×

டிராக்டரில் உணவு தேடிய யானை: வீடியோ வைரல்


கோவை: கோவை அருகே காட்டில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை, டிராக்டரில் உணவு தேடிய வீடியோ வைரலாகி வருகிறது. கோவை ஆனைகட்டி மலைப்பகுதியில் உள்ள காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி மலையடிவாரத்தில் உள்ள மாங்கரை, வீரபாண்டி, தடாகம், பாப்பநாயக்கன்பாளையம், பன்னிமடை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி திரிந்து வருகிறது. மேலும் அங்குள்ள தோட்டங்கள் மற்றும் விவசாய நிலங்களில் புகுந்து விளை பயிர்களை சேதப்படுத்தி செல்வது தொடர் கதையாக உள்ளது. இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து நேற்று இரவு வெளியேறிய ஒற்றை யானை துடியலூர் அடுத்த பாப்பநாயக்கன்பாளையம் பகுதிக்கு வந்தது.

அங்கிருந்த குணசேகரன் என்பவரின் தோட்டத்திற்குள் சென்று பிளிற ஆரம்பித்தது. இந்த சத்தம் கேட்டு வீட்டிற்குள் இருந்தவர்கள் ஜன்னல் வழியாக பார்த்தபோது காட்டு யானை வெளியே நிற்பது தெரியவந்தது. அவர்கள் பாதுகாப்பாக வீட்டுக்குள் பத்திரமாக பதுங்கி கொண்டனர். இதற்கிடையே காட்டு யானையை பார்த்ததும் அங்கிருந்த நாய்கள் குரைக்க தொடங்கியதால் வீட்டை சுற்றி சுற்றிவந்தது. அங்கிருந்த அரிசி மூட்டையை கிழித்து தின்றுவிட்டு தூக்கிவீசி சேதப்படுத்தியது. தொடர்ந்து அந்த யானை வீட்டின் அருகே நிறுத்தப்பட்டு இருந்த டிராக்டரில் ஏதாவது உணவு கிடைக்குமா என தும்பிக்கைவிட்டு துழாவி பார்த்தது.

அங்கு ஒன்றும் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் சிறிது நேரம் சுற்றி திரிந்து விட்டு மீண்டும் காட்டுக்குள் திரும்பி சென்றுவிட்டது. இந்த காட்சிகள் அவரது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியது. தற்போது அந்த காட்சிகள் வலை தளத்தில் வைரலாகி வருகிறது.

The post டிராக்டரில் உணவு தேடிய யானை: வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Anaigatti ,Mangarai ,Veerapandi ,Tadagam ,Papanayakanpalayam ,
× RELATED துடியலூர் அருகே டிராக்டரில் உணவு...