×

1996க்கு பிறகு அதிகபட்சம் நடப்பு மக்களவை தேர்தலில் 8,360 வேட்பாளர்கள் போட்டி: சொத்து மதிப்பில் குண்டூர் வேட்பாளர் நம்பர்-1

புதுடெல்லி: கடந்த 1996க்குப் பிறகு அதிகபட்சமாக இம்முறை மக்களவை தேர்தலில் 8,360 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். இதில், குண்டூர் தொகுதி தெலுங்கு தேசம் வேட்பாளர் சந்திரசேகர் பெம்மாசானி சொத்து மதிப்பில் (ரூ.5,705 கோடி) முதலிடத்தில் உள்ளார். மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடந்து வரும் நிலையில், தேர்தல் ஆணையத்தின் புள்ளி விவரங்கள் அடிப்படையில் ஜனநாயக சீர்த்திருத்ததிற்கான தன்னார்வ அமைப்பு சில தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, மக்களவை தேர்தலில் இம்முறை 8,360 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில், கடந்த 13ம் தேதி 10 மாநிலங்களில் 96 தொகுதிகளில் நடந்த 4ம் கட்ட தேர்தலில் அதிகபட்சமாக 1,717 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். ஏப்ரல் 19ல் நடந்த முதல் கட்ட தேர்தலில் 1,625 வேட்பாளர்களும், ஏப்ரல் 26ல் 2ம் கட்ட தேர்தலில் 1,198 வேட்பாளர்களும், கடந்த 7ல் 3ம் கட்ட தேர்தலில் 1,352 வேட்பாளர்களும், கடந்த 20ம் தேதி நடந்த 5ம் கட்ட தேர்தலில் 695 வேட்பாளர்களும் களத்தில் இருந்தனர்.

அடுத்ததாக வரும் 25ம் தேதி நடக்கும் 6ம் கட்ட தேர்தலில் 869 பேரும், ஜூன் 1ம் தேதி நடக்கும் இறுதிகட்ட தேர்தலில் 904 பேரும் போட்டியிடுகின்றனர். இதன் மூலம் 1996க்குப் பிறகு அதிகபட்ச வேட்பாளர்கள் போட்டியிடும் தேர்தலாக உள்ளது. 1996ல் 13,952 பேர் போட்டியிட்டனர். 1952ல் நடந்த முதல் மக்களவை தேர்தலில் 1,874 வேட்பாளர்களும், 1971ல் 2,784 வேட்பாளர்களும், 1977ல் 2,439, 1980ல் 4,260, 1984-85ல் 5,492, 1989ல் 6,160, 1991-92ல் 8,668, 1996ல் 13,952 என ஒவ்வொரு தேர்தலுக்கும் வேட்பாளர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது.

1998ல் டெபாசிட் தொகை ரூ.500ல் இருந்து ரூ.10 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டதன் மூலம் வேட்பாளர்கள் எண்ணிக்கை சில தேர்தல்களில் குறைந்தாலும் 2009ல் 8,070ஐ தொட்டது. கடந்த 2019ல் 8,039 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.
அதே போல இம்முறை சொத்து மதிப்பில் ஆந்திராவின் குண்டூர் மக்களவை தொகுதியில் போட்டியிட்ட தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் சந்திரசேகர் பெம்மாசானி ரூ. 5,705 கோடி சொத்து மதிப்புடன் முதல் இடத்தில் உள்ளார். அண்டை மாநிலமான தெலங்கானாவில் உள்ள செவெல்லா தொகுதியில் போட்டியிட்ட பாஜ வேட்பாளர் கோண்டா விஸ்வேஷ்வர் ரெட்டியின் சொத்து மதிப்பு ரூ.4,568 கோடி. இதே போல, தெற்கு கோவாவின் பாஜ வேட்பாளர் பல்லவி ஸ்ரீனிவாஸ் டெம்போவின் சொத்து மதிப்பு ரூ.1,361 கோடி என்று பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

பெண்கள் சதவீதம் 10க்கும் குறைவே: 2024 மக்களவை தேர்தலில் மொத்த வேட்பாளர்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் 10 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. இம்முறை பெண் வேட்பாளர்களின் மொத்த எண்ணிக்கை 797 மட்டுமே. இது 9.5 சதவீதமாகும். இது ஆட்சி அதிகாரத்தில் உள்ள பாலின பாகுபாட்டை சுட்டிக் காட்டுகிறது.

The post 1996க்கு பிறகு அதிகபட்சம் நடப்பு மக்களவை தேர்தலில் 8,360 வேட்பாளர்கள் போட்டி: சொத்து மதிப்பில் குண்டூர் வேட்பாளர் நம்பர்-1 appeared first on Dinakaran.

Tags : Lok Sabha ,Guntur ,New Delhi ,Chandrasekhar Bemmasani ,Dinakaran ,
× RELATED ஜூன் 26ல் மக்களவை சபாநாயகர் தேர்தல்