×

பாஜ, காங்கிரஸ் மேலிட தலைவர்கள் சாதி, மொழி, மதம் அடிப்படையில் பிரச்சாரம் செய்வதை தவிருங்கள்: தேர்தல் ஆணையம் வலியுறுத்தல்

புதுடெல்லி: இந்தியாவின் சமூக-கலாச்சார சூழலை தேர்தலுக்காக பலி கொடுக்க முடியாது என கூறிய தேர்தல் ஆணையம், சாதி, மதம், மொழி, சமூக அடிப்படையில் பிரச்சாரம் செய்வதை தவிர்க்குமாறு பாஜ, காங்கிரஸ் கட்சிகளை கேட்டுக் கொண்டுள்ளது. மக்களவை தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக காங்கிரசும், ராகுலின் பிரசாரம் தொடர்பாக பாஜவும் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்திருந்தன. இதுதொடர்பாக இரு கட்சிகளின் தலைவர்களும் பதிலளிக்க தேர்தல் ஆணையம் ஒரு மாதத்திற்கு முன் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதற்கு பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும் பதில் அளித்திருந்தனர்.

இந்நிலையில், இரு தரப்பு விளக்கத்தையும் நிராகரித்த தேர்தல் ஆணையம் இரு கட்சிகளுக்கும் நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: பாஜ கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள், மதம் மற்றும் வகுப்புவாத எல்லையை தாண்டி பிரசாரம் செய்வதை கைவிடுமாறு கேட்டுக் கொள்கிறோம். சமூகத்தை பிளவுபடுத்தக் கூடிய பிரச்சாரங்களை பாஜ நிறுத்த வேண்டும். அதே போல காங்கிரஸ் நட்சத்திர பேச்சாளர்கள் பாதுகாப்பு படைகளை அரசியலுக்குள் இழுக்க வேண்டாம். ராணுவத்தின் சமூக-பொருளாதார கட்டமைப்பை பிளவுபடுத்தக் கூடிய கருத்துக்களை வெளியிட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். மேலும், அரசியல் சாசனம் ஒழிக்கப்படலாம் அல்லது விற்பனை செய்யப்படலாம் என்கிற தவறான கருத்தை பிரச்சாரம் செய்வதையும் கைவிட வேண்டும். இரு தேசிய கட்சித் தலைவர்களும் தங்கள் நட்சத்திரப் பிரச்சாரகர்களுக்கு அவர்களின் தேர்தல் உரையை திருத்திக் கொள்ளவும், அக்கறையுடன் செயல்படவும், ஒழுங்கை பேணவும் முறையான வலியுறுத்தல்களை வெளியிடுமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

The post பாஜ, காங்கிரஸ் மேலிட தலைவர்கள் சாதி, மொழி, மதம் அடிப்படையில் பிரச்சாரம் செய்வதை தவிருங்கள்: தேர்தல் ஆணையம் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : BJP ,Congress ,Election Commission ,New Delhi ,India ,Modi ,Lok Sabha ,
× RELATED இலக்கு வைத்த பாஜக மிகப்பெரிய சரிவை...