×

வீடியோ வைரலானதைத் தொடர்ந்து பாஜவுக்கு 8 கள்ள ஓட்டு போட்ட சிறுவன் கைது: மறுவாக்குபதிவுக்கு பரிந்துரை

பரூக்காபாத்: உத்தரப்பிரதேசத்தில் பாஜவுக்கு 8 கள்ள ஓட்டு போட்ட 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்த தலைமை தேர்தல் அதிகாரி பரிந்துரைத்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் எடா மாவட்டத்தில் உள்ள பரூக்காபாத் மக்களவை தொகுதியில் கடந்த 13ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. அப்போது, வாக்குச்சாவடி எண் 343ல் 17 வயது சிறுவன் ஒருவன் பாஜவின் தாமரை சின்னத்திற்கு 7 முதல் 8 ஓட்டுகள் போடுவது போல வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தான். இந்த வீடியோவை சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தங்கள் டிவிட்டரில் பகிர வைரலானது.

இதுதொடர்பாக, பரூக்காபாத் மாவட்ட கலெக்டர் வி.கே.சிங் உத்தரவின்பேரில் நயாகோன் காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டது. அதன் பேரில் சம்மந்தப்பட்ட சிறுவனை போலீசார் கைது செய்து, எடாவில் உள்ள மறுவாழ்வு மையத்தில் அடைத்துள்ளனர். மாநில தலைமை தேர்தல் அதிகாரி நவ்தீப் ரின்வா அளித்த பேட்டியில், ‘‘சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தவறு செய்த தேர்தல் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, இனிவரும் தேர்தலில் வாக்காளர் அடையாள நடைமுறைகளை கடுமையாக பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்’’ என்றார்.

The post வீடியோ வைரலானதைத் தொடர்ந்து பாஜவுக்கு 8 கள்ள ஓட்டு போட்ட சிறுவன் கைது: மறுவாக்குபதிவுக்கு பரிந்துரை appeared first on Dinakaran.

Tags : BJP ,Baruchabad ,Uttar Pradesh ,Chief Electoral Officer ,Dinakaran ,
× RELATED தேர்தலில் படுதோல்வியை சந்தித்ததால்...