×

வாக்கு எண்ணும் மையத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம்: கலெக்டர் தலைமையில் நடைபெற்றது

திருவள்ளூர், மே 23: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக கூட்டரங்கில் வாக்கு எண்ணும் மையத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கினார். மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ம் தேதி நடைபெற்றது. இதனையடுத்து, ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் பதிவான வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பெருமாள்பட்டு, தனியார் பள்ளி மையத்தில் சட்டமன்றத் தொகுதி வாரியாக பாதுகாப்பாக வைத்து ‘சீல்’ வைக்கப்பட்டது.

இதற்கு 3 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டதுடன், 200க்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்திலிருந்து 5 கி.மீ. தூரத்துக்கு ட்ரோன் கேமராக்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கைக்கு ஜூன் 4ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணும் பணிக்காக நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலர்கள் அன்றைய தினம் அதிகாலை 5 மணிக்கு வாக்கு எண்ணும் மையத்துக்கு வரவேண்டும். ஏற்கெனவே வாக்கு எண்ணும் மையத்துக்கு அதிகாரிகள், அரசியல் கட்சி முகவர்கள், வேட்பாளர்கள் செல்வதற்கு தனித்தனியாக தடுப்புகள் அமைத்து வழியேற்படுத்தப்பட்டு உள்ளது.

மேலும் அந்த வழியாக வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர், வாக்கு எண்ணும் உதவியாளர், இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரித்த நபர்கள், தேர்தல் பணியில் உள்ள அரசு ஊழியர்கள், வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் ஆகியோர் மட்டும் முழுமையான பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவர். இதில் முதலில் அஞ்சல் வாக்குகளை ஒரு மணி நேரத்தில் எண்ணி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பின்னர் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் சீல் வேட்பாளர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டு சென்று எண்ணப்படும். இதில் ஒரு சுற்று வாக்குகள் எண்ண 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணும் மையத்தில் கணினி சுழற்சி முறையில் வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கான சட்டமன்ற தொகுதி ஒதுக்கீடு செய்து, அவர்களுக்கு சம்பந்தப்பட்ட உதவி தேர்தல் அலுவலர், வட்டாட்சியர் ஆகியோர் மூலம் பணி நியமன ஆணை வழங்கப்படும். பணிநியமன ஆணைகளை பெற்றுக் கொண்ட மேற்பார்வையாளர், உதவியாளர் மற்றும் தேர்தல் பார்வையாளர் ஆகியோர் தங்களுக்கு ஒதுக்கீடு செய்துள்ள சட்டமன்ற தொகுதிக்குரிய வாக்கு எண்ணும் மையத்தில் குறிப்பிடப்பட்ட மேஜைக்கு செல்வது அவசியம்.

அதற்கு முன்னதாக வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மேஜையில், வாக்கு எண்ணும் பணிக்கான எழுது பொருட்கள், உபகரணங்கள் (பேனா, கால்குலேட்டர், எழுதும் அட்டை, காகிதம் இதர பொருள்கள்) உள்ளதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ராஜ்குமார், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் (கும்மிடிப்பூண்டி) கணேசன், (மாதவரம்) கண்ணன், (பூந்தமல்லி) கற்பகம், (திருவள்ளூர்) தனலட்சுமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சத்யபிரசாத், கலால் உதவி ஆணையர் ரங்கராஜன், வட்டாட்சியர் செ.வாசுதேவன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post வாக்கு எண்ணும் மையத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம்: கலெக்டர் தலைமையில் நடைபெற்றது appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,District ,Collectorate ,District Collector ,T. Prabhu Shankar ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED உலக குருதி கொடையாளர் தினம் அனுசரிப்பு: மாவட்ட கலெக்டர் பங்கேற்பு