நன்று குங்குமம் ஆன்மிகம்
சங்கு என்பது தெய் வீகம், தூய்மை, செல்வம், வீரம் ஆகியவற்றின் இருப்பிடமாகக் கருதப்படும் ஒரு பொருளாகும். இதனைப் பவித்திரமாகப் போற்றுவது பாரதத்தின் பழம் மரபாகும். திருமாலின் கைத்தலத்து விளங்குவதாலும், சங்க நிதி என்பது நவ நிதிகளுள் ஒன்றாகப் போற்றப்படுவதாலும் சங்கின் பெருமை அளவிடற்கரியதாகும்.
விருப்போடு வெண்சங்கம் ஊதாவூரும்
விதானமும் வெண் கொடியுமில்லா வூரும்
அருப்போடு மலர் பறித்திட்டுண்ணா வூரும்
அவையெல்லாம் ஊரல்ல அடவி காடே!
என்பது திருநாவுக்கரசரின் திருவாக்கு. கருப்பூரம் நாறுமோ எனத் தொடங்கும் நாச்சியார் திருமொழி பாசுரத்தில் மாலவனின் கரத்திலுள்ள சங்கு பற்றிய பல குறிப்புகள் உள்ளன. திருப்பாற்கடலில் பிறந்து, பஞ்சசனன் உடலில் வளர்ந்து, திருமாலின் கரத்தில் நிலைத்த அச்சங்கம் தீயவசுரர் அழிய முழங்கும் என்பதை அழகு தமிழில், கடலிற் பிறந்து கருதாது பஞ்சசனன் உடலில் வளர்ந்து போய் ஊழியான் கைத்தலத்திடரில் குடியேறித் தீயவசுரர் நடலைப் படமுழங்கும் தோற்றத்தாய் நற்சங்கே!
என்று பாடியதிலிருந்து அறிய முடிகிறது.‘‘சந்திர மண்டலம் போல் தாமோதரன் கையில் அந்தரம் ஒன்று இன்று ஏறி அவன் செவியில் மந்திரம் கொள்வாயே போலும் வலம்புரியே’’ என்பதாலும், ‘‘மதுசூதனன் வாயமுதம் பன்னாளும் உண்கின்றாய் பாஞ்சசன்னியமே’’ என்பதாலும், ‘‘சங்கரையா’’ என்று பெயரிட்டு அழைப்பதாலும், ‘‘வரிசங்கம் நின்றூத’’ என்ற குறிப்பாலும் திருமாலின் கரத்துத் திகழும் வெண்மை நிறமுடைய சங்கு வலம்புரிச் சங்கு என்பது அறியமுடிகிறது.
அதற்குப் பாஞ்சசன்னியம் என்ற சிறப்புப் பெயர் இருப்பதும், அதில் வரிகள் இருப்பதால் ‘‘வரிசங்கம்’’ என அழைக்கப்பட்டதையும் அறிகிறோம். திருக்கோயில்கள், அரண் மனைகள், மக்கள் வாழும் இல்லங்கள் ஆகியவற்றின் வாயில்கள், மங்கல வாயில்களாகத் திகழ வேண்டும் என்பதற்காக நிலைக்காலின் உத்தரத்தில் இரு யானைகளுடன் திருமகள் உருவமும், நிலைக்காலில் சங்கநிதி, பதுமநிதி எனும் இரு தெய்வ உருவங்களும் நிலைபெறுமாறு சிற்பங்களோடு அமைக்கப்படுவது பண்டுதொட்டு மேற்கொள்ளப்படும் மரபாகும். சங்கநிதியும், பதுமநிதியும் அமர்ந்த திருக்கோலத்தில் வலது கரத்தில் முறையே சங்கும், தாமரையும் ஏந்தியிருப்பதைச் சிற்பங்களில் காணலாம்.
பனிலம், வளை, நாகு, கரிமுகம், கம்பு, கோடு, கத்தி, வெள்ளை, இடம்புரி, வலம்புரி, சலஞ்சலம், தரா, வண்டு, வாரணம் என்ற பெயர்களால் தமிழில் சங்கினைக் குறிப்பிட்டனர். சமஸ்கிருதத்தில் கம்பு, கம்போஜம், அப்ஜம், ஜலஜம், அர்ணோபவம், பாவனத்வனி, அந்த, குடலம், மகாநாதம், ஜீவா, ஸ்வேதம், பூத, முகர, தீர்கநாதம், பகுநாதம், ஹரிப்பிரிய என்ற பெயர்களில் குறிப்பிட்டனர். இடம்புரி, வலம்புரி, சஞ்சலம், பாஞ்ச சன்னியம் என நான்கு வகைகளாகப் பிரித்தனர்.
இப்பி ஆயிரம் சூழ்ந்தது ஒரு இடம்புரி என்றும், இடம்புரி ஆயிரம் சூழ்ந்தது ஒரு வலம்புரி என்றும், வலம்புரி ஆயிரம் சூழ்ந்தது ஒரு சலஞ்சலம் என்றும், சலஞ்சலம் ஆயிரம் சூழ்ந்தது ஒரு பாஞ்சசன்னியம் என்றும் நிகண்டு நூல்கள் கூறுகின்றன. பொதுவாக இடம்புரிச் சங்கை சங்கம் என்றும், வலம்புரிச் சங்குகளை தட்சிணாவர்த்தம், சலஞ்சலம், பாஞ்சசன்னியம் என்றும் பகுப்பர். சங்க பரீக்ஷா, தட்சிணாவர்த்த சங்க கல்ப்பம் எனும் வடமொழி நூல்கள் சங்கு பற்றிய பல தகவல்களைக் கூறுகின்றன.
இடம்புரிச்சங்கு தூய வெண்மையாகவும், சில பழுப்பு நிறமுடையதாகவும் இருக்கும். இவ்வகைச் சங்கை அதன் சுரிகையின் உச்சி நமது மார்பை நோக்காமல் புறப்பக்கம் இருக்குமாறும், அதன் கூர்முனை நமது மார்பை நோக்குமாறும் கையில் பிடித்துக்கொண்டு பார்ப்போமாயின் அதன் வாய் நமது வலப்பக்கம் அமைந்து சுருளோடு திகழுமாயின் அது இடம்புரிச் சங்காகும். இவ்வகைச் சங்குகள் அதிக அளவில் கிடைக்கின்றன. இவை இறைவனது அபிஷேகங்களுக்கும், வீதி உலா, ஆராதனை போன்ற காலங்களில் ஊதுவதற்கும் பயன்படுகின்றன. இடம்புரிச் சங்கு அறிய கூறியது போன்று இச்சங்குகளை கையில் வைத்துக்கொண்டு பார்ப்போமாயின் அதன் வாய் நமக்கு இடப்பக்கம் திகழுமாயின் அது வலம்புரிச் சங்காகும். இவ்வகைச் சங்குகள், தூய வெண்மையாகவும், சில மஞ்சள் நிறம் உடையதாகவும் இருக்கும்.
சிலவற்றின் உட்புறம் இளஞ்சிவப்பு வண்ணமும் காணப்படும். வலம்புரிச் சங்கால் இறைவனுக்கு அபிஷேகம் செய்வது மிகச் சிறந்ததாகும். இச்சங்கு கொண்டு அபிஷேகம் செய்பவனுக்கு ஏழு பிறவி பாவங்களும் தொலையும் என்று வராகபுராணமும் ஆன்னிக ஆசாரதத்துவம் என்ற நூலும் கூறுகின்றன.
ஆயிரம் வலம்புரிச் சங்குகளுக்கு ஒப்புமையுடைய சலஞ்சலம் எனும் இவ்வலம்புரிச் சங்கானது தீயின் ஒளியை (வெளிர் சிவப்பு நிறம்) உடையதென்றும், அது அருகிலிருக்கும்போது இனிமை பயக்கக்கூடியதென்றும், அதன் உட்புறத்தே வெள்ளை நிறத்தே மூன்று கோடுகள் திகழும் என்றும், அவை மும்மூர்த்திகளைக் குறிப்பது என்றும் சங்க பரிக்ஷா எனும் நூல் கூறுகின்றது. சலஞ்சலம் எனும் சங்குகள் கொண்டு இறைவனுக்கு அபிஷேகம் செய்வது உத்தமமானது என்று கூறும் நூல்கள், அச்சங்குகளைப் பூஜிப்பதும் உயரியதாகக் குறிப்பிடுகின்றன. பூஜைப்பெட்டியிலும், கருவூலத்திலும், இல்லங்களில் செல்வம் வைக்கப்படும் பெட்டிகளிலும், இச்சங்கு களை வைத்துப் பவித்திரமாகப் பூஜித்தால் அங்கு செல்வம் கொழிக்கும் என்றும் கூறுகின்றன.
பாஞ்சசன்னியம் நாராயணனின் இடது திருக்கரத்தில் விளங்கும் உன்னத சங்காகும். வலம்புரியோடு, தூய வெண்மையாகவும், வரிகள் உடையதாகவும், சுடரொளியோடும் விளங்கும் சங்குமாகும். நமது நாட்டுச் சிற்பங்களும், ஓவியங்களும், செப்புத் திருமேனிகளும் பாஞ்சசன்னியத்தின் பேரழகைக் காட்டி நிற்கின்றன. பூசனைக்குரிய சங்குகளைப் பரிசுத்தமான இடத்தில் அதற்குரிய பெட்டகங்களில் வைத்துப் போற்ற வேண்டும்.
12 பாகம் தங்கமும், 16 பாகம் வெள்ளியும் கலந்து செய்யப்பட்ட தகட்டில் மேலே கிலிம் என்றும், பக்கவாட்டில் இடதுபுறம் ஜம் என்றும், வலது புறம் ஸ்ரீம் என்றும், கீழே ஹ்ரீம் என்றும் பீஜ அக்ஷ்ரங்களை எழுதி அத்தகட்டைப் பெட்டியில் வைத்து அதன்மேல் சங்கை வைத்துப் பாதுகாக்க வேண்டும் என நூல்கள் கூறுகின்றன.
பெரிய சங்குகள் ஆலயங்களிலும், நடுத்தர அளவு சங்குகள் இல்லங்களிலும் பூசைக்கு ஏற்றவை என்றும் கூறப்பெற்றுள்ளன. இறைவனுக்கு அபிஷேக நீர் வைக்கப் படும் சங்குகளைத் தரையில் வைத்தல் கூடாது. அவை வைப்பதற்கு ஏற்ற முக்காலி அல்லது தண்டு அல்லது பலகையின்மேல்தான் வைக்க வேண்டும். ஆயிரம் சங்குகள் கொண்டு பூஜை செய்யும் காலங்களில் நெல் போன்ற தானியங்களின் மேல்வைத்துதான் நீர் நிரப்ப வேண்டும். சங்குகளுக்கு தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களால் பூண்கட்டி பூஜிப்பது சிறந்ததாகும்.
சோழப் பேரரசர்களின் காலத்தில் திருக்கோயில்களுக்கு அளிக்கப்பட்ட சங்குகள் சில அண்மைக் காலத்தில் கண்டறியப்பெற்றன. அவற்றில் அக்காலத் தமிழ் எழுத்துகளில் அச்சங்குகளை அளித்தவர்கள் பெயர்கள் எழுதப்பெற்றுள்ளன. வட ஆர்க்காடு மாவட்டம், கழிஞ்சூர் சொர்ணபுரீஸ்வரர் கோயில் வளாகத்தில் கட்டடப் பணிகளுக்காகத் தோண்டும்போது சில சங்குகளும், செப்புத் திருமேனிகளும் கிடைத்தன.
அவற்றுள் ஒரு சங்கில் ‘‘ஸ்ரீகெஞ்சூர் இறையா நீகரமுடையார்க்கு நகருடையார் செய்ய கோவண் இட்ட சங்கு’’ என்ற பொறிப்பு காணப்படுகின்றது. சங்கில் குறிக்கப்பட்டுள்ள செய்யகோவன் என்பான் இராஜராஜன் காலத்து அலுவலன் ஒருவன் என்பது அத்திருக்கோயிலில் உள்ள கல்வெட்டுகள் வாயிலாக அறிய முடிகிறது. திருவாரூர் மாவட்டம், திருவிடைவாசலில் இரண்டு சங்குகள் கிடைத்தன.
ஒன்றில் 10ஆம் நூற்றாண்டு வட்டெழுத்துகளில் ‘‘நறுமகன் கொடுத்த சங்கு பொன் கட்டியது’’ என்றும், மற்றொன்றில் உமையம்மை என்பவள் காவலூர் உடைய பிடாரிக்குக் கொடுத்த சங்கு என்ற தகவலும் எழுதப்பெற்றுள்ளன. திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் உள்ள சங்கொன்றில் ‘‘திருச்சிராப்பள்ளி உடையார்’’ என்ற பொறிப்பு காணப்பெறுகின்றது. இவ்வாறு பல திருக்கோயில்களில் உள்ள சங்குகளில் எழுத்துப் பொறிப்புகள் காணப்பெறுகின்றன.
தொகுப்பு: முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்
The post வெண் சங்கம் appeared first on Dinakaran.