×

‘பூரி ஜெகன்நாதர் மோடியின் பக்தர்’: பாஜ வேட்பாளர் சர்ச்சை பேட்டி, எதிர்க்கட்சிகள் கண்டனம்

புவனேஷ்வர்: ஒடிசாவில் பூரி ஜெகன்நாதர் பிரதமர் மோடியின் பக்தர் என்று கூறி பாஜ வேட்பாளர் சம்பித் பத்ரா சர்ச்சையில் சிக்கியுள்ளார்.  ஒடிசா மாநிலத்தில் பூரி மக்களவை தொகுதியில் பாஜ வேட்பாளராக சம்பித் பத்ரா களமிறங்கியுள்ளார். இதனை தொடர்ந்து அவர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஊடகம் ஒன்றிற்கு சம்பித் பத்ரா பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், பூரி ஜெகன்நாதர் பிரதமர் மோடியின் பக்தர் என்று கூறியிருந்தார்.

பாஜ வேட்பாளரின் இந்த பேச்சு மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் அவருக்கு கண்டனம் வலுத்தது. சம்பித் பேசும் வீடியோகாட்சிகளை காங்கிரஸ் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளது. இதற்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில், இது கடவுளுக்கு செய்யும் மிகப்பெரிய அவமானம். கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளை காயப்படுத்தியுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, அதிகார போதையில் இருக்கும் பாஜவினர், கடவுளை கூட விட்டு வைக்க மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, பிரதமர் மோடி அவரை அரசராக கருதத் தொடங்கும்போது. அவரது அரசவையினர் அவரை கடவுளாக கருதத்தொடங்கியுள்ளனர். வீழ்ச்சி நெருங்கிவிட்டது என்பது தெளிவாகிறது. கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் உரிமையை பாஜவினருக்கு வழங்கியது யார்? இந்த அகங்காரமே அவர்களின் அழிவுக்கு காரணமாகிறது என்று எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தனது எக்ஸ் பதிவில், ஜெகன்நாதர் இந்த பிரபஞ்சத்தின் கடவுள். அவரை இன்னொரு மனிதனின் பக்தன் என்று அழைப்பது கடவுளை அவமதிக்கும் செயலாகும். இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது. இது உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான ஜெகன்நாதரின் பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளது மற்றும் இழிவு படுத்தியுள்ளது. ஒடிசா மக்களின் பெருமையை காயப்படுத்தியுள்ளீர்கள்.

இது ஒடிசா மக்களால் நீண்ட காலத்துக்கு நினைவுகூரப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பாஜவின் இந்த அறிக்கையை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அவர்கள் கடவுளுக்கு மேலானவர்கள் என்று தங்களை நினைக்கத் தொடங்கிவிட்டனர். இது ஆணவத்தின் உச்சம். மோடிஜீயின் பக்தர் என்று கடவுளை அழைப்பது கடவுளை அவமதிக்கும் செயலாகும் என்று எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

* 3 நாள் விரதம்
சர்ச்சையை தொடர்ந்து சம்பித் பத்ரா தனது எக்ஸ் பதிவில், பூரியில் பிரதமர் மோடியுடன் பேரணியில் பங்கேற்றேன். அதன்பின்னர் ஏராளமான ஊடகங்களுக்கு பேட்டி அளித்தேன். அனைத்து இடத்திலும் ஸ்ரீஜெகன்நாதரின் தீவிர பக்தர் மோடி என்று கூறினேன். தவறுதலாக ஒரு இடத்தில் மாற்றி கூறிவிட்டேன்.

இதனை ஒரு பிரச்னையாக்காதீர்கள். சில நேரங்களில் அனைவருக்கும் இதுபோன்று வார்த்தைகள் சறுக்கும். னது தவறுக்காக நான் ஜெகன்நாதரின் பாதங்களில் விழுந்து மன்னிப்பு கேட்கிறேன். இந்த தவறுக்கான பிராயசித்தமாக அடுத்த மூன்று நாட்கள் தொடர்ந்து விரதம் இருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

The post ‘பூரி ஜெகன்நாதர் மோடியின் பக்தர்’: பாஜ வேட்பாளர் சர்ச்சை பேட்டி, எதிர்க்கட்சிகள் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Puri Jagannath ,BJP ,Bhubaneswar ,Odisha ,Sambit Patra ,Modi ,Puri ,Lok Sabha ,Puri Jagannath Modi ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு...