×
Saravana Stores

காரைக்குடியில் ரயில் மின்தட பராமரிப்பு பணிமனை துவக்கம்

திருச்சி – காரைக்குடி – மானாமதுரை ரயில் பிரிவில் மின்மய மின் தட ரயில் பாதையில் மின்சார இன்ஜின்கள் மூலம் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த மின்தடத்தில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும், திடீர் பழுதுகளை நீக்கவும் காரைக்குடியில் ஒரு பணிமனை ரூபாய் 1.5கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பணிமனை கடந்த திங்கட்கிழமையன்று துவக்கி வைக்கப்பட்டது.

இந்த பணிமனையில் ரயில் பாதையில் இயங்கும் வகையிலான பராமரிப்பு ரயில் பெட்டி ஒன்று தயார் நிலையில் உள்ளது. இந்த ரயில் பெட்டி மூலம் நடுவழியில் ஏற்படும் திடீர் மின்தடை பழுதுகளை எளிதாக சரி செய்ய முடியும். பராமரிப்பு பணிகளையும் மேற்கொள்ள முடியும். இதன் மூலம் ரயில்களை தங்கு தடை இன்றி குறித்த காலத்தில் இயக்க முடியும். இந்த பராமரிப்பு ரயில் பெட்டியை இருபுறமிருந்தும் இயக்கலாம். இந்த ரயில் பெட்டி சிறிய பராமரிப்பு பணிமனை போல அமைக்கப்பட்டுள்ளது.

இருபுறமும் ரயில் ஓட்டுனர் அறைகள், ஜெனரேட்டர், பராமரிப்பு தளவாட சாமான்கள் வைக்கும் பகுதி, நடுப்பகுதியில் மின்சார வயர்களை ஊழியர்கள் ஆய்வு செய்ய மேலே செல்லும் வகையிலான ஹைட்ராலிக் ஏணி, ஊழியர்கள் அமரும் பகுதி ஆகியவை உள்ளன. ஹைட்ராலிக் ஏணி சுழலும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. மின்சார தாக்குதல் ஏற்படாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஹைட்ராலிக் ஏணியில் உள்ளது. மதுரை கோட்டத்தில் 1124 கிமீ ரயில் பிரிவில் 1742 கிமீ மின்மய ரயில் பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதற்காக மணப்பாறை, திண்டுக்கல், பழனி, மதுரை, புதுக்கோட்டை, மானாமதுரை, விருதுநகர், கோவில்பட்டி, தூத்துக்குடி, திருநெல்வேலி, செங்கோட்டை, நாசரேத், ராஜபாளையம், புனலூர் மற்றும் காரைக்குடி ரயில் நிலையங்களில் 15 பணிமனைகள் அமைக்கப்பட்டுள்ளன. மணப்பாறை, திண்டுக்கல், பழனி, மதுரை, மானாமதுரை, விருதுநகர், கோவில்பட்டி, தூத்துக்குடி, திருநெல்வேலி, செங்கோட்டை, காரைக்குடி ஆகிய ரயில் நிலையங்களுக்கு பராமரிப்பு ரயில் பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. ராஜபாளையம் ரயில் நிலையத்திற்கு ஒரு பராமரிப்பு ரயில் பெட்டி விரைவில் வழங்கப்பட இருக்கிறது.

The post காரைக்குடியில் ரயில் மின்தட பராமரிப்பு பணிமனை துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Inauguration of railway track maintenance workshop ,Karaikudi ,Trichy – ,Karaikudi – ,Manamadurai ,Minmaya Electric Railway ,Dinakaran ,
× RELATED மழை காலங்களில் கால்நடைகளை கோமாரி நோய் தாக்கும் அபாயம்