×

முகப்பேர் பகுதியில் பல்லி கிடந்த மில்க் ஷேக் குடித்த பெண் மயக்கம்: உணவு பாதுகாப்புத்துறை ஆய்வு

அண்ணாநகர்: முகப்பேர் பகுதியில் பல்லி இறந்துகிடந்த மில்க் ஷேக் குடித்த பெண் மயக்கமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, குளிர்பானத்தின் மாதிரியை, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர்.

முகப்பேர் பகுதியை சேர்ந்த சுமதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது), நேற்று முன்தினம் வீட்டின் அருகே உள்ள சூப்பர் மார்க்கெட்டில் மில்க் ஷேக் உள்ளிட்ட உணவுப் பொருட்களை வாங்கி சென்றார். பின்னர், வீட்டிற்கு சென்று மில்க் ஷேக்கை குடித்தபோது சுவையில் மாற்றம் தெரிந்தது. மேலும், பேக்கெட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து சுமதி ஒரு பாத்திரத்தில் மில்க் ஷேக்கை ஊற்றி பார்த்தபோது, இறந்த நிலையில் பல்லி கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே, சூப்பர் மார்க்கெட் ஊழியர்களிடம் சென்று முறையிட்டார். ஆனால், சூப்பர் மார்க்கெட் நிர்வாகம் முறையான பதிலளிக்கவில்லை. இதனிடையே வீட்டிற்கு சென்ற சுமதி திடீரென்று மயங்கி விழுந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் சுமதியை மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்த்தனர். அங்கு சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வந்த சுமதி, மில்க் ஷேக்கில் பல்லி இறந்து கிடப்பதை வீடியோவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டார். மேலும், தரமற்ற மில்க் ஷேக் விற்பனை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று தெரிவித்திருந்தார்.

இதனை அறிந்த திருவள்ளூர் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ஜெகதீஷ் சந்திர போஸ், அந்த சூப்பர் மார்க்கெட்டில் ஆய்வு செய்ய வேண்டும், என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் கார்மேகம் தலைமையிலான குழுவினர் நேற்று சூப்பர் மார்க்கெட்டில் இருந்த குளிர் பானங்களை ஆய்வு செய்தனர். அப்போது, மில்க் ஷேக்கின் தரம் குறித்து கண்டறிய மாதிரிகளை சேகரித்து கொண்டு சென்றனர். அதேபோல், சுமதியிடம் இருந்த மில்க் ஷேக்கில் இருந்து உணவு மாதிரிகளை சேகரித்துச் சென்றனர்.

இதுகுறித்து, உணவுபாதுகாப்புதுறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘சூப்பர் மார்க்கெட்டில் வாங்கிய குளிர்பானத்தில் பல்லி இருந்தது போல் ஒரு வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, சூப்பர் மார்க்கெட்டில் ஆய்வு செய்யப்பட்டு மில்க் ஷேக்கில் இருந்த உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பல்லி விழுந்ததாக கூறப்படும் மில்க் ஷேக்கில் இருந்தும் உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாதிரிகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றனர்.

The post முகப்பேர் பகுதியில் பல்லி கிடந்த மில்க் ஷேக் குடித்த பெண் மயக்கம்: உணவு பாதுகாப்புத்துறை ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Food Safety Department ,Annanagar ,Mukappher ,Sumathi ,Dinakaran ,
× RELATED கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில்...