×

7 தொகுதிகளிலும் நாளை மறுநாள் ஓட்டுப்பதிவு டெல்லியில் ஆதிக்கம் செலுத்துவது யார்? பா.ஜவின் ஹாட்ரிக் கனவை தகர்க்குமா காங்கிரஸ்-ஆம்ஆத்மி கூட்டணி? முதல்வர் கெஜ்ரிவால் சிறையிலிருந்து வந்ததால் புதிய உற்சாகம்

தலைநகர் டெல்லியை கைப்பற்றுவது ஒவ்வொரு கட்சிகளுக்குமே ஒரு சவாலான ஒன்று. அதிலும் குறிப்பாக அதிகாரத்தில் இருக்கும் கட்சிக்கு டெல்லியின் வெற்றி முக்கியம். தலைநகர மக்கள் யாரை ஆதரிப்பார்கள், ஆட்சியில் இருப்பவர்களையா அல்லது எதிர்க்கட்சிகளையா என்பதை வைத்து நாட்டின் அரசியல் நிலைமை கணிக்கப்படும். 2013 வரை டெல்லியின் அதிகாரம் காங்கிரஸ் மற்றும் பா.ஜ வசம் மாறி மாறி இருந்து வந்தது. ஆனால் ஆம்ஆத்மி கட்சியை தொடங்கிய பிறகு நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. 2013 முதல் இப்போது வரை டெல்லியின் அதிகாரம் கெஜ்ரிவால் வசம் இருக்கிறது.

2014 முதல் ஒன்றிய அரசு பா.ஜ வசம் இருந்தும் தலைகீழாக நின்றும் டெல்லியின் அதிகாரத்தை கைப்பற்ற முடியவில்லை. தொடர்ந்து 15 ஆண்டுகளாக கைவசம் வைத்திருந்த டெல்லி மாநகராட்சியையும் ஆம்ஆத்மியிடம் இப்போது இழந்து தவிக்கிறது பா.ஜ. அடுத்தகட்டமாக மக்களவை தேர்தல் இதே வந்துவிட்டது. டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே 25ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தல் பா.ஜவுக்கு மேலும் ஒரு அக்னிபரீட்சை. ஏனெனில் 2014, 2019 மக்களவை தேர்தல்களில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் அபார வெற்றி பெற்றது பா.ஜ. அதனால் ஹாட்ரிக் வெற்றியை எதிர்பார்த்து களம் இறங்கியிருக்கிறது.

ஆனால் களம் எளிதாக இல்லை. காரணம், இதுவரை எதிரும், புதிருமாக இருந்த காங்கிரஸ் கட்சியும், ஆம்ஆத்மியும் இன்று இந்தியா கூட்டணியில் இணைந்து கைகோர்த்து தேர்தலை சந்திக்கின்றன. அதனால் வடகிழக்கு டெல்லி பா.ஜ எம்பி மனோஜ் திவாரியை தவிர மற்ற 6 தொகுதிகளுக்கும் புதிய முகத்தை அறிமுகப்படுத்தியது பா.ஜ. மறுபுறம் இந்தியா கூட்டணியில் ஆம்ஆத்மிக்கு 4, காங்கிரசுக்கு 3 என்று தொகுதி பங்கீடு முடிந்து உக்கிரமான தேர்தல் பிரசாரம் நடந்து வருகிறது. டெல்லியில் தேர்தல் வரும் போதெல்லாம் ஆம்ஆத்மி தலைவர் ஒருவர் உள்ளே சென்றுவிடுவார்.

அமலாக்கத்துறை, சிபிஐ, ஐடி மூலம் பா.ஜ செய்யும் வாடிக்கை இது. 2020 சட்டப்பேரவை தேர்தலில் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சத்யேந்தர் ெஜயின் கைது செய்யப்பட்டார். 2022 மாநகராட்சி தேர்தலை எதிர்கொள்ளும் தருணத்தில் டெல்லி துணைமுதல்வராக இருந்த சிசோடியா கைது செய்யப்பட்டார். அந்த வரிசையில் மக்களவை தேர்தலை எதிர்கொள்ளும் நேரத்தில் ஆம்ஆத்மி நிறுவனரும், டெல்லி முதல்வருமான கெஜ்ரிவாலை தூக்கி உள்ளே வைத்தது அமலாக்கத்துறை. ஆனால் சட்டப்போராட்டம் நடத்தி பிரசாரம் செய்வதற்கு வசதியாக ஜூன் 2ம் தேதி வரை கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி அதிர வைத்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.

திகார் சிறையில் இருந்து வெளியே வந்த கெஜ்ரிவால் எய்த முதல் அம்பு அமித்ஷாவை நோக்கித்தான். மோடிக்கு அடுத்த ஆண்டு செப்டம்பரில் 75 வயது ஆகப்போகிறது. பா.ஜ சட்டப்படி 75 வயதுக்கு மேல் பதவியில் இருக்க முடியாது. எனவே நீங்கள் ஓட்டுப்போட்டால் பிரதமராவது மோடி அல்ல. அமித்ஷா தான் என்று புதிய அஸ்திரத்தை ஏவ, ஆடிப்போய்விட்டது பா.ஜ கூடாரம். அத்வானி, முரளிமனோகர் ஜோஷி தொடங்கி முக்கிய தலைகளை, கட்சியில் ஆதிக்கம் செய்தவர்களை வீழ்த்த பயன்படுத்திய ஏவுகணை தற்போது மோடியை நோக்கி பாய்ந்ததால்தான் இந்த அதிர்ச்சி. அதைவிட முக்கியமாக அரசியல் சாணக்கியர் என்று பா.ஜவினர் தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் அமித்ஷாவை, மோடிக்கு எதிராக திசை திருப்பினால் என்ன ஆகும். கெஜ்ரிவாலின் பேச்சுக்கு விளக்கம் சொல்லியே பா.ஜவினர் தளர்ந்து விட்டனர்.

மோடிக்கு எதிராக சிண்டு முடிந்ததால் கோபத்தில் இருந்த அமித்ஷா, ‘ராகுல்காந்தி மற்றும் கெஜ்ரிவாலுக்கு இந்தியாவில் ஆதரவு இல்லை. அவர்களது ஆதரவாளர்கள் பாகிஸ்தானில் உள்ளனர்’ என்று கொளுத்தி போட்டார். பதிலுக்கு கெஜ்ரிவாலும், ‘எங்களை ஆதரித்து ஓட்டளித்த டெல்லி, பஞ்சாப் உள்பட நாடு முழுவதும் உள்ள மக்கள் பாகிஸ்தானியர்களா’ என்ற பதில் கேள்வியும் களத்தை அதிர வைத்துள்ளது. இந்த அரசியல் அனலுக்கு நாளை மறுநாள் டெல்லி மக்கள் பதில் அளிக்கும் வகையில் வாக்களிப்பார்கள். ஜூன் 4ம் தேதி ஓட்டு எண்ணும் போது டெல்லி யாருக்கு என்பது தெரிந்து விடும்.

நேருக்கு நேர் மோதல்
தொகுதிகள் பா.ஜ வேட்பாளர் இந்தியா கூட்டணி வேட்பாளர்
புதுடெல்லி பன்சூரி சுவராஜ் சோம்நாத்பார்தி(ஆம்ஆத்மி)
வடகிழக்கு டெல்லி மனோஜ்திவாரி கன்னையாகுமார்(காங்கிரஸ்)
சாந்தினிசவுக் பிரவீன் கந்தல்வால் ஜே.பி.அகர்வால்(காங்கிரஸ்)
வடமேற்கு டெல்லி யோகேந்திர சந்தோலியா உதித்ராஜ்(காங்கிரஸ்)
மேற்கு டெல்லி கமல்ஜித் ஷெராவத் மகாபால் மிஸ்ரா(ஆம்ஆத்மி)
தெற்குடெல்லி ராம்வீர்சிங் பிதூரி ஷகிராம் பெகல்வான்(ஆம்ஆத்மி)
கிழக்கு டெல்லி ஹர்ஷ்மல்கோத்ரா குல்தீப்குமார்(ஆம்ஆத்மி)

* 2009 முதல் 2019 வரை
டெல்லியில் 2009ல் நடந்த மக்களவை தேர்தலில் 7 தொகுதிகளிலும் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. அதன்பிறகு 2014,2019ல் நடந்த தேர்தல்களில் 7 தொகுதிகளிலும் பா.ஜ வெற்றி பெற்றது. 2024ல் வெற்றியாருக்கு என்பதில் கடும் மோதல் எழுந்துள்ளது.

2009 மக்களவை தேர்தல்
கட்சிகள் வெற்றி சதவீதம்
காங்கிரஸ் 7 57.11
பா.ஜ 0 35.23
பகுஜன்சமாஜ் 0 5.34
2014 மக்களவை தேர்தல்
பா.ஜ 7 46.40
ஆம்ஆத்மி 0 32.90
காங்கிரஸ் 0 15.10
2019 மக்களவை தேர்தல்
பா.ஜ 7 56.85
காங்கிரஸ் 0 22.63
ஆம்ஆத்மி 0 18.20

* சுவாதி மாலிவால் பிரச்னை தேர்தலில் எதிரொலிக்குமா?
டெல்லி மகளிர் ஆணைய தலைவராக இருந்தவர், தற்போது ஆம்ஆத்மி மாநிலங்களவை எம்பியாக இருப்பவர் சுவாதி மாலிவால். முதல்வர் கெஜ்ரிவாலுக்கு நெருக்கமானவர். திகார் சிறையில் இருந்து வந்த கெஜ்ரிவாலை சந்திக்க அவரது இல்லத்திற்கு சென்ற போது, கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் தாக்கியதாக கூறினார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாக பிபவ் குமார் கைது செய்யப்பட்டார். இந்த பிரச்னை இப்போது தேர்தல் களத்தில் எழுப்பப்பட்டுள்ளது. ஆம்ஆத்மி எம்பியாக இருக்கும் சுவாதி மாலிவால் தற்போது பா.ஜவின் பக்கம் சாய்ந்துவிட்டாரா என்ற கேள்வியும் அரசியல் களத்தில் எழுப்பப்பட்டுள்ளது.

* ஆம்ஆத்மிக்கு ஓட்டுபோடும் ராகுல்; காங்கிரசுக்கு வாக்களிக்கும் கெஜ்ரிவால்
டெல்லியில் காங்கிரஸ் கட்சியை சுருட்டி வளர்ந்ததுதான் ஆம்ஆத்மி. அந்த கட்சியில் உள்ள பெரும்பாலான தலைவர்கள், தொண்டர்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள். இதனால் தான் டெல்லி ஆட்சி அதிகாரத்தை எளிதாக காங்கிரசிடம் இருந்து ஆம்ஆத்மி கைப்பற்றியது. எனவே டெல்லியில் பா.ஜவை விடவும், ஆம்ஆத்மியைதான் காங்கிரஸ் கடுமையாக எதிர்த்து வந்தது. இந்த தேர்தலில் நிலைமை தலைகீழ். பா.ஜவை எதிர்க்க இருகட்சிகளும் தற்போது கூட்டணி வைத்துள்ளதால் முதல்வர் கெஜ்ரிவால் இந்த முறை காங்கிரசுக்கும், ராகுல்காந்தி ஆம்ஆத்மிக்கும் வாக்களிக்க உள்ளனர்.

* காங்கிரஸ் மாநில தலைவரையே தட்டித்தூக்கிய பா.ஜ
டெல்லியில் ஆம்ஆத்மிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கூட்டணி ஒப்பந்தம் செய்தவர் மாநில காங்கிரஸ் தலைவர் அரவிந்த்சிங் லவ்லி. திடீரென மாநில தலைவர் பதவியில் இருந்து விலகிய அவர் தற்போது பா.ஜ வசம் இணைந்து விட்டார்.

The post 7 தொகுதிகளிலும் நாளை மறுநாள் ஓட்டுப்பதிவு டெல்லியில் ஆதிக்கம் செலுத்துவது யார்? பா.ஜவின் ஹாட்ரிக் கனவை தகர்க்குமா காங்கிரஸ்-ஆம்ஆத்மி கூட்டணி? முதல்வர் கெஜ்ரிவால் சிறையிலிருந்து வந்ததால் புதிய உற்சாகம் appeared first on Dinakaran.

Tags : Delhi ,Congress-Aam Aadmi Party ,BJP ,CM ,Kejriwal ,Congress ,Aam Aadmi Party ,
× RELATED கேபினட் அமைச்சராக பொறுப்பு வகித்த...