×

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் முதுகலைப் பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை: ஜூன் 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை: சென்னை தரமணியில் இயங்கும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் முதுகலைப் பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ் வளர்ச்சி இயக்குனரகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழ், தமிழ்மொழி வளர்ச்சிக்கெனத் தமிழ்நாடு அரசால் தோற்றுவிக்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பல்வேறு கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிப் பணிகள் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

தமிழ்ப் பல்கலைக்கழக ஏற்புடன், தமிழ் முதுகலை பட்டப் படிப்பு (எம்ஏ தமிழ்) மற்றும் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலை பட்டப்படிப்பு மற்றும் தமிழ் முனைவர் பட்ட வகுப்பு (பிஎச்டி) ஆகியன இந்நிறுவனத்தில் ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்தப் பெற்று வருகிறது. 2024-25ம் கல்வியாண்டில் தற்போது ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலை பட்ட வகுப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

இந்த படிப்பில் பயில விரும்புவோர் சேர்க்கை தொடர்பான விதிமுறைகள், தகவல்கள் மற்றும் விண்ணப்பத்தை www.ulakaththamizh.in என்ற இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து தெரிந்து கொள்ளலாம் அல்லது நேரில் பெற்றுக் கொள்ளலாம். இருபாலருக்கெனத் தனித்தனியே கட்டணம் இல்லா தங்கும் விடுதி வசதி உள்ளன. நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நேரில் (அ) அஞ்சலில் இறுதியாக படித்த கல்விச் சான்று மற்றும் மாற்றுச்சான்றிதழ் (சான்றொப்பமிடப்பட்டது)

நகலுடன் இணைத்து இயக்குநர் (கூ.பொ.), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை-600113 (தொலைபேசி 044-22542992) என்ற முகவரியில் வரும் ஜூன் மாதம் 7ம் தேதிக்குள் அளித்தல் வேண்டும். மேலும் தகவல் பெற மேற்காணும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம் அல்லது நிறுவன வலைத்தளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் முதுகலைப் பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை: ஜூன் 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : World Institute of Tamil Research ,CHENNAI ,Taramani, Chennai ,Tamil Development Directorate ,Tamil Nadu Government ,
× RELATED உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில்...