×

தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்து அனுமதி பெற்றால்தான் பள்ளி வாகனங்களை இயக்க வேண்டும்

*திருவாரூரில் நேரில் ஆய்வு செய்த கலெக்டர் சாருஸ்ரீ உத்தரவு

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் இருந்து வரும் பள்ளி வாகனங்கள் தகுதி குறித்து கலெக்டர் சாரு ஆய்வு மேற்கொண்டார்.திருவாரூர் மாவட்ட ஆயுதபடை மைதானத்தில் பள்ளி வாகனங்களில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய அரசு வழிகாட்டு நெறிமுறைகள் சரியாக பின்பற்றப்பட்டுள்ளனவா என கலெக்டர் சாருஸ்ரீ நேற்று ஆய்வுமேற்கொண்டார்.

பின்னர் அவர் கூறியதாவது, பள்ளி வாகனங்களில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி, திருவாரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள திருவாரூர், மன்னார்குடி மற்றும் திருத்துறைப்பூண்டி ஆகிய பகுதிகளுக்குட்பட்ட 70 பள்ளிகளைச் சேர்ந்த பள்ளி 313 வாகனங்கள் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பள்ளி வாகனங்களில் கேமிரா பொருத்தப்பட்டுள்ளதா, அவசர கால வெளியேறும் வசதி, குழந்தைகள் எளிதாக வாகனத்தில் ஏற தாழ்வான படிக்கட்டுகள், பள்ளி வாகனம் என்ற அறிவிப்பு, வேககட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதா, முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவி வைக்கப்பட்டுள்ளதா, பிரதிபலிப்பான் வில்லை ஒட்டப்பட்டுள்ளதா என்று அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பள்ளி வாகனங்களில் ரீவர்ஸ் கேமிரா உள்ளிட்ட ஏதேனும் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டால் அதை உடனடியாக பள்ளி நிர்வாக கவனத்திற்கு வாகனஒட்டுனர்கள் எழுத்து பூர்வமாக தெரியப்படுத்த வேண்டும். தொழில்நுட்பகோளாறுகளை சரிசெய்து அனுமதிப்பெற்ற பின்னே பள்ளி வாகனங்கள் இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வாகன ஓட்டுனர்கள் அவரவர் பள்ளிக்குரிய சீருடைகள் அணிவதை தடுத்து காக்கி சீருடை மட்டுமே அணிய உத்தரவிட்டப்பட்டுள்ளது.

மேலும், பள்ளி குழந்தைகளை அழைத்து செல்லும் போது முழு கவனத்துடன் ஒட்டுனர்கள் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும் இக்கல்வியாண்டு விபத்தில்லா ஆண்டாக அமைய வேண்டும் என்பது அனைவரது விருப்பமாகும். எனவே அதற்கேற்ப வாகனங்களை ஓட்டுனர்கள் இயக்கிட வேண்டும் என்பதுடன் பள்ளி உரிமையாளர்கள் வாகனங்களை உரிய தகுதி சான்றுடன் இயக்கிட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.ஆய்வின் போது எஸ்.பி ஜெயக்குமார், ஆர்.டி.ஒ சங்கீதா, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் புகழேந்தி, வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிசாமி, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கருப்பண்ணன், அசோக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்து அனுமதி பெற்றால்தான் பள்ளி வாகனங்களை இயக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Collector ,Charusri ,Tiruvarur Tiruvarur ,Saru ,Tiruvarur district ,Tiruvarur ,Dinakaran ,
× RELATED வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும்...