×

மரங்கள் மசோதாவை சட்டமாக நிறைவேற்ற வேண்டும் : உலக உயிர் பன்முகத் தன்மை தினத்தை முன்னிட்டு அன்புமணி கோரிக்கை!!

சென்னை : மரங்கள் மசோதாவை சட்டமாக நிறைவேற்ற வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக அளவில் உயிர் பன்முகத் தன்மையை காப்பதற்கான ஐ.நா. ஒப்பந்தம் கடந்த 1992 மே 22-ம் தேதி உருவாக்கப்பட்டது. இந்த நாள் (இன்று) உலக உயிர் பன்முகத் தன்மை தினமாக கடைபிடிக்கப்படுகிறது. பூமியில் எந்த உயிரும் தனித்து வாழ இயலாது. உயிரினங்களுக்கு இடையே உள்ள தொடர்பு ஒரு மாபெரும் வலைப் பின்னல் ஆகும். இதில் ஒரு கண்ணி அறுந்தால், மற்றதையும் பாதிக்கும். உயிர் பன்முகத் தன்மை எனும் இந்த வலைப் பின்னல்தான் சுவாசிக்கும் தூய காற்று, குடிக்கும் நீர், உணவு, உடை, இருப்பிடம் என மனிதர்களின் பெரும்பாலான அடிப்படை தேவைகளை அளிக்கிறது.

கனடாவில் 2022-ல் கூடிய 15-வது ஐ.நா. உயிர் பன்முகத் தன்மை மாநாட்டில் குன்மிங் – மான்ட்ரியல் உலகளாவிய உயிர் பன்முகத் தன்மை கட்டமைப்பு எனும் செயல்திட்டம் உருவாக்கப்பட்டது. இத்திட்டத்தை செயல்படுத்த அனைவரும் பங்களிக்க வேண்டும் என்பதே 2024-ம் ஆண்டின் உயிர் பன்முகத் தன்மை தினத்தின் முழக்கம்ஆகும்.உலகில் சீரழிந்த இயற்கை வள பரப்பளவில் குறைந்தபட்சம் 30 சதவீதத்தை 2030-ம் ஆண்டுக்குள் மீட்க வேண்டும். நகரங்களில் பசுமை பொதுவெளிகளை அதிகரிக்க வேண்டும் என்பது உட்பட 23 இலக்குகளை இந்த செயல் திட்டம் வலியுறுத்துகிறது. இதை இந்தியா உள்ளிட்ட 196 நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன.

ஏற்கெனவே பேருந்து நிலையம் இயங்கிவந்த கோயம்பேட்டில் வணிக வளாகம், திரையரங்கு, அடுக்குமாடி குடியிருப்பு, ஐ.டி.பார்க் போன்றவற்றை அமைக்காமல், மக்கள் பயன்படுத்தும் வகையில் பெரிய பசுமை பூங்காவை அமைக்க வேண்டும்.சென்னை மக்களை அச்சுறுத்தும் தொற்றாநோய் பேராபத்து, வெள்ள சேதம், நகர்ப்புற வெப்பத்தீவு, நீர் பற்றாக்குறை போன்ற பல சிக்கல்களுக்கு இப்பூங்கா தீர்வாக அமையும். மக்களின் நடைபயிற்சி, உடல் உழைப்புக்கு உதவும் வகையில், பாதுகாப்பானதாக, அனைவருக்குமானதாக, கட்டணம் இல்லாததாக, பசுமையானதாக இப்பூங்காவை அமைக்க வேண்டும்.

சென்னையில் உயிர் பன்முகத் தன்மையை காப்பாற்றவும், மக்களின் உடல்நலத்தை மேம்படுத்தவும் சென்னை உயிர் பன்முகத் தன்மை செயல் திட்டம், சென்னை பொதுவெளிகள் செயல் திட்டம் ஆகியவற்றை உருவாக்க வேண்டும்.மாநில பசுமை குழு ஏற்கெனவே தயாரித்துள்ள மரங்கள் மசோதாவை சட்டமாக நிறைவேற்ற வேண்டும். அதன் அடிப்படையில் மரங்கள் ஆணையத்தை உருவாக்க வேண்டும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post மரங்கள் மசோதாவை சட்டமாக நிறைவேற்ற வேண்டும் : உலக உயிர் பன்முகத் தன்மை தினத்தை முன்னிட்டு அன்புமணி கோரிக்கை!! appeared first on Dinakaran.

Tags : Anbumani ,World Biodiversity Day ,Chennai ,BAMA ,president ,Anbumani Ramadoss ,UN ,
× RELATED அனைத்து நியாயவிலைக் கடைகளிலும்...