×

எக்மோ சிபிஆர் புதிய திட்டம் இதயத்துடிப்பு நின்றுவிடும் நிலையில் உயிர்பிழைக்கும் விகிதத்தை அதிகரிக்கும் யுக்தி: சென்னை காவேரி மருத்துவமனையில் அறிமுகம்

சென்னை: இதயத்துடிப்பு நின்றுபோகும் தருவாயில், உயிர்பிழைக்கும் விகிதத்தை மேம்படுத்த எக்மோ சிபிஆர் எனும் புதிய மருத்துவ திட்டத்தை சென்னை காவேரி மருத்துவமனை அறிமுகம் செய்துள்ளது. சீரற்ற இதயத்துடிப்பால் இதய இயக்கத் துடிப்பு நின்று விடும் நோயாளிகளுக்கு உயிர்பிழைக்க வைக்கும் விகிதத்தை கணிசமாக அதிகரிக்கும் நோக்கோடு எக்மோ சிபிஆர் என்ற திட்டத்தை சென்னை காவேரி மருத்துவமனை அறிமுகம் செய்திருக்கிறது.

இச்செயல்திட்ட தொடக்க நிகழ்வின் ஒரு பகுதியாக சிபிஆர் பயிலரங்கம் ஒன்றை காவேரி மருத்துவமனை நேற்று நடத்தியது. இந்தியா முழுவதிலும் இருந்து பல மருத்துவ நிபுணர்கள் இதில் பங்கேற்றனர். எக்மோ சிபிஆர்-ஐ பயன்படுத்துவதில் நேரடி நடைமுறை அனுபவத்தைப் பெற பங்கேற்பாளர்களுக்கு உதவும் விதத்தில் ஒரு நேரடிப் பயிற்சி அமர்வும் இதில் இடம் பெற்றது. இதுகுறித்து காவேரி மருத்துவமனையின் முதுநிலை இதயவியல் நிபுணர் டாக்டர் அனந்தராமன் கூறியதாவது:

வழக்கமான இதய சுவாச மீட்டெடுப்பு முயற்சிகளுக்கு பதில்வினையாற்றாத கடுமையான இதயத்தம்ப நேர்வுகளில் பயன்படுத்தப்படும் உயிர்காக்கும் மருத்துவ யுக்தியாக எக்மோ சிபிஆர் இருக்கிறது. நோயாளியின் இரத்தத்தில் ஆக்சிஜனை ஏற்றி அதை பம்ப் செய்து இதயத்திற்கு அனுப்பவும், அனைத்து உறுப்புகளுக்கும் அது செல்வதை பேணவும் ஒரு இயந்திரத்தைப் பயன்படுத்துகிற மருத்துவ செயல்முறை இது.

இந்நேரத்தில் இதயமும், நுரையீரல்களும் ஓய்வெடுக்கவும் மற்றும் பாதிப்பிலிருந்து மீண்டு வரவும் இது வகை செய்கிறது. மார்புப் பகுதியை வலுவாக அழுத்தி இதயத்துடிப்பை மீட்டெடுக்கும் உத்திகள் செயல்படாதபோது, அத்தகைய நோயாளி உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகளை இந்த எக்மோ சிபிஆர் கணிசமாக அதிகரிக்கக் கூடும்.

எடுத்துக்காட்டாக, மருத்துவமனைக்கு வெளியே இதயத்துடிப்பு நின்றுவிடும் இளம் நபர்களுக்கு எக்மோ சிபிஆர்-ஆல் மருத்துவமனையில் தரப்படும்போது அவர்கள் உயிர் பிழைப்பதற்கான விகிதம் 5 – லிருந்து 30% ஆக அதிகரிக்கக் கூடும். அதேநேரத்தில் மருத்துவமனையில் இருக்கும்போது இதயத்துடிப்பு நின்றுவிடும் நேரங்களில் அதனை 50% வரை அதிகரிக்கக் கூடும். இவ்வாறு அவர் கூறினார்.

The post எக்மோ சிபிஆர் புதிய திட்டம் இதயத்துடிப்பு நின்றுவிடும் நிலையில் உயிர்பிழைக்கும் விகிதத்தை அதிகரிக்கும் யுக்தி: சென்னை காவேரி மருத்துவமனையில் அறிமுகம் appeared first on Dinakaran.

Tags : Kaveri ,Hospital ,Chennai ,Chennai Cauvery Hospital ,Chennai Kaveri Hospital ,
× RELATED சிறுநீர்ப்பை புற்றுநோய் குறித்து...