×

பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமப்புறங்களில் கோடை மழையால் பசுமைக்கு திரும்பிய சாலையோர மரங்கள்: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் பெய்த கோடை மழையால் சாலையோர மரங்கள் பசுமைக்கு திருப்பியுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராம பகுதிகளில் கடந்த பிப்ரவரி துவக்கத்திலிருந்து கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால், விவசாய நிலங்களில் பெரும்பகுதி ஈரப்பதமின்றி வறட்சியாக இருந்தது. இந்நிலையில் பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்தது.

இதனால் ரோட்டோரத்தில் வாடி காய்ந்த நிலையில் இருந்த மரங்கள் மற்றும் செடிக்கொடிகள், தற்போது பச்சை பசேல் என பச்சைதுண்டு போர்த்தியபோல் காணப்படுகிறது. அம்பராம்பாளையம் – ஆனைமலை சாலை, ஆழியார் ரோடு மற்றும் மீன்கரைரோடு மட்டுமின்றி கிராமப்புற ரோட்டோரத்தில் உள்ள மரங்கள், மீண்டும் துளிர்விட்டு பச்சை பசேலானதால், பார்ப்பதற்கு அழகுடன் உள்ளது. சுற்றுவட்டார கிராமங்களில் அவ்வப்போது பெய்யும் கோடை மழையால், இந்த மாதத்தில் கடந்த 4ம் தேதி துவங்கிய அக்னி நட்சத்திரத்தின் வெயிலின் தாக்கம் மிகவும் குறைவானது.

அதுபோல், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் இரவு நேரத்தில் அடிக்கடி கோடை மழை பெய்துள்ளது. டாப்சிலிப், பரம்பிக்குளம், ஆழியார் உள்ளிட்ட பகுதியில் பெய்த மழையால் சுற்றுலா பகுதி குளுமையாகி, சீதோஷ்ண நிலை ஏற்பட்டுள்ளது. வெளியூர்களிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

The post பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமப்புறங்களில் கோடை மழையால் பசுமைக்கு திரும்பிய சாலையோர மரங்கள்: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Pollachi ,Dinakaran ,
× RELATED கோடை மழையையடுத்து தக்காளி சாகுபடி...