சென்னை: போதைப்பொருட்கள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக பணம் பரிமாற்றம் செய்ததாக ஜாபர் சாதிக் மனைவி அமீனா அளித்த வாக்குமூலத்தை தொடர்ந்து, அவரது சகோதரர் முகமது சலீமிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று 6 மணி நேரம் விசாரணை நடத்தி வாக்கு மூலம் பெற்றனர். வெளிநாடுகளுக்கு ஊட்டச்சத்து உணவு பொருட்கள் ஏற்றுமதி என்ற பெயரில் ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு போதைப்பொருள் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கை தேசிய போதை தடுப்பு பொருள் பிரிவினர் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், போதைப்பொருள் மூலம் வந்த வருமானத்தை சட்டவிரோதமாக பல தொழில்களில் முதலீடு செய்து இருந்தது தெரியவந்தது.
அதைதொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் ஜாபர் சாதிக் மீது சட்டவிரோத பண பரிமாற்றம் செய்ததாக தனியாக வழக்கு பதிவு செய்து கடந்த ஏப்ரல் 9ம் தேதி ஜாபர் சாதிக் மற்றும் அவரது நெருங்கிய நண்பரும், இயக்குநருமான அமீர், அப்துல் பாசித் புகாரி, சயத் இப்ராகிம், ரகு உள்ளிட்டோருக்கு சொந்தமான 20 இடங்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனையை தொடர்ந்து திகார் சிறையில் உள்ள ஜாபர் சாதிக்கிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த வாரம் 3 நாட்கள் விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து சென்னையில் உள்ள ஜாபர் சாதிக் மனைவி அமீனா மற்றும் அவரது சகோதரர் முகமது சலீம் ஆகியோருக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பினர்.
இந்த சம்மனை தொடர்ந்து ஜாபர் சாதிக் மனைவி அமீனா நேற்று முன்தினம் நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் 8 மணி நேரம் விசாரணை நடத்தி வாக்கு மூலம் பெற்றனர். பின்னர் ஏற்கனவே அளித்த சம்மன்படி ஜாபர் சாதிக் சகோதரர் முகமது சலீம் நேற்று காலை 11.20 மணிக்கு விசாரணை அதிகாரிகள் முன் ஆஜராகினார். அவரிடம் ஜாபர் சாதிக் மற்றும் அவரது மனைவி அமீனா ஆகியோர் அளித்த வாக்கு மூலத்தின்படி, போதைப்பொருட்கள் மூலம் கிடைத்த வருமானத்தை சட்டவிரோதமாக முதலீடு செய்யப்பட்ட விவரங்களை அவரிடம் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு முகமது சலீம் அளித்த பதிலை வாக்குமூலமாக அதிகாரிகள் பதிவு செய்துகொண்டனர். 6 மணி நேரம் நீடித்த இந்த விசாரணை மாலை 5.30 மணிக்கு முடிவடைந்தது. இந்த விசாரணையை தொடர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
The post போதைப்பொருள் மூலம் சட்டவிரோத பண பரிமாற்றம் ஜாபர் சாதிக் சகோதரரிடம் 6 மணி நேரம் விசாரணை: அமீனா வாக்குமூலத்தை தொடர்ந்து அமலாக்கத்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.