×

பள்ளி நிர்வாகத்தினரிடம் பணம் வாங்கி ஸ்ரீமதி குறித்து இழிவாக பேசிய யூடியூபர் சங்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: தாய் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்

சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வளசரவாக்கம் அஷ்டலட்சுமி நகர் திருக்குறள் தெருவை சேர்ந்த செல்வி(41) நேற்று அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: எனது மகள் ஸ்ரீமதி கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள ஸ்ரீ சக்தி இன்டர்னேஷனல் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்தாள். கடந்த 12.7.2022 அன்று என் மகள் ஸ்ரீமதி, மர்மமான முறையில் பள்ளி நிர்வாகம் மற்றும் அதை சார்ந்தவர்களால் கூட்டுச்சதி மூலம் கொடூரமான முறையில் கொல்லப்பட்டாள். இது தொடர்பான விசாரணை இன்னும் நடந்து வருகிறது. எனது மகள் இறப்புக்கு நீதி கேட்டு சட்டப்போரட்டங்களை நடத்தி வருகிறேன். இந்த நிலையில் பல்வேறு யூடியூப் சேனல்களில் யூடியூபர் சங்கர் கலந்து கொண்டு, உள்நோக்கத்துடன் திட்டமிட்டு பொய்களை பரப்பி வந்துள்ளார். 17 வயது மகளை இழிவுபடுத்திபல பேட்டிகள் கொடுத்தார்.

சவுக்கு மீடியா யூடியூப் சேனலில் மீனவச் சமூகத்தைச் சார்ந்த ஒரு மாணவனைக் காதலிப்பதாகப் பொய்யாக சங்கர் பேசி வந்தார். காதலுக்காக நான் என் மகளைக் கடிந்து கொண்டதாகச் சொல்லி, எனக்குச் சாதிய நோக்கம் கற்பித்து பேசியது மிகுந்த மன உளைச்சல் ஏற்படுத்தியது. என்னைப் பற்றியும் என் குடும்பத்தைப் பற்றியும் மறைந்த என் 17 வயது மகளைப் பற்றியும் உண்மைக்குப் புறம்பான, ஆதாரமற்ற செய்திகளைப் பரப்பி இழிவுபடுத்தியும், கொச்சைப்படுத்தியும் சங்கர் பேசி வந்தார். இத்தனை நாட்கள் சங்கர் என்னை பற்றியும், எனது 17 வயது மகள் பற்றியும் பள்ளி நிர்வாகிகளான ரவிக்குமார் சாந்தி, சிவசங்கரன் ஆகியோரிடம் பணம் வாங்கிக் கொண்டு, திட்டமிட்டு பேசியிருப்பது அவரின் உதவியாளர் பிரதீப்பின் சமீபத்திய பேட்டி மூலம் தெரிய வந்துள்ளது.

சங்கர் ஸ்ரீ சக்தி இன்டர்னேஷனல் பள்ளி நிர்வாகத்திடம் பெரும் தொகை பெற்றுக் கொண்டு என் 17 வயது மகள் பற்றி, என்னைப் பற்றி, என் குடும்பத்தாரைப் பற்றி இழிவுபடுத்தியும் கொச்சைப்படுத்தியும் பேசுவதற்காகப் பணிக்கப்பட்டார் என்று பிரதீப் பேட்டியளித்தார். இந்த தகவலை நான் சமூக வலைத்தளம் மூலம் அறிந்து கொண்டேன். ஊடக நெறியைக் கெடுக்கும் வண்ணம் பள்ளி நிர்வாகிகள் ரவிக்குமார், சாந்தி, சிவசங்கரன் ஆகியோருடன் யூடியுபர் சங்கர் கூட்டுச் சதி செய்து, தெரிந்தே, அவதூறான செய்திகள் பரப்பி உள்ளார். இறந்து போன எனது மகள், எங்கள் குடும்பத்தினர் மீது சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து அவதூறு பரப்பி, இழிவு படுத்தி, மன உளைச்சலை ஏற்படுத்திய யூடியூபர் சங்கர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

The post பள்ளி நிர்வாகத்தினரிடம் பணம் வாங்கி ஸ்ரீமதி குறித்து இழிவாக பேசிய யூடியூபர் சங்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: தாய் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் appeared first on Dinakaran.

Tags : YouTuber ,Shankar ,Smt ,Thai Police Commissioner ,Chennai ,Tirukkural Street, Valasaravakkam, Ashtalakshmi Nagar ,Chennai Police Commissioner ,Smt. Kallakurichi ,Sri Shakti International School Hostel ,Kaniyamur ,
× RELATED யூடியூபர் டி.டி.எஃப். வாசனிடம்...