நன்றி குங்குமம் டாக்டர்
தைராய்டு சுரப்பியும் கண் குறைபாடுகளும்!
கண் மருத்துவர் அகிலாண்ட பாரதி
ராகவன் சராசரியாக இரண்டு மாதத்திற்கு ஒருமுறை என்னிடம் தொடர் சிகிச்சைக்கு வருபவர். சில ஆண்டுகளுக்கு முன்பாக முதன்முறையாக அவர் என்னை சந்தித்தபோது நிறைய கவலையுடனும், கையில் அடங்காத மருத்துவ அறிக்கைகளுடனும் வந்தார். அவரைப் பார்த்த உடனேயே அவருக்குக் கண்ணில் என்ன பிரச்சனை, எதனால் அது வந்தது என்பதை ஒரு மருத்துவரால் கூறி விட முடியும். ஏனெனில் அவருடைய கண்கள் பிறருக்கு இல்லாத வகையில் பெரிய அளவில் இருந்தன.
அவருக்கு இருந்தது தைராய்டு பிரச்சினையால் ஏற்பட்ட ஒரு விதமான கண் குறைபாடு (Thyroid ophthalmopathy). இது பெரும்பாலும் ரத்தத்தில் தைராய்டு அதிகமாக இருப்பவர்களைப் பாதிக்கும். தைராய்டு என்பது நமது கழுத்து பகுதியில் அமைந்திருக்கும் ஒரு சுரப்பி என்பது அனைவருக்கும் தெரியும். சிலருக்கு அதிலிருந்து சுரக்கும் தைராக்ஸின் என்ற ஹார்மோனின் அளவு குறைவாக இருக்கும். இத்தகைய நோயாளிகளை hypothyroid என்போம்.
சிலருக்கு தைராய்டு சுரப்பியிலிருந்து சுரக்கும் தைராக்ஸின் ஹார்மோனின் அளவு மிக அதிகமாக இருக்கும். இவர்களை hyperthyroid என்று கூறுவோம். தைராய்டு சுரப்பு அதிகமாக நிகழ்வதற்கு பல காரணங்கள் உண்டு. அதில் மிக முக்கியமான காரணம் Graves disease என்று அழைக்கப்படும் ஒருவித தன்னுடல் தாக்கு நோய் (autoimmune disease). இதில் தைராய்டு சுரப்பியின் செல்களுக்கு எதிராக நம் உடலில் இருந்தே எதிர்ப்பு அணுக்கள் உருவாகும். கண்ணைச் சுற்றியுள்ள Orbit பகுதியின் தசைகள் மற்றும் கொழுப்புப் பகுதியில் தைராய்டு சுரப்பியை ஒத்த சில செல்கள் இருப்பதால், தைராய்டு சுரப்பியைத் தாக்கும் இந்த நோய் சிலருக்குக் கண் பகுதியையும் தாக்கக் கூடும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
கிரேவ்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட 25 முதல் 50 சதவீதம் நோயாளிகளுக்கு கண் பாதிப்பு வரக்கூடும். தைராய்டு பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து சராசரியாக ஒன்று முதல் ஒன்றரை வருடங்களில் கண் தொடர்பான அறிகுறிகளுடன் வருவதைப் பார்க்க முடியும். பாதிக்கப்பட்ட நோயாளிகளின் கண் மற்றும் தைராய்டு பகுதியில் இருக்கும் சில வகை புரதப் பொருட்களுக்கு எதிர்வினையாக, உடலில் காயம் ஏற்பட்டால் அதை சீர்ப்படுத்துவதற்காக அங்கு வரக்கூடிய ஒரு வகை வெள்ளை அணுக்களான reactive T lymphocytes அந்த இடங்களில் வந்து குவிகின்றன.
இந்த வெள்ளை அணுக்கள் fibroblasts என்ற செல்களைத் தூண்டி நார் போன்ற திசுக்களை வளர்ப்பதற்கு உதவுகின்றன. இதனால் கண்ணைச் சுற்றியுள்ள பகுதிகளில் திசுக்கள் படிந்து, கண்ணை உருட்டக்கூடிய தசைகளை பயன்படுத்துவதில் சிக்கல் நிகழலாம். இவர்களுக்கு முதல் அறிகுறியாக மேல் இமை சற்றே தூக்கி இருப்பது போன்ற தோற்றம் தெரியும். அதிக திசு வளர்ச்சியுடன் சேர்த்து மேல் இமையைத் திறப்பதற்கு உதவியாக இருக்கும் Muller muscle என்ற தசை தைராய்டு ஹார்மோனுக்கு அதிக அளவில் எதிர்வினை ஆற்றுவதும் ஒரு காரணமாக இருக்கக்கூடும்.
மருத்துவர் நோயாளியின் முன் தன் விரலை குறுக்குவாக்கில் நீட்டி மேலிருந்து கீழே பார்க்கச் செய்வார். அப்படிச் செய்கையில் இமைகள் கீழே இறங்குவதில் தாமதம் ஏற்படும். கண்பந்தின் அளவை ஒரு சிறிய ஸ்கேல் போன்ற கருவியை வைத்து அளந்து பார்த்தால் கண்கள் குறிப்பிடத் தகுந்த அளவில் முன்னால் வந்திருப்பதும் (proptosis) தெரியும்.
இதனால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு கண்ணை ஆங்காங்கே சுழற்றும்போது வலி ஏற்படும். மெல்ல மெல்ல கண்கள் பெரிய அளவாக மாறுவதால் கண்களின் உலர்தன்மை அதிகரிக்கும். சரியாகக் கண்ணை மூட முடியாத காரணத்தால் கண்களில் சிவப்பு, வெள்ளை விழிகளில் வீக்கம் போன்றவையும் ஏற்படலாம். இரவில் தூங்கும் பொழுது இவர்களில் சிலருக்கு இரண்டு இமைகளுக்கும் இடையே குறிப்பிடத் தகுந்த இடைவெளி இருக்கக்கூடும். அந்த இடைவெளியின் வழியே கருவிழி வெளியே தெரிவதால் வரும் அதீத உலர்வுத் தன்மை
காரணமாகக் கருவிழியில் புண்கள் ஏற்படலாம் (exposure keratitis).
ராகவனுக்கும் க்ரேவ்ஸ் நோய் தான். தைராய்டு சுரப்பி தைராக்சினை அதிகமாக சுரந்ததால் அவர் உடல் ரீதியாக மிகவும் சிரமப்பட்டு இருக்கிறார். தீவிர சிகிச்சைக்குப் பின் ஓரளவு மீண்டு வந்தவர், இப்பொழுது கண்களில் பிரச்சனை என்றவுடன் பயந்துவிட்டார். அவருக்கு இந்த நோயின் தன்மையை விளக்கி இதனால் பார்வைக்கு ஒன்றும் நேரடி பாதிப்பு இல்லை என்பதை விளக்கினேன். ‘‘ஏற்கனவே நீங்கள் தைராய்டு பிரச்சனைக்காக சரியான சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். எனவே இனிமேல் கண் பிரச்சனை மோசமாகாது. ஏற்கனவே பெரிதாகி விட்ட கண்ணை உடனடியாக பழைய நிலைக்கு கொண்டு வருவது கடினம். படிப்படியாக சிகிச்சையளிக்க வேண்டும். ஆனால் நோயினால் ஏற்படும் பக்க விளைவுகளை சிறிய வழிமுறைகள் மூலம் தவிர்க்கலாம்” என்று கூறினேன்.
அவருக்கு ஈரப்பதத்திற்கான carboxy methyl cellulose வகை சொட்டு மருந்துகளை வழங்கினேன். இரவில் தூங்கும் பொழுதும், பகலில் ஒரு மணி நேரம் ஓய்வெடுக்கும் பொழுதும் ஒரு சிறிய பிளாஸ்டரைக் கொண்டு கண்ணின் இரண்டு இமைகளும் ஒட்டியிருக்குமாறு மூடிக்கொள்ள அறிவுறுத்தினேன். கூடவே வெளியில் செல்லும் பொழுது குளிர் கண்ணாடிகள் பயன்படுத்தவும், கண்ணுக்கு நேரே ஏசி, மின்விசிறி போன்ற சாதனங்களை பயன்படுத்தாமல் இருக்கவும் அறிவுறுத்தினேன். அவருடைய மருத்துவ அறிக்கைகளைப் பார்த்ததில் ஏற்கனவே தைராய்டு பிரச்சனைக்காகக் குறைந்த அளவிலான ஸ்டீராய்டு மருந்துகளை எடுத்துக் கொண்டிருந்தார்.
ஒரு சில பரிசோதனைகளை மேற்கொண்டு அவருக்கு சில வாரங்களுக்கு Iv pulse therapy என்ற ஸ்டீராய்டு சிகிச்சையை அளித்தோம். நான்கு வாரங்களுக்குப் பின் ஓரளவு இயல்பு நிலைக்கு மீண்டிருந்தார். அவருக்கு ஏற்பட்டிருந்தது தன்னுடல் தாக்கு நோய் என்பதால் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும் வகையில் ஸ்டீராய்டு மருந்து தேவைப்பட்டது. சிலருக்கு ஸ்டீராய்டு மருந்தை விட வேகமாக செயலாற்றக் கூடிய Cyclosporine, Azathioprine போன்ற மருந்துகளும் தேவைப்படக் கூடும். உள்ளிட்ட எதிர்பாற்றலை மாறுப்படுத்தும் சில சிகிச்சைகளும் பலனுள்ளதாய்
இருக்கும்.
இந்தப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 5% பேருக்கு மருந்து, மாத்திரைகள் மட்டுமே குணமளிக்காது. சிலருக்கு அறுவை சிகிச்சையும் செய்ய வேண்டியது இருக்கும். கண்ணின் பின்புறம் சுற்றிலும் படிந்துவிட்ட தசைகளை நீக்குவது இந்த அறுவை சிகிச்சையின் ஒரு பகுதி (orbital decompression). இது கொஞ்சம் கடினமான அறுவை சிகிச்சைதான், ஆனாலும் பெருமளவு பலன் தரக்கூடியது. அறுவை சிகிச்சை செய்த பின்னரும் தைராய்டு அளவைக் கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். அகச்சுரப்பியல் சிறப்பு நிபுணரின் அறிவுரையைக் கேட்டு சிகிச்சையைத் தொடர வேண்டும். கண் பரிசோதனையையும் தவறாமல் செய்ய வேண்டும்.
வெகு சில நோயாளிகளுக்கு இதே போன்ற பிரச்சனை தைராய்டு குறைபாட்டிலும் வரும். ‘‘அது எப்படி டாக்டர்? தைராய்டு அதிகமாக இருந்தால் தானே கண்டு பெருசா இருக்கும்னு சொல்றாங்க?” என்றார் மருத்துவத்துறையில் பணிபுரியும் ஒரு நோயாளி. Hashimoto’s thyroiditis போன்ற சில தன்னுடல் தாக்கு நோய்கள் hypothyroidism நிலையை ஏற்படுத்தக்கூடியது. அதனால் அதிலும் அரிதாக இப்படிப்பட்ட நிகழ்வுகள் ஏற்படலாம் என்று கூறினேன்.
இன்னொரு நண்பர். இவர் அயல்நாட்டில் பணிபுரிகிறார். இவருக்கு தைராய்டு குறைபாடு தான் இருக்கிறது. ஒருமுறை என்னை அலைபேசியில் அழைத்தவர், ”எனக்கு தைராய்டு குறைபாடு முன்னாலேயே இருக்கு. இப்ப எனக்கு கண்ணுல Severe dry eye அப்படின்னு சொல்லி ஆயுசுக்கும் சொட்டு மருந்து போடணும்னு சொல்லி இருக்காங்க. போடலாமா? ஒன்னும் செய்யாதா?\” என்று கேட்டார்.
தைராய்டு குறைபாட்டால் வரும் இன்னொரு பிரச்சனை கண்களின் உலர்வுத் தன்மை (dry eye). கண்களில் மட்டுமல்லாது உடல் முழுவதிலும், குறிப்பாக கண்களில் எங்கு வேண்டுமானாலும் இந்த உலர்வுத் தன்மை ஏற்படலாம். குறிப்பாக மூட்டுக்கு கீழே கால்களின் முன் பகுதியில் டிபியா எலும்புக்கு முன்புறம் அதிக உலர்வுத் தன்மை தென்படும். ஒரு நோயாளியின் முகத்தைப் பார்த்து தைராய்டு குறைபாடு இருக்கிறதா என்று சந்தேகம் வந்தால் மருத்துவர் அடுத்ததாகக் கால்களைத் தான் பரிசோதனை விரும்புவார். சிலருக்கு முன்னங்கால் பகுதியில் கண்களில் ஏற்படுவது போலவே சில திசுக்கள் படியக் கூடும் (pretibial myxedema). இத்தகைய நோயாளிகளுக்கு உலர்வுத் தன்மைக்கான மருந்துகளை உடலெங்கிலும் பயன்படுத்துவது நல்லது.
கண்களில் இயற்கையாகச் சுரக்கும் கண்ணீர்ப் படலத்தின் அளவு தைராய்டு குறைபாட்டில் வெகுவாகக் குறைந்துவிடும். அதனால் அவர்களுக்கு நமது கண்ணீரின் தன்மையை ஒத்திருக்கக்கூடிய carboxy methyl cellulose என்ற மருந்துகளைத் தொடர்ந்து பயன்படுத்தலாம். மருத்துவர் அறிவுரையுடன் ஆயுள் முழுமைக்குமே கூட பயன்படுத்தலாம். தைராய்டு குறைபாட்டால் கண்களில் ஏற்படும் பிரச்சனைகளை அணுகுவதில் முக்கியமான விஷயம், தைராய்டு அளவை அகச்சுரப்பியல் நிபுணரிடம் கலந்து ஆலோசித்து சீராக வைப்பது தான். கண்களுக்கென கூறப்படும் பாதுகாப்பு வழிமுறைகளை விடாமல் பின்பற்றுவது இந்த நோயிலிருந்து பின் விளைவுகளில் இருந்து தப்பிக்க பேருதவியாக இருக்கும்!
The post கண்ணைக் கட்டிக் கொள்ளாதே! appeared first on Dinakaran.