×

கனமழை எதிரொலி படகு இல்ல சாலையில் மழைநீரில் சிக்கிய கார்

*சுற்றுலா பயணிகளை தீயணைப்பு துறையினர் மீட்டனர்

ஊட்டி : கனமழை காரணமாக ஊட்டி படகு இல்ல சாலையில், மலை ரயில் பாலத்திற்கு அடியில் தேங்கியிருந்த மழைநீரில் சிக்கி கொண்ட காரில் இருந்த சுற்றுலா பயணிகளை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.குமரி கடல் பகுதி மற்றும் தமிழக கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் கன மழை பெய்து வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் முழுவதும் கன மழை பெய்து வருகிறது. இதனால், கடுமையான குளிர் நிலவி வருகிறது. நேற்று காலை மந்தமான காலநிலை நிலவி வந்த நிலையில் மதியம் 12 மணிக்கு பின்னர் சாரல் மழையாக துவங்கி போக போக கனமழை கொட்டியது. இடை விடாமல் பெய்த மழை காரணமாக ஊட்டி நகரில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது.

குறிப்பாக, ஊட்டி படகு இல்ல சாலையில், மலை ரயில் பாலத்திற்கு அடியில் மழை நீர் தேங்கியது. அப்போது, அவ்வழியாக படகு இல்லம் செல்வதற்காக சென்ற கர்நாடக மாநில சுற்றுலா பயணி கார் ரயில்வே பாலத்திற்கு அடியில் தேங்கியிருந்த மழைநீரில் சிக்கி கொண்டது. இதனால், அதில் பயணித்தவர்கள் வெளியேற முடியாமல் தவித்தனர். உடனடியாக ஊட்டி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் காரில் சிக்கியிருந்த சுற்றுலா பயணிகளை மீட்டு தூக்கி சென்று இறக்கி விட்டனர். பின்னர் தேங்கியிருந்த மழைநீரில் சிக்கி இருந்த காரை கயிறு கட்டி இழுத்து மேடான பகுதிக்கு கொண்டு வந்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்து வரும் நிலையில் சுற்றுலா பயணிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டும். அறிமுகமில்லாத சாலைகளில் பயணிக்க வேண்டாம். மழைநீர் தேங்கியிருந்தாலோ, மண் சரிவு ஏற்பட்டிருந்தாலோ அவ்வழியாக எக்காரணத்தை கொண்டும் பயணிக்க வேண்டாம் என தீயணைப்பு துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் நேற்று காலை முதல் மாலை வரை பெய்த மழையளவு மி.மீட்டரில் (4 மணி நிலவரப்படி): ஊட்டி 25.4, நடுவட்டம் 17, கல்லட்டி 7, கிளன்மார்கன் 22, குந்தா 6, அவலாஞ்சி 7, எமரால்டு, அப்பர்பவானி 12, குன்னூர் 15, கோத்தகிரி 24, கீழ் கோத்தகிரி 43, கோடநாடு 32, கூடலூர் 6 என மொத்தம் 326.40 மி.மீ., மழை பதிவானது.

The post கனமழை எதிரொலி படகு இல்ல சாலையில் மழைநீரில் சிக்கிய கார் appeared first on Dinakaran.

Tags : Ooty ,fire department ,Ooty Boat House Road ,
× RELATED பூங்கா சாலையோர கால்வாயில்...