×

தங்கம் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்து சவரன் ரூ.55 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டது: வெள்ளியும் முதல் முறையாக கிராம் ரூ.100ஐ தாண்டியது: நகை வாங்குவோருக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி

சென்னை: தங்கம் விலை நேற்று அதிரடியாக உயர்ந்து சவரன் ரூ.55 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டது. வெள்ளியும் முதல் முறையாக கிராம் ரூ.100ஐ தாண்டியுள்ளது. தங்கமும், வெள்ளியும் போட்டி போட்டு உயர்ந்து வருவது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தங்கத்தின் விலை கடந்த ஏப்ரல் மாதத்தில் ஜெட் வேகத்தில் அதிகரித்து வந்தது. இதன் ஒரு பகுதியாக கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.6890க்கும், சவரன் ரூ.55,120க்கும் விற்பனையாகி தங்கம் விலை வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது.

அதன் பிறகு தங்கம் விலை ஒவ்வொரு நாளும் குறைவதும், ஏறுவதுமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த மே 15ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,800க்கும், 16ம் தேதி சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,360க்கும் விற்கப்பட்டது. தொடர்ச்சியாக 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.840 வரை உயர்ந்தது. தொடர்ந்து 17ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் ரூ.54,160க்கு விற்கப்பட்டது.

இந்த விலைக் குறைவு என்பது ஒரு நாள் கூட நீடிக்கவில்லை. மறுநாளே தங்கம் விலை உயர்ந்தது. 18ம் தேதி அன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,800க்கு விற்கப்பட்டது. நேற்று முன்தினம்(19ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும். அதனால், தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல், முந்தைய நாள் விலையிலேயே தங்கம் விற்பனையானது.

ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதில் தங்கம் விலை அதிர்ச்சியளிக்கும் வகையில் மேலும் அதிகரித்தது. அதாவது நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,900க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.55,200க்கும் விற்கப்பட்டது. இதற்கு முன்னர் கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.55,120க்கு விற்கப்பட்டது. இதுதான் தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்ச உச்சமாக இருந்து வந்தது.

இந்த விலையை நேற்றைய தங்கம் விலை உயர்வு முறியடித்தது. மேலும் தங்கம் விலை தொடர்ச்சியாக 2 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1,040 உயர்ந்துள்ளது. இந்த விலையேற்றம் நகை வாங்குவோரை கலக்கமடைய செய்துள்ளது. வெள்ளி விலையும் உயர்ந்தது… தங்கத்தைத் தொடர்ந்து, வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்த வண்ணம் உள்ளது. அதாவது மே 1ம் தேதி ஒரு கிராம் வெள்ளி விலை 86 ரூபாய் 50 காசுகளுக்கு விற்கப்பட்டது. அதன் பிறகு தொடர்ந்து அதிகரித்து வந்தது.

இந்த நிலையில் நேற்று வெள்ளி கிராமுக்கு ரூ.3.50 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.101க்கு விற்கப்பட்டது. முதல் முறையாக கிராம் ரூ.100-ஐ தாண்டியது வெள்ளி. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,01,000க்கு விற்பனையாகியது. அதே நேரத்தில் மே 1ம் தேதி முதல் நேற்று வரை 20 நாட்களில் மட்டும் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.14.50 உயர்ந்துள்ளது. தங்கம் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்து வரும் வேளையில், வெள்ளியின் விலையும் போட்டிப் போட்டுக் கொண்டு உயர்ந்து வருவதால் ஏழை, நடுத்தர மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

இதுகுறித்து சென்னை தங்கம், வைரம் வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் கூறியதாவது: தங்கத்திற்கான தேவை என்பது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தங்கத்தின் மீதான முதலீடும் அதிகரித்து வருகிறது. பொருளாதார சூழ்நிலை, பணவீக்கம் போன்ற காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்னும் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.56 ஆயிரம் வரை உயர வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post தங்கம் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்து சவரன் ரூ.55 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டது: வெள்ளியும் முதல் முறையாக கிராம் ரூ.100ஐ தாண்டியது: நகை வாங்குவோருக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Dinakaran ,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...