×

பெரும்பாறை மலைப்பகுதியில் கனமழை; புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் கொட்டும் தண்ணீர்: பாசன விவசாயிகள் மகிழ்ச்சி

பட்டிவீரன்பட்டி: பெரும்பாறை மலைப்பகுதியில் தொடரும் கனமழையால் புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தண்ணீர் கொட்டுகிறது. இதனால், பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், தாண்டிக்குடி அருகே பெரும்பாறை அருகே மஞ்சள்பரப்பு என்ற இடத்தில் 300 அடி உயரத்தில் புல்லாவெளி நீர்வீழ்ச்சி என்னும் அருவி உள்ளது. இப்பகுதி ஆபத்து நிறைந்த மலைப்பகுதியாகும். மலைப்பகுதியில் நீண்ட தூரம் ஆறாக பயணித்து புல்லாவெளி என்ற இடத்தில் அருவியாக கொட்டுகிறது. இந்த அருவியை சுற்றி பசுமையான மலைகள், ஆபத்தான பள்ளத்தாக்குகள் உள்ளன. சீதோஷ்ண நிலை சில்லென்று இருக்கும்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெரும்பாறை, புல்லாவெளி, மஞ்சள்பரப்பு, கானல்காடு, கும்பம்மாள்பட்டி, தடியன்குடிசை, கல்லாங்கிணறு உள்ளிட்ட மலைக்கிராமங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்த தண்ணீர் குடகனாறு வழியாக ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்திற்கு செல்கிறது. மேலும் ஆத்தூர், நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள குளங்களுக்கும், பெரியாறு ராஜவாய்க்கால் மூலம் தண்ணீர் நிரப்பப்படுகிறது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘ஆடி மாதத்தில் நடவு பணியை தொடங்குவோம். ஆனால், தற்போது, வைகாசி மாதத்திலேயே குளங்களுக்கு தண்ணீர் வரத்து உள்ளது மகிழ்ச்சியாக உள்ளது’ என்றனர்.

The post பெரும்பாறை மலைப்பகுதியில் கனமழை; புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் கொட்டும் தண்ணீர்: பாசன விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Meadow ,Manjalparapu ,Majara ,Dindigul ,Thandikudi ,
× RELATED தொடர் மரணம் எதிரொலி; புல்லாவெளி...