×

யாரை சிறையில் அடைக்கலாம் என்று யோசிக்கும் நீங்கள் பிரதமரா, போலீஸ் அதிகாரியா?: தேர்தல் பிரசாரத்தில் கெஜ்ரிவால் கேள்வி

புதுடெல்லி: யாரை சிறையில் அடைக்கலாம் என்று யோசிக்கும் நீங்கள், நாட்டின் பிரதமரா, போலீஸ் அதிகாரியா? என்று டெல்லி தேர்தல் பிரசாரத்தில் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பினார்.

தலைநகர் டெல்லியின் வடகிழக்கு டெல்லி காங்கிரஸ் வேட்பாளர் கன்ஹையா குமாரை ஆதரித்து, ஆம்ஆத்மி தலைவரும் டெல்லி முதல்வருமான கெஜ்ரிவால் பேசுகையில், ‘பாஜக எம்பியும், இந்த தொகுதி வேட்பாளருமான மனோஜ் திவாரியை தோற்கடிக்க வேண்டும். பிரதமராகிய நீங்கள், பெட்ரோல், காய்கறிகள், பால் விலையை குறைப்பது பற்றி யோசிக்க வேண்டும். ஆனால் பிரதமர் மோடி தினமும் என்ன யோசித்துக் கொண்டிருக்கிறார் என்றால், இன்று யாரை கைது செய்து சிறையில் அடைக்கலாம்? என்றே யோசிக்கிறார்.

அந்த வகையில் என்னை கைது செய்தார்கள். அதற்கு முன்னதாக மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் என்று யாரையும் சும்மா விடவில்லை. உங்களிடம் கேட்கிறேன், நீங்கள் பிரதமரா அல்லது போலீஸ் அதிகாரியா? நாட்டின் பிரதமராக இருப்பவர், இப்படியா இருக்க வேண்டும்? அதுபோன்ற பிரதமரை நாங்கள் விரும்பவில்லை. திகார் சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு, ஜாம்ஷெட்பூர், பஞ்சாப், லக்னோ ஆகிய நகரங்களுக்கு சென்று வந்தேன். பணவீக்கம், வேலையின்மை போன்ற காரணங்களால் மக்கள் பாஜக மற்றும் பிரதமர் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.

பெண்களுக்கான இலவச பேருந்து பயண திட்டம் குறித்து பேசிய மோடி, அந்த இலவச பயணத்தை வழங்கக் கூடாது என்று கூறியுள்ளார். நான் பதவியில் இருக்கும் வரை எந்த திட்டத்தையும் நிறுத்த விடமாட்டேன். விரைவில் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும்’ என்று பேசினார்.

The post யாரை சிறையில் அடைக்கலாம் என்று யோசிக்கும் நீங்கள் பிரதமரா, போலீஸ் அதிகாரியா?: தேர்தல் பிரசாரத்தில் கெஜ்ரிவால் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Kejriwal ,NEW DELHI ,Prime ,Delhi ,northeast Delhi ,Congress ,Kanhaiya Kumar ,Aamatmi ,
× RELATED கெஜ்ரிவாலின் ஜாமீனுக்கு இடைக்கால தடை