×

ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை

சென்னை: போதை பொருட்கள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக பணம் பரிமாற்றம் செய்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக் மனைவி அமீனாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்தியாவில் இருந்து ஊட்டச்சத்து உணவு பொருட்கள் ஏற்றுமதி என்ற பெயரில் சர்வதேச நாடுகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு உயர் ரக போதை பொருள் மூலப்பொருட்களை கடத்திய வழக்கில், சென்னை சாந்தோம் பகுதியை சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் என்பவர் தேசிய போதை தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

பின்னர் ஜாபர் சாதிக் அளித்த தகவலின்படி, அவரது நெருங்கிய நண்பரான சதா(எ)சதானந்த் என்பவர் கடந்த மாதம் 12ம் தேதி கைது செய்யப்பட்டார். பிறகு கடந்த மார்ச் மாதம் 18ம் தேதி கைதான ஜாபர் சாதிக்கை போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சென்னைக்கு அழைத்து வந்து நேரில் விசாரணை நடத்தி வாக்கு மூலம் பெற்றனர்.

இதைதொடர்ந்து சட்டவிரோத பணம் பரிமாற்றம் சட்டத்தின் கீழ் இந்த வழக்கில் அமலாக்கத்துறை தனியாக வழக்கு பதிவு செய்து கடந்த ஏப்ரல் 9ம் தேதி ஜாபர் சாதிக் மற்றும் இயக்குநர் அமீர், அப்துல் பாசித் புகாரி, சையத் இப்ராகிம், ரகு உள்ளிட்டோருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் என 20க்கும் மேற்பட்ட இடங்களில் துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்புடன் தீவிர சோதனை நடத்தினர்.

இதில் பல ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. அதைதொடர்ந்து சட்டவிரோத பணம் பரிமாற்றம் தொடர்பாக திகார் சிறையில் உள்ள ஜாபர் சாதிக்கிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 3 நாள் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர். அதனை தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது அலுவலகத்திற்கு ஜாபர்சாதிக் மனைவி அமீனாவை நேரில் அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விசாரணையில் சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், வங்கி பணம் பரிமாற்றங்கள், சினிமா தயாரிப்பு நிறுவனம் வங்கி கணக்குகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. நள்ளிரவு வரை நீடித்த இந்த விசாரணையில் ஜாபர் சாதிக் மனைவி அமீனா அளித்த பதிலை அமலாக்கத்துறை அதிகாரிகள் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர்.

The post ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை appeared first on Dinakaran.

Tags : Enforcement department ,Zafar Sadiq ,CHENNAI ,Ameena ,India ,
× RELATED போதைப்பொருள் மூலம் சட்டவிரோத பண...