×

ரேடியன்ட் சருமத்தின் சீக்ரெட் ஆயுதம்!

நன்றி குங்குமம் தோழி

வழுவழுப்பான, பளிச்சென்று பிரகாசமாக மின்னும் சருமத்தினை விரும்பாத பெண்கள் இல்லை. ஒரு சின்ன பருவினால் ஏற்படும் கரும்புள்ளி மறைய என்னெல்லாம் அழகு குறிப்புகள் செய்ய வேண்டுமோ அதெல்லாம் செய்வார்கள். அது மறைந்தால்தான் அவர்களுக்கு நிம்மதியாக இருக்கும். தற்போது அழகுக் கலை துறையில் சருமத்தை பொலிவாக்க பலதரப்பட்ட அழகு சாதனப் பொருட்கள் மார்க்கெட்டில் நிலவி வருகிறது. சருமத்தை பாதுகாப்பதற்கு இயற்கை முறையில் பல ஆயுர்வேதப் பொருட்கள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் தனிப்பட்ட குணாதிசயங்கள் உள்ளன. அதில் தற்போது பெரும்பாலான அழகு சாதனப் பொருட்களில் காக்கடு பிளம் என்ற பழத்தினை பயன்படுத்தி வருகிறார்கள்.

ஆஸ்திரேலியாவில் விளையக்கூடிய இந்த பழத்தில் சருமத்தை பாதுகாக்கக்கூடிய பலதரப்பட்ட சத்துக்கள் நிறைந்துள்ளது என்பதை சரும நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். இது குறித்து யோநீக் புரோ சயின்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் ரிஷப் சன்தன், காக்கடு பிளம் பழத்தில் உள்ள மருத்துவ குணங்கள் சருமத்திற்கு பொலிவையும் பளபளப்பையும் எவ்வாறு அளிக்கிறது என்பது குறித்து விவரித்தார்.

‘‘பொதுவாக சருமத்தின் அன்றாட பொலிவிற்கு விட்டமின் சி மிகப்பெரிய பங்கு வகித்து வருகிறது. அதே போல் காக்கடு பிளம் பழத்தில் ஆன்டி ஆக்சிடன்ட்கள் நிறைந்துள்ளன. அதனால் ஃப்ரீ ரேடிக்கலால் சருமத்திற்கு ஏற்படும் பாதிப்பில் இருந்து பாதுகாக்கிறது. மேலும் சுற்றுப்புறத்தில் ஏற்படும் மாசு, புகை மற்றும் புற ஊதாக் கதிர்கள் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். இவை சருமத்திற்கு வயதான தோற்றத்தை கொடுக்கும்.

அவற்றில் இருந்து நம்முடைய சருமத்தை பாதுகாக்க காக்கடு பிளம் அழகு துறையில் மிக முக்கிய பங்கு வகித்து வருகிறது. அதில் உள்ள அசாதாரண பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

*விட்டமின் சி நிறைந்தது: ஆஸ்திரேலிய காக்கடு பிளம் பழத்தில் அதிக அளவு விட்டமின் சி நிறைந்துள்ளது. இதில் மற்ற இயற்கை ஆதாரங்களை விட விட்டமின் சி அதிகமாக உள்ளது. விட்டமின் சி ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும். இது ஃப்ரீ ரேடிக்கல் சேதத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது. சருமத்தில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து கொலாஜனை ஊக்குவிக்கிறது. இதனால் சருமம் பிரகாசமாகவும் சருமத்தின் நிறம் சீராகவும் இருக்க உதவுகிறது. மேலும் சருமம் தொய்வு அடையாமல் என்றும் உறுதியாக இருக்க வழிவகுக்கிறது.

*ஆன்டிஆக்சிடென்ட் பவர்ஹவுஸ்: விட்டமின் சி சத்து மட்டுமில்லாமல் இந்தப் பழத்தில் அதிக அளவில் ஆன்டி ஆக்சிடென்ட் நிறைந்துள்ளது, குறிப்பாக ஃபீனாலிக் கலவைகள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் போன்றவை இதில் உள்ளது. இந்த ஆக்ஸிஜனேற்றிகள் மாசு மற்றும் புற ஊதாக் கதிர்வீச்சு போன்ற சுற்றுச்சூழல் அழுத்தங்களால் உருவாகும் தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்க உதவுகிறது. இதன் மூலம் சருமத்தை வயதான தோற்றத்தில் இருந்து பாதுகாக்கிறது.

*சருமத்தை பிரகாசமாக்கும் பண்புகள்: காக்கடு பிளம் பழத்தில் உள்ள விட்டமின் சி சருமம் பளபளப்பாக ஜொலிக்க வழிவகுக்க உதவுகிறது. கக்காடு பிளம் பழம் பயன்படுத்தப்பட்ட தோல் பராமரிப்பு அழகு சாதனப் பொருட்களைத் தொடர்ந்து பயன்படுத்துவதால் கரும்புள்ளிகள், ஹைப்பர் பிக்மென்டேஷன் மற்றும் முகப்பரு வடுக்கள் மறைந்து சருமம் பிரகாசமாகவும், சீரான நிறத்தை பெற முடியும்.

*ஹைட்ரேஷன் மற்றும் ஊட்டச்சத்து: காக்கடு பிளம் பழத்தில் விட்டமின் ஈ, விட்டமின் ஏ மற்றும் ஒமேகா கொழுப்பு அமிலங்கள் போன்ற சருமத்திற்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது சருமத்திற்கு ஊட்டமளித்து, ஈரப்பதத்தினை தக்க வைக்கிறது. இந்த ஊட்டச்சத்துக்கள் சருமத்தில் ஈரப்பதம் குறையாமல் பாதுகாத்து சருமம் மிருதுவாக இருக்க உதவுகிறது.

*அழற்சி எதிர்ப்பு பலன்கள்: காக்கடு பிளமில் உள்ள கேலிக் மற்றும் எலாஜிக் அமிலம் போன்ற பயோஆக்டிவ் சேர்மங்கள் அழற்சி ஏற்படாமல் தடுக்கிறது. சருமத்தில் ஏற்படும் எரிச்சலை நீக்கி சருமத்தினை மிருதுவாக்கும். இந்த பழம் பயன்படுத்தப்பட்ட அழகு சாதனப் பொருட்களை தொடர்ந்து பயன்படுத்தி வருவதன் மூலம் அழற்சியால் சருமம் சிவந்து போகாமலும், வீக்கம் மற்றும் எக்சீமா, ரோசாசியா போன்ற தோலழற்சி ஏற்படாமல் தடுக்கிறது. காக்கடு பிளம் பயன்படுத்தப்பட்ட சரும பாதுகாப்பு பொருட்கள் தற்போது மார்க்கெட்டில் பல உள்ளன.

சருமத்தை பாதுகாக்கும் சீரத்தில் துவங்கி, மாய்சரைசர் என அனைத்து வகை சருமத்தினர் பயன்படுத்தும் வகையில் இந்தப் பழத்தினை அழகு சாதனப் பொருட்களில் பயன்படுத்தி வருகிறார்கள். இந்தப் பழங்களின் சேர்மங்கள் கொண்டு பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் ரசாயனங்கள் கொண்ட சரும பாதுகாப்பு பொருட்களை தவிர்த்து பொலிவான சருமத்தைப் பெறலாம். காக்கடு பிளம் பழம் இயற்ைகயான முறையில் சருமப் பொலிவு பெற இயற்கை தந்த பரிசு என்றுதான் குறிப்பிட வேண்டும். விட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் சருமத்திற்கான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள இந்த ஆஸ்திரேலிய சூப்பர் பழம் சருமப் பளபளப்பின் திறவுகோல்’’ என்றார் ரிஷப்.

தொகுப்பு: நிஷா

The post ரேடியன்ட் சருமத்தின் சீக்ரெட் ஆயுதம்! appeared first on Dinakaran.

Tags : Radiant Skin ,Kumkum Doshi ,Dinakaran ,
× RELATED கோடையில் எடை இழப்புக்கு உதவும் சப்போட்டா!