதிவு செய்தார். அந்த வீடியோ பதிவு முதல்வர் கவனத்திற்கு சென்றது. அதுகுறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்த முதல்வர் உத்தரவிட்டார். அதைதொடர்ந்து பட்டா மாறுதல் கேட்ட செல்வராஜிடம் லஞ்சம் கேட்ட பரணிபுத்தூர் கிராம நிர்வாக அலுவலர் கிரண்ராஜ் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இதுபோல், தமிழ்நாடு முழுவதும் பொதுமக்களிடம் பட்டா மாறுதல், சான்று பதிவு செய்தல் உள்ளிட்டவைக்கு லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் மீது அளிக்கப்படும் புகார்கள் மீது உடனுக்குடன் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பொறிவைத்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதோடு இல்லாமல் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது ெசய்யப்படும் அரசு அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள் சேர்த்துள்ளார்களா என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், காஞ்சிபுரத்தை அடுத்த ஆற்பாக்கம் பகுதியில் வசித்து வரும் பாஸ்கர் என்பவர், தற்போது நீலகிரி மாவட்டம் ஊட்டில் இந்து சமய அறநிலையத்துறை நில அளவை ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர் காஞ்சிபுரம், நாகப்பட்டினம், ஆவடி உள்ளிட்ட இடங்களில் பணியாற்றிய போது, தனது வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள் சேர்த்ததாக புகார்கள் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு வந்தது. புகாரின் மீது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய போது, பாஸ்கர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி சொத்துகள் குவித்து இருந்து உறுதியானது.

அதைதொடர்ந்து காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று காலை பாஸ்கரின் சொந்த ஊரான ஆற்பாக்கம் மேட்டு காலனியில் உள்ள வீடு, ஊட்டியில் உள்ள அவரது அலுவலகம், வீடு மற்றும் காஞ்சிபுரம் ஆற்பாக்கத்தில் உள்ள அவரது மைத்துனர் மாண்பரசு வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல கோடி மதிப்புள்ள சொத்து பத்திரங்கள், வங்கி கணக்கு புத்தகங்கள் மற்றும் பினாமிகள் பெயரில் வாங்கி குவித்துள்ள சொத்து ஆவணங்கள் பல சிக்கியதாக கூறப்படுகிறது.

கைப்பற்றப்பட்ட சொத்து ஆவணங்கள் குறித்து இந்து சமய அறநிலைத்துறை நல அளவை ஆய்வாளர் பாஸ்கரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தல் முடிந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் முதல்வர் உத்தரவுப்படி அரசு துறைகளில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது அதிரடி சோதனை மற்றும் கைது நடவடிக்கையில் லஞ்ச ஒழிப்புத்துறை ஈடுபட்டு வருவதும் அரசு துறை அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post அரசு துறைகளில் லஞ்சம் வாங்குவோர் இனி தப்பிக்க முடியாது தமிழ்நாட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி வேட்டை தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Hindu Religious Endowment Department ,Chennai ,Revenue Department ,Municipal Corporation ,
× RELATED மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக...