×

மதுரை எய்ம்சுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு

திருப்பரங்குன்றம்: மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு சுற்றுச்சூழல் அனுமதியை தமிழக அரசு வழங்கியது. மதுரை அருகே தோப்பூரில், தமிழக அரசின் சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் எய்ம்ஸ் பணிகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாயின. இதையடுத்து எய்ம்ஸ் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘தமிழக அரசின் சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்ததும் முக்கிய கட்டுமான பணிகள் துவங்கும்’ என தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு, சுற்றுச்சூழல் அனுமதி வழங்க கடந்த மே 10ம் தேதி பல்வேறு நிபந்தனைகளுடன் ஒப்புதல் வழங்கியது. இதை தொடர்ந்து விரைவில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறையின் மூலம் முறையான அனுமதி குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

இதற்கிடையே கடந்த 18ம் தேதி ஒன்றிய அரசு, மதுரை எய்ம்ஸ் நிர்வாக உறுப்பினர் குழு உறுப்பினராக சென்னை ஐஐடியின் இயக்குநர் காமகோடியை நியமனம் செய்து உத்தரவிட்டது. இந்நிலையில் தமிழக அரசு, மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை மேற்கொள்ள சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழுவின் பரிந்துரைகளை தொடர்ந்து, நேற்று முறையான அனுமதி வழங்கியுள்ளது. இதனை மதுரை எய்ம்ஸ் நிர்வாக அலுவலக வட்டாரங்கள் உறுதிப்படுத்தின. இதை தொடர்ந்து எய்ம்ஸ் கட்டுமான பணிகள் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post மதுரை எய்ம்சுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government ,AIIMS ,Madurai ,Thopur ,Tamil ,
× RELATED எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு சுற்றுச்சூழல் அனுமதி: நிபுணர் குழு பரிந்துரை