×

8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பைனலுக்கு முன்னேறியது கொல்கத்தா: ஸ்டார்க் அபார பந்துவீச்சு, ஷ்ரேயாஸ், வெங்கடேஷ் அரை சதம்

அகமதாபாத்: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடனான குவாலிஃபயர் 1 ஆட்டத்தில், 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. மோடி ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ் முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா இணைந்து ஐதராபாத் இன்னிங்சை தொடங்கினர். ஹெட் ரன் ஏதும் எடுக்காமல் ஸ்டார்க் வேகத்தில் கிளீன் போல்டானார்.

அபிஷேக் 3 ரன் எடுத்து வைபவ் அரோரா பந்துவீச்சில் ரஸ்ஸல் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த நிதிஷ் குமார் ரெட்டி (9), ஷாபாஸ் அகமது (0) ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்ப, ஐதராபாத் அணி 5 ஓவரில் 39 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து திணறியது. இந்த நிலையில், ராகுல் திரிபாதி – ஹென்றிக் கிளாஸன் ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டது. இருவரும் 5வது விக்கெட்டுக்கு 62 ரன் சேர்த்தனர். கிளாஸன் 32 ரன் (21 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி வருண் சுழலில் ரிங்கு சிங் வசம் பிடிபட்டார்.

ராகுல் திரிபாதி 55 ரன் (35 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டானார். சன்விர் சிங் 0, அப்துல் சமத் (16), புவனேஷ்வர் குமார் (0) அடுத்தடுத்து ஆட்டமிழந்து அணிவகுக்க, ஐதராபாத் 16 ஓவரில் 126 ரன்னுக்கு 9 விக்கெட் இழந்து மீண்டும் சரிவை சந்தித்தது. கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய கேப்டன் கம்மின்ஸ் 30 ரன் (24 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ரஸ்ஸல் பந்துவீச்சில் குர்பாஸ் வசம் பிடிபட, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 19.3 ஓவரில் 159 ரன் குவித்து ஆல் அவுட்டானது.

விஜயகாந்த் வியாஸ்காந்த் 7 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்துவீச்சில் ஸ்டார்க் 3, வருண் 2, அரோரா, ஹர்ஷித், சுனில், ரஸ்ஸல், வருண் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 160 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் களமிறங்கியது. ரகுமானுல்லா குர்பாஸ், சுனில் நரைன் இணைந்து துரத்தலை தொடங்கினர். அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 3.1 ஓவரில் 44 ரன் சேர்த்தது.

குர்பாஸ் 23 ரன் (14 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி நடராஜன் வேகத்தில் வியாஸ்காந்த் வசம் பிடிபட்டார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 13.4 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 164 ரன் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று நேரடியாக பைனலுக்கு முன்னேறியது. ஷ்ரேயாஸ் ஐயர் அதிகபட்சமாக 58 ரன் (24 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசினார். வெங்கடேஷ் ஐயர் 51 ரன், குர்பாஸ் 23 ரன் எடுத்தனர்.

ஐதராபாத் பந்துவீச்சில் கம்மின்ஸ், நட்ராஜன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சென்னையில் மே 26ம் தேதி நடைபெற உள்ள பைனலில் களமிறங்கத் தகுதி பெற்ற நிலையில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நாளை மறுநாள் நடக்கும் குவாலிபயர்-2 ஆட்டத்தில் விளையாடும். இன்றைய எலிமினேட்டரில் (ராஜஸ்தான் – பெங்களூரு) வெற்றி பெறும் அணி, பைனல் வாய்ப்புக்காக சன்ரைசர்ஸ் சவாலை எதிர்கொள்ளும்.

The post 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பைனலுக்கு முன்னேறியது கொல்கத்தா: ஸ்டார்க் அபார பந்துவீச்சு, ஷ்ரேயாஸ், வெங்கடேஷ் அரை சதம் appeared first on Dinakaran.

Tags : Kolkata ,Starc ,Shreyas ,Venkatesh ,AHMEDABAD ,Kolkata Knight Riders ,Sunrisers Hyderabad ,Modi Stadium ,Dinakaran ,
× RELATED கொல்கத்தாவில் 21 மணி நேரம் விமான சேவை ரத்து