×

மனித பிறவியே இல்லை என்பதா? மோடியைப்போல் சாமானியர் பேசினால் மனநல மருத்துவரிடம் அனுப்புவார்கள்: ராகுல்காந்தி சரமாரி பதிலடி

புதுடெல்லி: பிரதமர் மோடி தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில்,’என் தாயின் மரணத்துக்குப் பின்னர் பலவற்றை சிந்தித்து பார்க்கிறேன். நான் மனிதப்பிறவியே இல்லை என்பதை இப்போது உணர்கிறேன். அவற்றை நான் ஏற்றுக்கொள்ளவும் செய்கிறேன். அதனால் தான் நான் எப்போதும் சோர்வடையாமல் பணியாற்றி வருகிறேன். நான் கடவுளால் இந்த பூமிக்கு அனுப்பப்பட்டவன். நான் சோர்வடையாமல் பணியாற்றுவதற்கு கடவுள் கொடுத்த பரிசுதான் அந்த சக்தி. மற்றவர்கள் இதனை விமர்சிக்கலாம், அதற்கு எதிராக சொல்லலாம். ஆனால், நான் அவற்றை முழுமையாக நம்புகிறேன். என்னை இந்த பூமிக்கு அனுப்பியதே அந்த கடவுள்தான். ஏதோ ஒரு விஷயத்தை நடத்த வேண்டும் என்பதற்காக கடவுள் என்னை பூமிக்கு அனுப்பி வைத்துள்ளார். எனக்குள்ள ஆற்றல் சாதாரண மனிதர் பெற்றிருக்கும் ஆற்றல் கிடையாது. கடவுளால் மட்டுமே இத்தகைய ஆற்றலை கொடுக்க முடியும்’ என்று தெரிவித்தார்.

நேற்று டெல்லியில் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்ட ராகுல்காந்தி இந்த பேச்சுக்கு பதிலடி கொடுத்தார். அவர் கூறுகையில்,’ தன்னை கடவுள் அனுப்பியதாக கூறும் மோடி, 22 தொழிலதிபர்களுக்காக உழைக்கிறார். அம்பானி, அதானியின் விருப்பங்களை நிறைவேற்றவே மோடி அனைத்தையும் செய்கிறார். ஏழை மக்கள் சாலை, கல்வி, மருத்துவமனை வசதிகள் வேண்டுமென கோரிக்கை வைத்தால் பிரதமர் மோடி எதுவும் செய்வதில்லை.
மக்களிடம் தான் பயாலஜிக்கலாக பிறக்கவில்லை, என்னை பரமாத்மா அனுப்பியதாக கூறும் மோடி, கொரோனா பெருந்தொற்று காலத்தில் மருத்துவமனை வாசல்களில் மக்கள் உயிருக்கு போரடிக்கொண்டிருக்கும்போது அவர்களை டார்ச் லைட் அடிக்கச் சொன்னார்.

தட்டுகளை வைத்து ஒலி எழுப்ப சொன்னார். பரமாத்மாவால் அனுப்பப்பட்ட மோடி, அதானி மற்றும் அம்பானி கேட்பதை மட்டும் இரண்டு நிமிடங்களில் செய்துகொடுக்கிறார். ஆனால், ஏழை எளிய மக்கள் கேட்பதை கண்டுகொள்வதில்லை’ என்று விமர்சித்துள்ளார். மேலும் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில்,’பிரதமர் மோடி இப்படி பேசுவதுபோல் யாரேனும் ஒரு சாமானியர் பேசினால், அவரை நேராக மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்வார்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.

தேர்தல் கமிஷன் எச்சரிக்கையை மீறி பேசிய ராகுல்காந்தி: தேர்தல் பிரசாரத்தில் அரசியல் அமைப்பு சட்டம் ஒழிக்கப்படலாம் அல்லது மாற்றி அமைக்கப்படலாம் என்று பிரசாரம் செய்யக்கூடாது என்று காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருந்தது. இதை நேற்று ராகுல்காந்தி அலட்சியப்படுத்தி பேசினார். அவர் கூறுகையில், ‘பாஜ எப்போதுமே அரசியலமைப்பு சட்டத்தை கிழித்து எறிய விரும்புகிறார்கள். அவர்கள் ஒருபோதும் இந்திய அரசியலமைப்பையோ அல்லது இந்தியக் கொடியையோ ஏற்கவில்லை. இந்தத் தேர்தலில் அதை மாற்ற விரும்புவதை அவர்கள் இறுதியாக ஏற்றுக்கொண்டனர். இந்தத் தேர்தல் இந்திய அரசியலமைப்பைப் பாதுகாப்பதற்கான போராட்டம். இது வெறும் புத்தகம் அல்ல, நமது அரசியலமைப்புச் சட்டம். காந்தி, அம்பேத்கர், நேரு ஆகியோரின் ஆயிரக்கணக்கான ஆண்டுகால சித்தாந்த பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. பாஜ அரசியல் சட்டத்தை மாற்ற முயற்சித்தால், காங்கிரஸ் கட்சியையும், கோடிக்கணக்கான இந்திய மக்களையும் எதிர்கொள்ள நேரிடும்’ என்றார்.

The post மனித பிறவியே இல்லை என்பதா? மோடியைப்போல் சாமானியர் பேசினால் மனநல மருத்துவரிடம் அனுப்புவார்கள்: ராகுல்காந்தி சரமாரி பதிலடி appeared first on Dinakaran.

Tags : Modi ,Rahul Gandhi ,New Delhi ,
× RELATED இந்தியாவில் மின்னணு வாக்கு...