×

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு கேலிக்கூத்தாக உள்ளது: எடப்பாடி பழனிசாமி பேட்டி

கோவை: தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு கேலிக்கூத்தாக உள்ளது என எடப்பாடி பழனிசாமி கூறினார். கோவையில் இறந்த அதிமுக எம்எல்ஏ தா.மலரவன் (75) வீட்டுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை வந்தார். தா.மலரவன் உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினார். பின்னர், அவரது மனைவி மற்றும் 2 மகள்களுக்கு ஆறுதல் கூறினார். இதன்பிறகு, நிருபர்களிடம் கூறியதாவது: கேரளா மாநில அரசு, இடுக்கி மாவட்டத்தில் சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுகிறது. இதனால், அமராவதி அணைக்கு வரும் நீர் நின்றுவிடும். அமராவதி அணை பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள் மற்றும் சுற்றுவட்டார மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே, கேரள அரசின் முயற்சியை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். ஆந்திரா மாநில அரசு, பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி வருகிறது. இதுவும், தமிழகத்துக்கு நீர்வரத்தை தடுக்கும்.

இதையும், மாநில அரசு தடுக்க வேண்டும். தமிழகத்தில், அதிமுக வாக்காளர்கள் பெரும்பாலும் நீக்கப்பட்டுள்ளனர். இதை தேர்தல் ஆணையம் ஒழுங்குபடுத்தவில்லை. வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்வதிலும், வாக்குப்பதிவின்போதும், ஒவ்வொரு முறையும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. தற்போது, வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி கேமராக்கள் பழுதாகி, செயல்படாமல் உள்ளது. இவை, எல்லாவற்றையும் பார்க்கும்போது, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு கேலிக்கூத்தாக தெரிகிறது. நாடாளுமன்ற ேதர்தலில், ‘இந்தியா கூட்டணி’ 400 சீட்டுகள் பெறுமா? அல்லது பா.ஜ. கூட்டணி 400 சீட்டுகள் பெறுமா? என்பதை தற்போது சொல்லமுடியாது. வரும் ஜூன் 4ம்தேதி எல்லாம் தெரிந்துவிடும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

The post தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு கேலிக்கூத்தாக உள்ளது: எடப்பாடி பழனிசாமி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Election Commission ,Edappadi Palaniswami ,Coimbatore ,AIADMK ,General Secretary ,MLA Malaravan ,Tha.Malaravan ,
× RELATED வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி...