- வைகாசி விசாகத்ரி விழா கோலம்
- திருச்செந்தூர்
- சுவாமி தர்சன்
- திருச்செந்தூர்
- வைகாசி விசாகா விழா
- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்
- முருகன்
- திருச்செந்தூர் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலம்
*லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம்
திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக நடந்தது. இதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி கந்தனுக்கு அரோகரா… முருகனுக்கு அரோகரா… என பக்தி கோஷம் முழங்க சுவாமி தரிசனம் செய்தனர்.அறுபடை வீடுகளில் 2வது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா, வசந்த திருவிழாவாக கடந்த 13ம் தேதி தொடங்கியது.
விழா நாட்களில் தினமும் கோயிலில் உச்சிக்கால தீபாராதனைக்கு பிறகு சுவாமி ஜெயந்திநாதர் கோயிலில் இருந்து தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபம் சேர்ந்தார். அங்கு மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து வசந்த மண்டபத்தை சுவாமி 11 முறை வலம் வரும் வைபவமும் நடந்தது. அப்போது ஒவ்வொரு சுற்றிலும் வேதபாராயணம், தேவாரம், திருப்புகழ், பிரம்மதாளம், நந்தி மத்தளம், சங்கநாதம், பிள்ளைத்தமிழ், நாதசுரம், வேல்வகுப்பு, வீரவாள் வகு ப்பு, கப்பல் பாட்டு முதலானவை பாடப்பட்டன. பின்னர் சுவாமி தங்க ரதத்தில் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து கோயில் சேர்ந்தார்.
10ம் திருநாளான நேற்று (22ம் தேதி) வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலை 10 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் கோயிலில் இருந்து தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபம் சேர்ந்தார்.
அங்கு மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனை நடந்தது. மாலையில் வசந்த மண்டபத்தை சுவாமி 11 முறை வலம் வரும் வைபவமும், விழாவின் முக்கிய நிகழ்வான முனிக்குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் வைபவமும் நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனையாகி தங்கச்சப்பரத்தில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து கோயில் சேர்ந்தார்.
வைகாசி விசாகத்திருவிழாவை முன்னிட்டு நெல்லை, குமரி, தூத்துக்குடி, அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து ‘கந்தனுக்கு அரோகரா… முருகனுக்கு அரோகரா’ கோஷம் முழங்க பாதயாத்திரையாக கோயிலுக்கு வந்து தரிசனம் செய்தனர். நேற்று அதிகாலை முதலே லட்சக்கணக்கான பக்தர்கள், கடலில் புனித நீராடியதால் கடற்கரையில் அலைபோல் மக்கள் நிரம்பியிருந்தனர். பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தியும், காவடி எடுத்தும், அலகு குத்தியும், அங்கப்பிரதட்சணம் செய்தும் நேர்த்திக் கடன் செலுத்தினர்.
இதனால் கோயில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது. கூட்ட நெரிசல் காரணமாக கோயில் வளாகம், கடற்கரை உள்ளிட்ட இடங்களில் பக்தர்களே தேங்காய் உடைத்து பூஜை செய்து விட்டு புறப்பட்டனர். பல்வேறு இடங்களில் சமூக ஆர்வலர்கள் அன்னதானம் வழங்கினர். பக்தர்கள் வசதிக்காக அரசு சிறப்பு பேருந்துகளும், திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன. 5 இடங்களில் வாகன நிறுத்தம், குடிநீர், மருத்துவ வசதிகளும் செய்து தரப்பட்டிருந்தது. 2 இடங்களில் தற்காலிக பந்தல்கள், 2 இடங்களில் காவல் உதவி மையம், 3 இடங்களில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு இருந்தது. பாதுகாப்புக்காக கடற்கரையில் உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டும், சிசிடிவி கேமரா பொருத்தியும் திருக்கோயில் வளாகமே கண்காணிக்கப்பட்டது.
கூடுதலான போலீசார் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். குழந்தைகள் தொலைந்து போகாமல் இருக்க போலீசார் அவர்களின் கைகளில் டேக் கட்டினர். மேலும் கடலில் ஆழத்தில் சென்று குளிக்க வேண்டாம் எனவும், தொலைந்து போனவர்கள் குறித்து தகவலையும் புறக்காவல் நிலையத்தில் இருந்து போலீசார் ஒலிபெருக்கியில் தெரிவித்த வண்ணம் இருந்தனர்.
பாதுகாப்பு பணியில் மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் தலைமையில் திருச்செந்தூர் டிஎஸ்பி வசந்தராஜ் மற்றும் போலீசார், தீயணைப்பு படையினர், ஊர்க்காவல் படையினர் ஈடுபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், இணை ஆணையர் கார்த்திக், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில்முருகன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
விடிய விடிய திரண்ட மக்கள்
கடந்த சில நாட்களாக தென்மாவட்டங்கள் மட்டுமின்றி கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்ததால் பக்தர்கள் வருகை குறைவாக காணப்பட்டது. ஆனால் நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று காலை வரை விடிய விடிய பக்தர்கள் பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் வந்து குவிந்தனர்.
சிறப்பு பஸ்கள் இயக்கம்
விசாகத் திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்கள் பகத்சிங் பஸ் ஸ்டாண்டில் இருந்தும், ரயில் நிலையம் மற்றும் நெல்லை சாலையில் அமைக்கப்பட்ட தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்தும் கோயில் வாசல் வரை செல்வதற்கு வசதியாக திருச்செந்தூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை சார்பில் பஸ்களும், ஆர்டிஓ அலுவலகம் சார்பில் தனியார் பள்ளி வாகனங்களும் இயக்கப்பட்டன. ஆனால் கோயிலில் அதிகாலை 1 மணிக்கு நடை திறந்தவுடன் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து விட்டு கூட்டம் கூட்டமாக வெளியேறியதால் நாழிக்கிணறு பஸ் நிலையம் மற்றும் கோயில் வாசல் பகுதி நிரம்பி வழிந்தது. மேலும் பக்தர்கள் நடந்தே பகத்சிங் பேருந்து நிலையத்துக்கு சென்றதால் தற்காலிக பேருந்துகள் பயன்படாமலே போனது.
போக்குவரத்தை ஒழுங்குபடுத்திய போலீசார்
திருச்செந்தூரில் விடுமுறை நாட்களிலும், விழா காலங்களிலும் பக்தர்கள் வரும் வாகனங்கள் நகருக்குள்ளும், கோயில் வாசல் பகுதிகளிலும் ஆங்காங்கே நிறுத்தப்படுவதால் நடந்து செல்வதற்கும், அரசு பஸ்கள் வந்து செல்வதற்கும் இடையூறாக இருந்தது. ஆனால் இந்தாண்டு போலீசார் முன்னரே 5 இடங்களில் வாகன நிறுத்தங்கள் அமைத்து நெல்லை, தூத்துக்குடி மற்றும் குமரி உள்ளிட்ட வழித்தடங்களில் எல்லையிலேயே வாகனங்களை நிறுத்தியோ, அல்லது பக்தர்களை இறக்கி விட்ட பிறகு நிறுத்தங்களுக்கோ அனுப்பி வைத்தனர். இதனால் பக்தர்கள் நடந்து செல்வதற்கும், அரசு பஸ்கள் கோயில் வாசல் வரை வந்து செல்வதற்கும் எளிதாக இருந்தது.
The post கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா கோஷம் முழங்க திருச்செந்தூரில் வைகாசி விசாகத்திருவிழா கோலாகலம் appeared first on Dinakaran.