×

பெங்களூருவில் இருந்து சென்னை வந்தவரிடம் ₹19.50 லட்சம், 114 கிராம் தங்கம் பறிமுதல்: வருமான வரித்துறை விசாரணை

பெரம்பூர், மே 22: பெங்களூருவில் இருந்து ரயிலில் சென்னை வந்தவரிடம் ₹19.50 லட்சம் ரொக்கம் மற்றும் 114 கிராம் தங்கத்தை பெரம்பூர் ரயில்வே போலீசார் பறிமுதல் செய்து வருமானவரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பெரம்பூர் இருப்புப் பாதை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பத்மநாபன் தலைமையில், எஸ்ஐ வேளாங்கண்ணி தலைமை காவலர் அரசகுமார் மற்றும் போலீசார் நேற்று ரயில் நிலையத்தின் 1வது நடைமேடையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி வந்த பெங்களூரு விரைவு ரயில் 1வது நடைமேடையில் வந்து நின்றது.

அப்போது, ரயிலில் இருந்து ஒருவர் பெரிய பையை தூக்கிக்கொண்டு வேகமாக நடந்து சென்றார். இதனால் சந்தேகமடைந்த ரயில்வே போலீசார் அவரை நிறுத்தி, பையை சோதனை செய்தபோது, கட்டுக்கட்டாக பணம், தங்கம் ஆகியவை இருந்தது. இதையடுத்து, ரயில்வே போலீசார் அந்த வாலிபரை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அதில், ராணிப்பேட்டை நவல்பூர் பகுதியைச் சேர்ந்த ரித்திக் (23) என்பதும், அப்பகுதியில் அடகு கடை நடத்தி வருவதும் தெரியவந்தது. மேலும், ₹19 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம் மற்றும் 114 கிராம் தங்கம் ஆகியவற்றை சவுகார்பேட்டையில் உள்ள நகை பட்டறைக்கு கொண்டு செல்ல ரயிலில் வந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு பெரம்பூர் ரயில்வே போலீசார் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த வருமானவரித்துறை அதிகாரிகள் பிரதீப் மற்றும் தாமோதரன் ஆகியோர் ரித்திக்கை வருமானவரித்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட ₹19.50 லட்சம் ரொக்கம் மற்றும் 114 கிராம் தங்கம் ஆகியவற்றுக்கு உரிய ஆவணங்கள் உள்ளதா, என வருமானவரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

The post பெங்களூருவில் இருந்து சென்னை வந்தவரிடம் ₹19.50 லட்சம், 114 கிராம் தங்கம் பறிமுதல்: வருமான வரித்துறை விசாரணை appeared first on Dinakaran.

Tags : Bengaluru ,Chennai ,Perambur ,Inspector ,Padmanapan ,Perambur Reserve Road Police Station… ,Dinakaran ,
× RELATED தேசிய நெடுஞ்சாலையில் கழன்று ஓடிய கன்டெய்னர் லாரியின் முன்பக்க டயர்கள்