×

நெரிசல் மிகுந்த ராயப்பேட்டை பகுதியில் செப்டம்பரில் மெட்ரோ ரயிலுக்கான சுரங்கம் தோண்டும் பணி தொடங்கும்: அதிகாரிகள் தகவல்


சென்னை: ராயப்பேட்டை பகுதியில் மெட்ரோ ரயிலுக்காக செப்டம்பர் மாதம் சுரங்கம் தோண்டும் பணிகள் தொடங்கப்படும் என மெட்ரோ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்திற்காக 3 வழித்தடங்களில் 116.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் 3வது வழித்தடம் 45.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் பால் பண்ணை முதல் சிப்காட் வரையிலும், 4வது வழித்தடம் 26.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலும், 5வது வழித்தடம் 47 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலும் ரூ.63,246 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் 119 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கிறது.

உயர்மட்ட பாதை, சுரங்கப்பாதை மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் 50க்கும் மேற்பட்ட இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் ஆங்காங்கே சுரங்கப்பாதை அமைப்பதற்காக சுரங்கம் தோண்டப்பட்டு வருகிறது. இதற்காக பிரத்யேக லாஞ்சிங் கிர்டர் வகையை சேர்ந்த ராட்சத இயந்திரங்கள் மற்றும் கிரேன்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த பணிகள் 2028ம் ஆண்டு இறுதிக்குள் முடிந்து, மெட்ரோ ரயில்களை இயக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 3வது வழித்தடமான மாதவரம் பால் பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் வரை பணிகள் நடந்து வரும் நிலையில் ராயப்பேட்டை பகுதியில் சுரங்கம் தோண்டும் பணி செப்டம்பர் மாதம் தொடங்கும் என மெட்ரோ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மெட்ரோ அதிகாரிகள் கூறியதாவது: சென்னையின் நெரிசல் மிகுந்த பகுதியான ராயப்பேட்டையில் சுரங்கம் தோண்டும் பணி வரும் செப்டம்பர் மாதம் தொடங்கப்படும். அதற்காக சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் அடையாறு ஆற்றில் சுரங்கம் தோண்டும் இயந்திரத்தின் பணி முடிந்தால் அதனை இந்த பகுதிக்கு மாற்றம் செய்யப்படும். அடையாற்றில் சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் ஜூன் மாதத்தில் முழு சுரங்கத்தையும் தோண்டி முடிக்கும். அதன்பின் அடையாறில் இருந்து ராயப்பேட்டைக்கு சுரங்கம் தோண்டும் இயந்திரத்தை மாற்றுவதுற்கு சில நாட்கள் எடுக்கப்படும் என்பதால் செப்டம்பரில் சுரங்கம் ேதாண்டும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. ஆனால், இயந்திரம் அமைப்பதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகள் தயார் நிலையில் உள்ளன.

ராயப்பேட்டையில் மேம்பாலம், மருத்துவமனை, போக்குவரத்து நெரிசல் மற்றும் குறுகிய பகுதி போன்ற காரணத்தால் முன்னேற்பாடுகளை செய்வதற்கு அதிக நாட்கள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் மருத்துவமனை மற்றும் சாலையின் இருபுறமும் ரயில் நிலையம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக சாலையின் ஒருபுறம் கட்டுமான பணி தொடங்கும்போது மற்றொரு புறத்தில் வாகன போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டு பணிகள் நடைபெறுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

பொதுமக்கள் சொல்வது என்ன?
மெட்ரோ ரயில் பணிகள் குறித்து ராயப்பேட்டை பகுதி மக்கள் கூறியதாவது: மெட்ரோ பணிகள் நடைபெற்று வரும் பகுதி போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக உள்ளது. இதனால் நாள் முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் சாலையில் குறிப்பிட்ட அளவிற்கு மெட்ரோ தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் காலை, மாலையை காட்டிலும் எல்லா நேரங்களில் போக்குவரத்து நெரிசலாக உள்ளது. மேம்பாலத்திற்கு கீழ் போக்குவரத்து காவல்துறையினர் இருந்தாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மணிக்கூண்டு முதல் அண்ணா சாலை செல்லும் சாலையில் பாதி அளவிற்கு அடைக்கப்பட்டுள்ளதால் கூடுதல் நெரிசல் ஏற்படுகிறது. ராயப்பேட்டைக்கு வரும் முக்கிய சாலைகளில் அடைக்கப்பட்டு மெட்ரோ பணிகள் நடந்து வந்தாலும் போக்குவரத்து நெரிசல் குறைவதாக தெரியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post நெரிசல் மிகுந்த ராயப்பேட்டை பகுதியில் செப்டம்பரில் மெட்ரோ ரயிலுக்கான சுரங்கம் தோண்டும் பணி தொடங்கும்: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Rayapetta ,CHENNAI ,Chennai Metro Rail ,Dinakaran ,
× RELATED இளம் தொழிலதிபரை காரில் கடத்தி ரூ.50...