×

அச்சத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் ஒரத்தூர்-தேவங்குடி சாலை நடுவே திடீர் விரிசல்

*உடனே சீரமைக்க வலியுறுத்தல்

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அருகே ஒரத்தூர் – மதுராந்தகநல்லூர், தேவங்குடி வழித்தடத்தில் உள்ள நெடுஞ்சாலையில் திடீரென விரிசல் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். உடனே சாலையை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே சிதம்பரம் வட்டம் கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஒரத்தூர் – மதுராந்தகநல்லூர், தேவங்குடி இணைப்பு நெடுஞ்சாலையின் வழியாக 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தினமும் சென்று வருகின்றனர். புதுப்பேட்டை, பூந்தோட்டம், வாக்கூர், மதுராந்தகநல்லூர், பண்ணப்பட்டு, இடையன்பால்சொரி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சியில் வசிக்கும் மக்கள் செல்லும் இந்த சாலையில் ஒரத்தூர் – மதுராந்தகநல்லூர், தேவங்குடி இணைப்பு நெடுஞ்சாலையில் சுமார் 25 மீட்டர் தூரத்திற்கு சாலை நடுவே திடீரென விரிசல் விட்டு கொண்டே வருகின்றது.

தற்போது கோடை மழையில் மழைநீர் உள்வாங்கி விரிசல் அதிகரித்து வருகின்றது. இதுபோன்ற சூழலில் பள்ளி வாகனங்கள், விவசாய பணிகளுக்காக டிராக்டர்கள், இருசக்கர வாகனங்களின் போக்குவரத்து அதிகளவு உள்ள சாலையில் விரிசல் ஏற்பட்டு வருவதால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களும், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும் இதனால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு பொதுமக்கள் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு விரிசல் விட்டு வரும் தார்சாலையை உடனே சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.

The post அச்சத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் ஒரத்தூர்-தேவங்குடி சாலை நடுவே திடீர் விரிசல் appeared first on Dinakaran.

Tags : Orathur-Devangudi ,Chethiyathoppu ,Orathur – Madhuranthaganallur ,Devangudi ,Cuddalore ,Dinakaran ,
× RELATED கருவேல மரங்களை அகற்றி...