×

வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!

நன்றி குங்குமம் டாக்டர்

கோடை வெயிலால் உடலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். அந்த பாதிப்புகள் உடலை தாக்காமல் இருக்க, உடலில் நோய் எதிர்ப்புசக்தி அதிகமாக வேண்டும். அந்த நோய் எதிர்ப்புச் சக்தி வேப்பம்பூவில் இருக்கிறது. கிருமி நாசினியான வேப்பம்பூவில் ஏராளமான நன்மைகள் உள்ளன.பித்தம் அதிகமானால் உண்டாகும் பெருமூச்சு, நாவறட்சி, சுவையின்மை, வாந்தி, நாள்பட்ட வாத நோய்கள், ஏப்பம், வயிற்றுபுழு இவற்றை நீக்கும் சக்தி வேப்பம்பூவிற்கு உள்ளது.

தோல் நோய்களுக்கும், வயிற்று உபாதைகளுக்கும் வேப்பம்பூ நிவாரணமாக நல்ல குணத்தை தருகிறது. வேப்பம்பூவை உலர்த்தி பொடித்து, அதை ஒரு தேக்கரண்டி தேனில் கலந்து, சாப்பிட வாய்க் கசப்பு, வாந்தி மற்றும் மயக்கம் நீங்கும். வேப்பம் பூவை காயவைத்து 1 தேக்கரண்டி அளவு எடுத்து சூடான நீரில் கலந்து குடித்தால் வாதத்தால் உண்டாகும் உடல் வலி நீங்கும். கபம் குறையும்.

புற்று நோய்களை உருவாக்கக்கூடிய செல்களை அழிக்கும் தன்மை வேப்பம்பூவுக்கு உள்ளதாக ஆய்வுகள் சொல்கின்றன. வயிற்றில் வாயு அதிகரிப்பை உண்டாக்கும் வயிற்றுவலிக்கு 2 தேக்கரண்டி பூவை நெய்யில் வறுத்து பொடி செய்து, சூடான கஞ்சியில் கலந்து சாப்பிட வேண்டும்.தலையில் உண்டாகும் பொடுகு பிரச்னைக்கு, 50 மி.லி. தேங்காய் எண்ணெய்யில் 1 கைப்பிடி அளவு வேப்பம்பூவை இட்டு காய்ச்சி பூவுடன் தலைக்கு தேய்த்து குளிக்க, பொடுகு பிரச்னை சரியாகும்.குழந்தைகளுக்கு பூவை நெய்யில் வதக்கி பொடி செய்து சிறிது வெல்லம் சேர்த்து கொடுப்பது நல்லது. இதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

நம் சமையலில் வேப்பம்பூவிற்கு இடம் உண்டு. வேப்பம் பூ பச்சடி, வேப்பம் பூ ரசம் என விதவிதமான சமையலோடு, ஆரோக்கியமும் மேம்படும். கோடை காலத்தில் ஏற்படும் வியர்க்குரு, உடல் எரிச்சல், வயிற்று உபாதைகள் என அனைத்துவித நோய்களையும் ஆற்றி, எதிர்ப்புச்சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.அனைத்து உடல் சூடு சம்பந்தமான நோய்களுக்கு இது சிறந்த மருந்தாக
உள்ளது.

தொகுப்பு: மகாலட்சுமி சுப்ரமணியன்

The post வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்! appeared first on Dinakaran.

Tags : Kumkum ,
× RELATED உணவுப் பொருட்களில் பூச்சி வராமல் இருக்க வேண்டுமா?