×

திருப்பூரில் களிமண் மற்றும் அட்டையை கொண்டு ராயல் என்பீல்ட் இருசக்கர வாகனத்தை தத்ரூபமாக வடிவமைத்த Nift Tea College of Knitwear Fashio மாணவி.

திருப்பூர் முதலி பாளையத்தில் உள்ள Nift Tea College of Knitwear Fashio-யில் ஏராளமான மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். அந்த கல்லூரியில் மூன்றாம் ஆண்டு காஸ்டியூம் டிசைனிங் அண்ட் பேஷன் துறை படிக்கும் மாணவி கமலி என்பவர் களிமண் மற்றும் அட்டையை கொண்டு தத்ரூபமாக ராயல் என்ஃபீல்டு இருசக்கர வாகனத்தை வடிவமைத்துள்ளார்.

அருகில் வந்து தொட்டுப் பார்த்தால் மட்டுமே இந்த இருசக்கர வாகனம் களிமண்ணால் செய்யப்பட்டது என்பது தெரியவரும். கமலி ஃபேஷன் டிசைனிங் படித்து வந்தாலும் இவருக்கு களிமண்ணை கொண்டு சிற்பங்கள் செய்வதிலே சிறுவயதில் இருந்தே ஆர்வம் அதிகமாக இருந்துள்ளது. இதன் காரணமாக பொன்மொழிகள் தேசத் தலைவர்களின் உருவப்படம் ஆகியவற்றை களிமண் கொண்டு வடிவமைத்துள்ளார்.

இவருக்கு நீண்ட நாட்களாகவே களிமண்ணை கொண்டு பெரிய அளவிலான பொருட்களை வடிவமைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே இருந்தது. இவரது எண்ணத்தை அறிந்த கல்லூரி நிர்வாகமும் இவருக்கு தேவையான உதவிகளை செய்தது அதன் மூலம் தற்பொழுது ராயல் என்ஃபீல்டு இருசக்கர வாகனத்தை வடிவமைத்துள்ளார்.

இதற்காக பைக் மெக்கானிக் கடையிலிருந்து ராயல் என்பீல்டின் சக்கரங்களை மட்டும் எடுத்து வந்து வைத்து மீதமுள்ள அனைத்து பாகங்களையும் களிமண்ணை கொண்டும் அட்டையை கொண்டும் செய்து முடித்துள்ளார். ராயல் என்ஃபீல்டு பைக்கின் ஒரு சிறிய பாகம் கூட விடுபடாமல் அனைத்தையும் களிமண்ணை கொண்டே செய்து முடித்துள்ளார்.

இதற்காக 95 கிலோ களிமண்ணை பயன்படுத்தியது மட்டுமின்றி வெறும் 157 நாட்களிலே இதனை செய்து முடித்துள்ளார். பயணம் மேற்கொள்வதில் அதிக ஆர்வம் கொண்ட கமலி, அதனை முன்மாதிரியாக வைத்து இந்த இரு சக்கர வாகனத்தை வடிவமைத்துள்ளார். மேலும் ஒரு பறவை எவ்வாறு தன் சிறகை விரித்து ஆனந்தமாய் பறக்குமோ அந்த வடிவத்திலேயே இதற்கு வர்ணமும் சேர்த்துள்ளார்.

குறிப்பாக இந்த இருசக்கர வாகனத்தின் ஒரிஜினாலிட்டி தவறவிடாமல் அதே சமயத்தில் தனது கற்பனையை கலந்தும் இந்த இரு சக்கர வாகனத்தை வடிவமைத்துள்ளார். தற்பொழுது ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தினர் மாணவி உருவாக்கியுள்ள இந்த இருசக்கர வாகனத்தை தங்களது ஷோரூமில் காட்சி பொருளாக வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மேலும் இந்த மாணவியின் திறமையை ஊக்குவிக்கும் விதத்தில் இவர் வடிவமைத்துள்ள இந்த இருசக்கர வாகனம் லிம்கா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்க்கு அனுப்பப்பட்டுள்ளது.

The post திருப்பூரில் களிமண் மற்றும் அட்டையை கொண்டு ராயல் என்பீல்ட் இருசக்கர வாகனத்தை தத்ரூபமாக வடிவமைத்த Nift Tea College of Knitwear Fashio மாணவி. appeared first on Dinakaran.

Tags : Nift Tea College of Knitwear Fashio ,Royal Enfield ,Tiruppur ,Nift Tea College of Knitwear Fashion ,Tiruppur Manti Camp ,Kamali ,Department of Costume Design and Fashion ,Dinakaran ,
× RELATED காங்கேயம் அருகே வீட்டின் மேல் விழும்...