×

விசாகம், பவுர்ணமி, விடுமுறை தினத்தால் திருச்செந்தூரில் லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்: கடும் போக்குவரத்து நெரிசல்

திருச்செந்தூர்: விசாகம் – பவுர்ணமி – விடுமுறையால் லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்களால் திருச்செந்தூர் நகரமே திக்கி திணறி வருகிறது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தமிழ்க்கடவுள் முருகனின் ஜென்ம நட்சத்திர விழாவாக வைகாசி விசாகத் திருவிழா ஆண்டுதோறும் சிகர நிகழ்ச்சியாக கொண்டாடப்படுகிறது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கடந்த சில தினங்களாகவே தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வாகனங்களிலும், ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, வள்ளியூர் உள்ளிட்ட பகுதியிலிருந்து பாதயாத்திரை பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் நேற்று அதிகாலை முதல் மாலை வரை விசாகத் திருவிழாவுக்கு வந்திருந்த பக்தர்களால் திருச்செந்தூர் கோயிலில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

மேலும் நேற்று இரவு பவுர்ணமி என்பதால் வழக்கமாக கடற்கரையில் இரவு தங்கி அதிகாலையில் கடல் மற்றும் நாழிக்கிணறில் புனித நீராடி வழிபடும் பக்தர்கள் கூட்டமும் நேற்று மாலை முதல் திருச்செந்தூரில் குவிய தொடங்கியது. இதனால் நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை திருச்செந்தூரில் பல மணி நேரம் வாகன போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதுபோக விடுமுறை என்பதால் திருச்செந்தூர் கோயிலுக்கு நேற்று வந்திருந்த பக்தர்களும் இரவு விடுதியில் தங்கியிருந்தனர். இந்நிலையில் விசாகத்திற்காக வந்திருந்த பக்தர்கள், விடுமுறைக்காக தங்கி இருந்த பக்தர்கள் மற்றும் பவுர்ணமிக்காக படையெடுத்த பக்தர்கள் என லட்சக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் திருச்செந்தூரில் இன்று காலை சுவாமி தரிசனம் செய்ய குவிந்ததால் கோயில் வாசல் பகுதியே நடந்து செல்ல முடியாமல் கூட்ட மிகுதியால் திக்கி திணறியது.

மேலும் திருச்செந்தூர் நகரின் எல்லையில் இருந்து ரதவீதி வரை பக்தர்கள் வரிசை கட்டி நின்றதால் பெரும் நெரிசல் காணப்பட்டது. திருச்செந்தூர் கோயில் இன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது. அதிகாலை முதலிலே லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி இலவச பொது தரிசனம், ரூ.100 சிறப்பு கட்டண தரிசனம், மூத்த குடிமக்கள் வழியிலும் நீண்ட நேரம் காத்திருந்து பல மணி நேரம் கடந்த பிறகு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் கூட்ட மிகுதியால் கோயிலுக்கு உள்ளே செல்ல முடியாமல் வெளியிலேயே ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டு விட்டு ஊருக்கு திரும்பினர்.

எதிர்பாராத கூட்டம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த சில மாதங்களாக பௌர்ணமி வழிபாட்டிற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இரவு கடற்கரையில் தங்கி மறுநாள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்கின்றனர். அதேபோல நேற்று விசாகம் முடிந்த பிறகு பக்தர்கள் கூட்டம் குறைந்துவிடும் என எண்ணிய வேளையில் பவுர்ணமிக்காக வந்திருந்த பல மடங்கு கூட்டத்தை சமாளிக்க முடியாமல் கோயில் நிர்வாகமும், போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த முடியாமல் போலீசாரும் திணறினர்.

The post விசாகம், பவுர்ணமி, விடுமுறை தினத்தால் திருச்செந்தூரில் லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்: கடும் போக்குவரத்து நெரிசல் appeared first on Dinakaran.

Tags : Vishakam ,Pournami ,Trincomalee ,Trichendur ,Trichendoor ,Visakam ,Vaikasi Visakhat Festival ,Tamilkadaul ,Murugan ,Trichodur ,
× RELATED திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்...