×

அம்மாவும் நடனப் பள்ளியும்தான் எனக்கான அடையாளம்!

நன்றி குங்குமம் தோழி

நடனக் கலைஞர் கிருத்திகா சுராஜித்

‘‘ஒரு கலையை கற்க சுய ஒழுக்கமும் பொறுமையும் மிகவும் அவசியம் என்று அம்மா எப்போதும் சொல்லுவாங்க’’ என்ற கிருத்திகா சுராஜித் தனது அம்மாவை போன்று கலைத்துறையில் தனது ஆறாவது வயதிலேயே நுழைந்துள்ளார். இவர் ஒரு நாட்டிய கலைஞராக மட்டுமில்லாமல், பாடகியாக, நடன ஆசிரியராக, நாடக கலைஞராக, தற்போது நடிகையாகவும் தன் கலைப்
பயணத்தை தொடர்ந்து வருகிறார். இவர் தனது கலைப்பயணம் மற்றும் தாய் ராதிகா சுராஜித் குறித்து நம்முடன் பகிர்ந்துகொண்டார்.

‘‘குழந்தையாக இருக்கும் போதே அம்மா என்னை அவங்க நடனப் பள்ளிக்கு அழைத்துக் கொண்டு போவாங்க. பொதுவாக குழந்தைகள் அம்மாவின் குரல் சத்தம் கேட்டுதான் வளர்வாங்க. நான் அம்மா எழுப்பும் நடன ஜதிகளின் ஒலியினைக் கேட்டுதான் வளர்ந்தேன். எனக்கு விவரம் தெரிய ஆரம்பித்த நாள் முதல் நடனம் மேல் இருக்கும் ஈடுபாடு அதிகரிக்க ஆரம்பித்தது. ஆறு வயதில் அம்மாவிடமே நடனம் கற்றுக்கொள்ள ஆரம்பிச்சேன். அம்மாவை பொறுத்தவரைக்கும் நடனம் என்று வந்தால், ரொம்ப ஸ்ட்ரிக்டா இருப்பாங்க.

அதே சமயம் ஒரு கலையை கற்றுக் கொள்ளும் போது ஒழுக்கம் ரொம்ப முக்கியம் என்று சொல்வாங்க. அதனால் என்னை என் சித்தி சோபனா பாலசந்திராவிடம் நாட்டிய பயிற்சிக்காக அனுப்பினாங்க. அவர்கள்தான் எனக்கு நடனம் கற்றுக்கொடுத்தாங்க. என்னுடைய முதல் அரங்கேற்றம் சித்தியின் கீழ்தான் நடந்தது’’ என்றவர் நாட்டியம்தான் தன்னுடைய முதல் தோழி என்று புன்னகைத்தார்.

‘‘நாட்டியம் ஒரு பக்கம் இருந்தாலும் உளவியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றேன். மேலும் உளவியல் சார்ந்து அத்தனைப் பயிற்சியும் தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொண்டேன். உளவியல் ரீதியாக என்னால் ஒருவருக்கு ஆலோசனை வழங்க முடியும் என்றாலும், எனக்கு நாட்டியம் தான் எல்லாம். அதனால் நாட்டியத்திலும் பட்டப் படிப்பை முடித்தேன். பின்னர் நாட்டியத்தை பின்பற்றி பாடல், நடிப்பு எல்லாம் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன்.

பல கலைகளை கற்றுக்கொண்டாலும், நாட்டியம்தான் என்றும் என்னுடைய முதன்மை கலை. அம்மா ராதிகா சுராஜித், கலைமாமணி விருது பெற்றவர். அவர் நாட்டியப் பள்ளி அமைத்து அதில் நடனப் பயிற்சி கொடுத்து வருகிறார். அது மட்டுமில்லாமல், நடனம் சார்ந்த நாடகங்களும் இயக்கி, தயாரித்து வருகிறார்கள். அப்பா பேராசிரியரா இருந்தாலும், அவர் நன்றாக பாடுவார். அப்பாவுடைய அம்மாவும் ஒரு பாடகி. எங்க குடும்பமே கலை குடும்பம் என்று சொல்லலாம். இப்படிப்பட்டவர்கள் மத்தியில் நான் வளரும் போது, எப்படி எனக்கு கலையின் மேல் ஆர்வம் ஏற்படாமல் இருக்கும். அவர்களைப் பார்த்து தான் நானும் என் கலைப் பயணத்தை துவங்கினேன். எனக்கு நடனம் பிடித்த அதே அளவிற்கு மேடை நாடகமும் பிடிக்கும்’’ என்றவர் தனது முதல் அரங்கேற்றம் பற்றியும் குறிப்பிட்டார்.

‘‘முதல் அரங்கேற்றம் நான் கல்லூரி படிக்கும் போது நடைபெற்றது. பாடல், நடனம் என முதல் பாதி ஒரு பாடகராகவும், அடுத்த பாதி நடனக் கலைஞராக என் அரங்கேற்றம் நடைபெற்றது. நாட்டியம், படிப்பு என நான் பிசியாக இருந்த காலக்கட்டத்தில் ஒரு நாள் திடீரென்று தனியார் தொலைக்காட்சி ஒன்றில் எனக்கு தொகுப்பாளராக வாய்ப்பு கிடைத்தது. அப்ப எனக்கு 18 வயது. அந்த தொலைக்காட்சிக்காக அம்மா ஒரு நடன நிகழ்ச்சி இயக்கி இருந்தாங்க. அந்த நிகழ்ச்சியினை நான்தான் தொகுத்து வழங்கினேன்.

அதனைத் தொடர்ந்து 2015ல் நாடகங்களிலும் நடிக்க துவங்கினேன். ‘மை ஃபேர் லேடி’ என்னும் ஆங்கிலப் படத்தை தழுவி தமிழில் ஒரு நாடகம் அமைத்திருந்தாங்க. அதில் கதாநாயகியாக நடித்தேன். இந்த நாடகம் க்ளீவ்லேண்டில் நடைபெற்றது. இதில் நடித்த அத்தனை கலைஞர்களும் இசை துறையை சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களை மையமாகக் கொண்டுதான் இந்த நாடகம் எடுக்கப்பட்டிருந்தது. நான் இதில் பாடலை பாடிக்கொண்டே நடித்திருந்தேன். நாடக அனுபவம் முதல் முறை என்றாலும், மேடையில் நடனமாடிய அனுபவம் இருந்ததால், எனக்கு நடிப்பது சுலபமாக இருந்தது. அதன் பின் பல நாடகங்களில் பல கதாபாத்திரங்களில் நடித்திருக்கேன்.

என்னதான் பலமுறை மேடை ஏறி இருந்தாலும், எனக்கு ஒவ்வொருமுறை மேடை ஏறும் போதும் முதல் முறையாக ஏறுவது போல் பரவசமாகவே இருக்கும்’’ என்ற கிருத்திகா, தான் நடித்ததில் தன்னைக் கவர்ந்த கதாபாத்திரங்களைப் பற்றி விளக்கினார். ‘‘இசைக்கவி ரமணன் அவர்களின் ‘பாரதியார்’ என்ற நாடகத்தில் யதுகிரி கதாபாத்திரத்தை ஏற்று நடித்தேன். அடுத்து ஒவ்வொரு ஆண்டும் நாரதகான சபாவில் கோடைகால விழா நடைபெறும். அதில் 2022ல் கோமல் ஸ்வாமிநாதன் அவரின் மகள் தாரணி கோமல் இயக்கிய ‘அவள் பெயர் சக்தி’ எனும் நாடகம் பெரிய வெற்றி பெற்றது. அதற்காக சிறந்த கலைஞர் எனும் விருதும் எனக்கு கிடைத்தது.

பின் அதே ஆண்டு திரௌபதி நாடகம் ஒன்றில் நடித்தேன். திரௌபதி கதாபாத்திரம், நல்ல தமிழ் உச்சரிப்புடன், பாரதியாரின் பாஞ்சாலி பற்றிய பாடலுடன் நடிக்க வேண்டும் என்று சொல்லியிருந்தாங்க. அதற்காக நான் சிறப்பு பயிற்சி எடுத்தேன். ஒரு மாதம் கடும் பயிற்சி மேற்கொண்டு என் தமிழ் உச்சரிப்பிற்காக முழு பயிற்சி எடுத்த பிறகுதான் அந்த நாடகத்தை நடத்தினோம். தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, வெளிநாடுகளிலும் சேர்த்து 25 இடங்களில் இந்த திரௌபதி நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறோம்.

ஒரு பெண்ணாக நினைத்ததை சாதிப்பது என்பது பெரிய விஷயம். திருமணத்திற்கு முன்பு நமக்கு பிடித்ததை செய்து வந்தாலும், திருமணத்திற்குப் பிறகு அதை பலர் தொடர்வதில்லை. ஆனால் திருமணத்திற்குப் பிறகும் என் கனவை நோக்கி நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் என் குடும்பம், என் கணவர்தான் எனக்கு ரொம்ப பக்கபலமாக இருக்காங்க. கல்லூரி படிக்கும் போது எனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் வந்தது. அப்போது எனக்கு அதில் பெரிய அளவில் ஆர்வம் இல்லை. நாடகங்கள் நடித்த பிறகு தான் எனக்கு நடிப்பு என்றால் என்ன என்பதைப் பற்றிய புரிதல் கிடைத்தது. நாட்டியம் ஒரு கண் என்றால் நாடகம் என்னுடைய இரண்டாவது கண் என்று சொல்லலாம்’’ என்றவர், தன் தாயால் துவங்கப்பட்ட த்ரேயி நடனப் பயிற்சி பள்ளியை ஒரு நிறுவனராக நிர்வகித்து வருகிறார்.

‘‘அம்மா என்னுடைய பெஸ்ட் தோழின்னு சொல்லலாம். அவங்க கல்லூரி காலங்களில் டிரையோ காம்பினேஷனில், அதாவது, அம்மாவும், சித்திகள் இருவர் என மூவரும் இணைந்துதான் பல நடன நிகழ்ச்சியினை நடத்தியிருக்காங்க. அப்போது இருந்தே மூவருமே நடன துறையில் மிகவும் பிரபலம். இவங்க மூவரும் சேர்ந்து துவங்கியதுதான் இந்த நடனப் பள்ளி. அம்மா என்னிடம் மட்டுமில்லை தன்னிடம் நடனப் பயிற்சிக்காக வரும் மாணவர்களிடமும் ஒரு தோழியாகத்தான் பழகுவார். நடனப் பயிற்சி அளிப்பது மட்டுமில்லாமல் அவர் நடன நிகழ்ச்சிகள், நடன இசை நாடகங்கள் என பல நிகழ்ச்சிகளை இயக்கியுள்ளார்.

அவருக்கு நான் மகளா பிறந்ததை நினைக்கும் போது ரொம்ப பெருமையா இருக்கு. அதைவிட அவரின் நடனப் பயிற்சியில் சக பணியாளராக அவருடன் சேர்ந்து வேலை பார்க்க எனக்கு ரொம்பவே பிடித்தமான விஷயம். நான் பயிற்சி அளிக்கிறேன். நாடகத்தில் நடிக்கிறேன். இருந்தாலும் அவர்களின் அனுபவங்கள் எனக்கு இன்றும் பல பாடங்களை கற்றுத் தந்துள்ளது. என்னுடைய முன்மாதிரி அம்மாதான்’’ என்ற கிருத்திகா, தன் அம்மாவின் தயாரிப்பில் ‘சாகுந்தலம்’ என்ற நடன இசை நாடகத்தில் சாகுந்தலையாக நடித்துள்ளார்.

‘‘அம்மாவுடைய நாடகப் பள்ளியில் நான் ஒரு பயிற்சியாளராகத்தான் இருந்து வருகிறேன். எனக்கென தனியாக ஒரு நடனப் பள்ளி ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் எனக்கு இல்லை. எனக்கான ஒரு அடையாளம் கிடைக்க காரணம் என் அம்மா மற்றும் அவரின் நடனப்பள்ளிதான் என்பதால் நான் அந்த பள்ளியை விட்டு தனியாக ஒரு பள்ளி அமைக்க வேண்டும் என்று ஒரு போதும் நான் நினைக்க மாட்டேன்.

மேலும் என் முதல் அரங்கேற்றத்திற்குப் பிறகு தற்போது வரை நான் தனியாக அரங்கேற்றம் பண்ணியது கிடையாது. அம்மாவுடன் சேர்ந்துதான் எங்க மாணவர்களின் அரங்கேற்றத்திற்கு நட்டுவாங்கம் செய்து வருகிறேன். நான் நடனப் பயிற்சி அளித்தாலும், இன்றும் என்னுடைய நடனப் பயிற்சியை நான் விட்டுவிடவில்லை. நாடகம், நடனம், பாட்டு, பயிற்சிகள் மற்றும் குடும்பம் என என்னுடைய நாள் மிகவும் பரபரப்பாக போயிட்டு இருக்கு’’ என்றவரின் மகள் அனிக்காவும் தற்போது இசையில் தன்னை ஈடுபடுத்தி வருவதாகவும் புன்னகையுடன் பதிலளித்தார்.

தொகுப்பு: காயத்ரி காமராஜ்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்

The post அம்மாவும் நடனப் பள்ளியும்தான் எனக்கான அடையாளம்! appeared first on Dinakaran.

Tags : Krithika Surajit ,
× RELATED உடலில் அதிசயங்களை நிகழ்த்தும் ஆவாரம்பூ!