×

திற்பரப்பில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகளுக்கு தடை


குலசேகரம்: குமரியில் கனமழை காரணமாக திற்பரப்பு அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் இன்று 5வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவியின் நுழைவுவாயில் பகுதியில் கேட் பூட்டப்பட்டுள்ளதால் அருவியை பார்க்க கூட முடியாமல் சுற்றுலா பயணிகள் திரும்பி செல்கின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மலையோர பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அணைகள் வேகமாக நிரம்பி வழிகின்றன. மேலும் ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்தநிலையில் பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரிநீர் திறப்பு, கனமழை எதிரொலியாக கோதையாற்றிலும் வெள்ளம் அதிகளவில் செல்கிறது. ஏற்கனவே ஆறுகளுக்கு செல்லவேண்டாம் என்று பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே கோதையாற்றில் வெள்ள நீர் எதிரொலியாக திற்பரப்பு அருவியிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. கடந்த சில நாட்களாக திற்பரப்பு அருவிக்கு வந்து உல்லாச குளியல் போட்டு வந்த சுற்றுலா பயணிகளுக்கு கடந்த 19ம் தேதி முதல் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரையிலும் வெள்ளம் குறைந்தபாடில்லை. நாளுக்கு நாள் திற்பரப்பு அருவியில் தண்ணீரின் அளவு அதிகரித்து வருகிறது. இதனால் இன்றும் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் குளிக்க சென்றபோது சிறுவன் உயிரிழந்துவிட்டான். இதனால் போலீசார் உஷாரடைந்துள்ளனர். அருவிக்கு செல்லும் நுழைவுவாயில் பகுதியில் உள்ள கேட்டை பூட்டிவிட்டனர்.

இதன்மூலம் சுற்றுலா பயணிகள் அருவியை காண்பதற்கு கூட அனுமதி அளிக்கப்படவில்லை. மேலும் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விபரம் தெரியாமல் வரும் சுற்றுலா பயணிகளிடம் போலீசார் நிலைமையை எடுத்துக்கூறி திருப்பி அனுப்பி வருகின்றனர். அதேபோல் திற்பரப்பு அருவியில் குளிக்காமல் ஏமாந்துபோன சுற்றுலா பயணிகள் நைசாக அங்குள்ள வாகனம் நிறுத்தும் பகுதியில் இருந்து கோதையாற்றுக்கு செல்வார்கள் என்பதற்காக தற்காலிக தடுப்பு வேலியும் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் திற்பரப்பு அருவியின் மேல் தடாகத்தில் உள்ள தடுப்பணையில் தண்ணீர் நிரம்பி வழிகிறது. ஆனால் இந்த கண்கொள்ளா காட்சியை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க முடியாததால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

The post திற்பரப்பில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகளுக்கு தடை appeared first on Dinakaran.

Tags : Kumari ,Effaralu Aruvi ,ARUVI ,Dinakaran ,
× RELATED குமரி மாவட்டத்தில் உணவு, காய்கறி கழிவில் இருந்து எரிவாயு தயாரிப்பு