×

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் முறைகேடாக ரூ.42 கோடி சொத்து சேர்த்த போலீஸ் உதவி ஆணையர் கைது: விஜிலென்ஸ் அதிரடி

திருமலை: ஐதராபாத்தில் முறைகேடாக ரூ.42 கோடி சொத்து சேர்த்த போலீஸ் உதவி ஆணையரை விஜிலென்ஸ் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் காவல்துறை உதவி ஆணையராக இருப்பவர் உமாமகேஷ்வர்ராவ். இவர் முறைகேடு செய்து பணம், சொத்து சேர்த்து வைத்திருப்பதாக விஜிலென்ஸ் போலீசாருக்கு புகார் சென்றது. அதன்பேரில் உமாமகேஷ்வர்ராவின் வீடு உள்ளிட்ட 7 இடங்களில் விஜிலென்ஸ் போலீசார் நேற்றுமுன்தினம் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.

இதில் பணம், நில ஆவணங்கள், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டது. காட்கேசர் பகுதியில் 5, விசாகப்பட்டினம் சோடவரத்தில் 7 நிலங்கள், ஐதராபாத் அசோக் நகரில் 4 அடுக்குமாடி குடியிருப்பில் பிளாட், சமீர்பேட்டையில் 1 நிலம், குகட்பள்ளியில் 1 நிலம், மல்காசீரில் 1 நிலம் என மொத்தம் 17 நிலங்கள் வாங்கியிருப்பதற்கான ஆவணங்கள் சிக்கின. இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.37 லட்சம் ரொக்கம், 87 சவரன் தங்க நகைகள், வெளிச்சந்தைகளில் முதலீடு என மொத்தம் ரூ.42 கோடி மதிப்புள்ள நகை, பணம் மற்றும் சொத்துக்கள் மற்றும் ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.

இதுதவிர 2 வங்கி லாக்கர்களும் அடையாளம் காணப்பட்டது. அவற்றை திறப்பதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர். நேற்றுமுன்தினம் அதிகாலை முதல் மாலை வரை என சுமார் 13 மணி நேரம் இந்த சோதனை நடந்துள்ளது. இதுதொடர்பாக உதவி கமிஷனர் உமாமகேஸ்வரராவை நேற்றுமுன்தினம் விஜிலென்ஸ் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரை நேற்று காலை ஐதராபாத் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சொத்து குவிப்பு வழக்கில் உதவி ஆணையரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்துள்ள சம்பவம் தெலங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் முறைகேடாக ரூ.42 கோடி சொத்து சேர்த்த போலீஸ் உதவி ஆணையர் கைது: விஜிலென்ஸ் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Assistant Commissioner ,Telangana state ,Hyderabad ,Thirumalai ,Umamakeshwarrao ,Police Assistant Commissioner ,Telangana State Hyderabad ,Commissioner ,
× RELATED முத்திரையில்லா தராசு பயன்பாடு 36 நிறுவனங்களுக்கு அபராதம்