×

உதவும் உறவுகள் உன்னத உறவுகள்

நன்றி குங்குமம் தோழி

காலத்தின் கோலத்தால், உறவுகளையே பிரிய நேர்ந்தது. குறிப்பாக கொரோனா காலகட்டத்தில், என்றோ நிகழும் ஒரு சில சம்பவங்களில் கூடி மகிழும் சந்தர்ப்பங்களும் நம் கையை விட்டுப் போயின. தாய்-தந்தை இழப்பைக் கூட சேர்ந்து காரியங்கள் செய்ய முடியாத அளவுக்கு மாறின. நாளை என்பது நம் கையில் இல்லை என்பதை இந்த காலம் எல்லோருக்கும் உணர்த்தியது. நம் கலாச்சாரத்தில் தான் எத்தனை உறவுமுறைகள்? ஆனால் அவை எல்லாம் மறந்து, பொதுவாக ‘அங்கிள்-ஆன்ட்டி’ எனக் கூறுவது வழக்கமாகிவிட்டது. தாய் மாமன், சித்தப்பா இருவரையுமே ‘அங்கிள்’ என்று அழைக்கும் போது அதில் பாசம் இருக்காது. வாய் நிறைய ‘மாமா’, ‘சித்தப்பா’ என்று கூறிப்பார்த்தாலே, நம் ரத்தப் பாசம் முகத்தில் பிரதிபலிக்குமே!

உண்மையான உறவுமுறைகள், குடும்பத்தில் நெருங்கிய உறவுகள் இல்லாமல் போனாலும், ஒன்று விட்ட, இரண்டு விட்ட உறவுமுறைகள் சிலர் தலைமைப் பொறுப்பில் கடமைகள் செய்ய முன்வருவர். அவர்களுக்கு குடும்பத்தினரின் குணாதிசயங்கள் தெரியாமல் இருக்கும். அந்த மாதிரி சமயங்களில்தான் சில சமயம் புரிதல்கள் மாறுபடும். பிறருக்காக நாம் மாறுவது கடினம். ஆனால் பாசத்தைக் காட்ட, யாரும் தடைவிதிக்க முடியாது. மூத்த அண்ணியாக வரும் பெண் தன் கணவரின் தாயில்லா தம்பிகளுக்கு ஒரு அன்னையாக மாறுவாள். கொஞ்ச காலத்தில் அவர்களும் அவளை அன்னையாக பார்க்க ஆரம்பித்தார்கள். அண்ணி- மைத்துனன் உறவு என்பது அம்மா-பிள்ளை உறவினைப் போன்றது. உதாரணத்திற்கு அந்த காலத்தில் வீட்டு வேலைகள் அனைத்தும் வீட்டில் உள்ள பெண்கள் தான் செய்வார்கள்.

குறிப்பாக தங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு எது பிடிக்கும் என்று பார்த்து பார்த்து செய்வார்கள். அதுவும் பண்டிகை நாள் வந்துவிட்டால் அதற்கான பலகாரங்கள் அனைத்தும் தனி ஆளாக அண்ணி செய்யும் போது, அவளுக்கு உதவியாக மைத்துனர்கள்தான் இருப்பார்கள். அதாவது விசேஷ நாட்களின் போது இரவுதான் பலகார வேலைகள் நடக்கும். அவ்வாறு செய்யும் போது ஒரு மைத்துனன் அண்ணியின் களைப்பை போக்க ஃபேன் (Fan) வைப்பான். மற்றொரு குட்டி மைத்துனன் சீடை மாவை உருட்டுவான். இதுதான் பாசம். கொஞ்சம் அனுசரணை, பாச பந்தம் இவற்றைத் தரும் பொழுது யாராலும் உணர முடியும். உறவுகள் செய்யும் மாயம் தான் பாச உணர்வைக் காட்டச் செய்கிறது. குறை சொல்வதை விட, அவர்கள் மேல் அன்பைக் காட்டினால் போதும்!

இப்போது குடும்பங்கள் சிறியதாக ஆகிவிட்டன. அதனால் உறவுகளும் குறைந்து விட்டன. ஒரு குடும்பத்தில் பெரியவர் ஒருவர் திடீரென இறந்து விட்டார். மகன் வந்து சேரும் வரை உறவினர்கள்தான் மற்ற காரியங்களை பார்த்துக் ெகாள்கிறார்கள். அப்படிப்பட்ட உறவினர்கள் நமக்கு வேண்டியதை செய்யக் காத்திருந்தனர். ஆனால் இன்று திருமணம் என்றாலும், வேறு அசம்பாவிதம் என்றாலும் தங்கள் தலையை மட்டும் காட்டிச் செல்வது வழக்கமாகி விட்டது.

அவரவர் வேலைகள் சரியாக இருப்பதால் ‘நெருக்கம்’ என்பது குறைந்துவிட்டது. பள்ளிச் சிறுமிக்கு ‘கிட்னி’ பாதிக்கப்பட்டு இறந்து விட்டாள். உறவினர்களுக்கு அவள் நிலைமை தெரிந்திருந்தாலும், சிறுமியின் பெற்றோரிடம் ‘மகளின் இறப்புக்கு வருந்துகிறோம்’ என்று சொல்லி விட்டு சென்று விட்டார்கள். அப்பெண்ணின் ‘தோழி’ மட்டும், மூச்சு நின்ற பிறகும், அவளைப் பார்த்து பார்த்து அழுது கொண்டிருந்தாள். இவ்விடத்தில் நட்பு ஆழமாக காணப்படுகிறது. உறவுகள் குறைந்து விட்டதால், இன்றைய காலகட்டம் பிள்ளைகளுக்கு நண்பர்கள் அதிகம் காணப்படுகிறார்கள். போட்டி மிகுந்த காலகட்டமென்பதால், பிள்ளைகள் பல்வேறு துறைகளில் சாதிக்க வேண்டிய கட்டாயம்.

நாள் முழுவதும் பல்வேறு விதமான வகுப்புகள், மாலை ஆனால் வீட்டுப் பாடங்கள், இடையிடையே கைப்பேசி தொடர்புகள் என அவர்கள் உலகமே வேறாக உள்ளது. ஓடியாடி விளையாடுவதும், சொந்த பந்தங்களோடு உறவாடும் முறையும் மாறி விட்டது. முன்பெல்லாம் விடுமுறையானால் உறவினர் வீடுகளுக்குச் செல்வது மாறி புதிய பயிற்சி வகுப்பில் சேர்வது என்றாகிவிட்டது.

குடும்பத்தில் நடக்கும் விசேஷங்களில் மட்டும்தான் உறவுகளைப் பார்த்துப் ேபச முடிகிறது. இது தொடர்ந்தால், நம் குழந்தைகளுக்கு உறவு முறையே தெரியாமல் போய்விடும். அவர்களுக்கு உறவுகளோடு நெருக்கம் ஏற்பட, நாம் தான் உறவு முறைகளைச் சொல்லியே வளர்க்க வேண்டும். ஒரு காலத்தில் அத்தை பையன் அத்தானின் மனைவியை ‘அண்ணி’ என்று கூறுவது வழக்கமாக இருந்தது. அத்தைக்கு எவ்வளவு முன்னுரிமை தருவோமோ, அந்த அளவுக்கு அவர்கள் மகன்-மருமகளுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டது. அத்தை காலமாகி விட்டாலும், அவர்களுக்கு செய்யும் மரியாதையை ‘அத்தான்’ மற்றும் அவர்கள் மனைவிக்குத் தரப்பட்டது. தாய் மற்றும் தந்தையரின் உடன் பிறந்தவர்கள் அனைவரின் வாரிசுகளும் ஒரே வீட்டில் ஒன்றாக வளர்ந்தார்கள்.

வண்டி கட்டிக் கொண்டு, ஒரே பள்ளிக்குச் சென்று வந்தார்கள். அனைவரையும் அவரவர் வயதிற்குத் தகுந்தபடி, அண்ணன்-தம்பி, அக்கா-தங்கை உறவாகவே கருதினார்கள். அதனால் பாசப்பிணைப்பு முறியாமல் இருந்தது. குடும்பங்கள் தனியான பிறகு, நாம் அனைவருமே தனியாகிவிட்டோம். வீட்டிற்குள் தனித்தனி அறை, தீவுகள் போல் ஒவ்வொருவரும் தொலைபேசியில் பேசிக் கொள்கிறோம். நேரில் பேச முடிவதில்லை. ஒரு தோழி, ‘நான் தினமும் சில நிமிடங்களாவது வெளியூரில் இருக்கும் என் மகளிடம் பேசுவேன்’ என்றாள். ஆனால் உள்ளூரில் இருப்பவரோ… ‘நான் என் மகனிடம் பேசியே மூன்று நாட்களாகிறது’ என்று. காலை இவர்கள் வேலைக்கு செல்லும் பொழுது அவர்கள் தூங்கிக் கொண்டிருப்பார்கள்.

இரவு வரும் பொழுது, வேலை செய்து கொண்டிருப்பார்கள். உண்மையில் இதுதான் பெரும்பாலான குடும்பங்களின் இன்றைய சூழல். உட்கார்ந்து பேசக்கூட யாருக்கும் நேரமில்லை. முன்பு நமக்குத் தெரியாதவர்கள் கூட, நம்மிடம் சொந்தக்காரர்கள் போன்று அனுசரணையாக நடந்து கொள்வதெல்லாம் நடைமுறையில் இருந்தது. எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நம் உறவினர்களுடன், சில சமயங்களில் ஏமாற்றங்களும் ஏற்படலாம்.

இதுதான் வாழ்க்கையின் யதார்த்தம் என்று நினைக்கலாம். அதற்காக, உறவினர்களை நம்மால் குறைத்து மதிப்பிட முடியாது. நம்மைப்பற்றி நல்ல எண்ணங்களை, அவர்கள் மனதில் விதைத்திருந்தால், அவர்களும் நல்லதையே செய்வார்கள். கூடுமானவரை யாருமே ஒருவரைப் பற்றி பிறர் கூறுவதைக் கேளாமல், நேரிடையாக தொடர்பில் கொண்டு பழகும் போது, அநாவசியமான யூகங்களை தவிர்க்கலாம். பொதுவாக, வெளிநாடுகளில் பிள்ளைகளை பார்த்துக் கொள்ளக் கூட உறவினர்களை ரொம்பவும் எதிர்பார்ப்பதில்லை. ‘டேகேர்’ ஆறுமாதக் குழந்தைகளைக் கூட நன்கு கவனிப்பதால், நம்பி ஒப்படைத்து விட்டு, இருவரும் வேலைக்குச் செல்கிறார்கள். இப்படியே சென்றால், காலப்போக்கில் நம் உறவு முறைகளை நாம் முற்றிலும் மறந்துவிடுவோம்.

தொகுப்பு: சரஸ்வதி ஸ்ரீநிவாசன்

The post உதவும் உறவுகள் உன்னத உறவுகள் appeared first on Dinakaran.

Tags :
× RELATED கோடை விடுமுறைக்கு எங்கு போகலாம்?