×

உதவி பேராசிரியர் பணிக்கான பல்கலைக்கழக ‘செட்’ தேர்வுக்கு ஒரு லட்சம் பேர் விண்ணப்பம்: ஜூன் 7, 8ம் தேதிகளில் நடத்த திட்டம்

நெல்லை: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் நடத்தும், உதவி பேராசிரியர் பணிக்கான செட் தேர்வுக்கு ஒரு லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். நாடு முழுவதும் அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள், சுயநிதிக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணிக்கு பிஎச்டி முடித்திருக்க வேண்டும் அல்லது தேசிய தேர்வு முகமை நடத்தும் ‘நெட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நெட் தேர்வை பொறுத்தவரை ஆண்டுக்கு இரண்டு முறை, அதாவது ஜூன், டிசம்பர் மாதங்களில் நடத்தப்படுகிறது.

இது தவிர அந்தந்த மாநில பல்கலைக்கழகங்களும் செட் தேர்வு நடத்துகிறது. இந்தத் தேர்வில் வெற்றி பெற்றால் அந்தந்த மாநிலங்களில் உதவி பேராசிரியர் பணிக்கு தகுதி பெறுவர். தமிழ்நாட்டில் இந்த ஆண்டு செட் தேர்வு நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தால் நடத்தப்படுகிறது. இதற்காக கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் நெல்லை பல்கலைக்கழகம் ஆன்லைனில் (www.msuniv.ac.in) விண்ணப்பங்களை வரவேற்றது. இதற்கான தேர்வு கட்டணமாக பொது பிரிவினருக்கு ரூ.2,500ம், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்பட்ட வகுப்பினர், சீர் மரபினருக்கு ரூ.2 ஆயிரமும், எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ, மாற்றத் திறனாளிகள் ஆகியோருக்கு ரூ.800 நிர்ணயிக்கப்பட்டது. மூன்றாம் பாலினத்திற்கு தேர்வு கட்டணம் கிடையாது எனவும் அறிவிக்கப்பட்டது.

மேலும் டிஎன்செட் தேர்வு ஜூன் 3 முதல் 25ம் தேதி வரை நடத்தப்படும் எனவும், மொத்தம் 3 மணி நேரங்கள் தேர்வு நடத்தப்படும் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. தேர்வு நேரத்தை பொறுத்தவரை முற்பகலில் காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரையும், பிற்பகலில் 2 மணி முதல் 5 மணி வரையும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டது. டிஎன்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஏப்.30ம் தேதி என நெல்லை பல்கலைக்கழகம் அறிவித்தது. இந்த தேதி மே 15ம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டது. விண்ணப்பங்கள் பெற கடைசி தேதி முடிந்ததை தொடர்ந்து தேர்வு நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளை நெல்லை பல்கலைக்கழகம் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து நெல்லை பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகரிடம் கேட்ட போது, செட் தேர்வுக்கு 99 ஆயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. ஜூன் 7, 8ம் தேதிகளில் செட் தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளோம். தேர்வுக்கான ஏற்பாடுகள் முடிந்த பிறகு அதிகாரப்பூர்வ தேதி அறிவிக்கப்படும். தேர்விற்காக சென்னை, திருச்சி, மதுரை, கோவை, சேலம் உள்ளிட்ட 9 மண்டலங்களாக பிரித்துள்ளோம். செட் தேர்வு ஆன்லைன் வழியாக நடத்தப்படும். தேர்வுக்கான அனைத்து ஆயத்தப் பணிகளும் நடந்து வருகின்றன. பல்கலைக்கழக மானியக் குழு விதித்துள்ள நடைமுறையை பின்பற்றி நெட் தேர்வை போன்று செட் தேர்விற்கும் வினாத்தாள்கள் தயாரிக்கப்படும் என்று தெரிவித்தார்.

The post உதவி பேராசிரியர் பணிக்கான பல்கலைக்கழக ‘செட்’ தேர்வுக்கு ஒரு லட்சம் பேர் விண்ணப்பம்: ஜூன் 7, 8ம் தேதிகளில் நடத்த திட்டம் appeared first on Dinakaran.

Tags : Nellai ,Manonmaniam Sundaranar University ,Dinakaran ,
× RELATED நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில்...