×
Saravana Stores

காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி விழா கொடியேற்றம்


காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பிரசித்திப் பெற்ற  வரதராஜ பெருமாள் கோயிலில் இன்று காலை கொடியேற்றத்துடன் வைகாசி பிரமோற்சவ விழா நிகழ்ச்சிகள் துவங்கின. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். காஞ்சிபுரத்தில் மிகப் பழமையான வரலாற்று சிறப்புமிக்க  வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் வைகாசி பிரமோற்சவ விழா நிகழ்ச்சிகள் துவங்கின. முன்னதாக, இக்கோயிலில் கொடியேற்றத்தை முன்னிட்டு கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகங்கள், தீபாரதனைகள் நடைபெற்றன. கருடாழ்வார் ஓவியம் பொறித்த கொடியானது, கோயில் கொடி மரத்தில் ஏற்றப்பட்டு தீபாராதனைகள் நடந்தன. கொடியேற்றத்தின்போது உற்சவர் தேவி-பூதேவி சமேதராக வரதராஜ பெருமாள் வெங்கடாத்ரி கொண்டை அலங்காரத்தில், வைர-வைடூரிய ஆபரணங்களுடன் சிறப்பு அலங்காரத்தில் கோயில் கொடிமரம் அருகே தேசிகர் சந்நிதிக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அப்போது மேளதாளங்கள் மற்றும் வாணவேடிக்கைகள் முழங்கின. பின்னர் கொடியேற்றம் முடிந்ததும் பெருமாள் தங்கச் சப்பரத்தில் வீதியுலாவாக எழுந்தருளினார். இதைத் தொடர்ந்து, நாள்தோறும் காலை, மாலை இருவேளைகளிலும் தேவி-பூதேவி சமேதராக பெருமாள் பல்வேறு உற்சவங்களில் அலங்கரிக்கப்பட்டு, வரும் திங்களன்று மாலை சிம்ம வாகனத்திலும், மறுநாள் அம்ச வாகனம், சூரிய பிரபை வாகனத்திலும் வீதியுலா நடைபெறுகிறது. இக்கோயிலில் வரும் 22ம் தேதி உலகப் புகழ்பெற்ற கருட சேவை உற்சவம் நடைபெறும். அப்போது பெருமாள் கருட வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அதைத் தொடர்ந்து அனுமந்த வாகனம், சேஷ வாகனம், சந்திரபிரபை, தங்க பல்லாக்கு, யாளி வாகனம், தங்கச் சப்பரம், யானை வாகனம் அலங்கரித்த வாகனங்களில் பெருமாள் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

இக்கோயிலில் வரும் 26ம் தேதி மிக பிரசித்தி பெற்ற தேர்த்திருவிழா நடைபெறுகிறது. அதிகாலை காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து பெருமாள் அலங்கரிக்கப்பட்டு, தேரடியில் உள்ள தேருக்கு வந்து பெருமாள் அமர்ந்து, ராஜவீதிகள் மற்றும் முக்கிய வீதிகளின் வழியாக பிரமாண்ட வீதியுலாவாக வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இத்தேரை முக்கிய பிரமுகர்கள் உள்பட ஆயிரக்கணக்கான மக்கள் வடம் பிடித்து இழுத்து செல்கின்றனர். மறுநாள் தொட்டி திருமஞ்சனம், குதிரை வாகனம், ஆள் மேல் பல்லாக்கு, தீர்த்தவாரி, புண்ணியகோடி விமானம், த்வாதச ஆராதனம், வெட்டிவேர் சப்பரம் உள்பட பல்வேறு கோலங்களில் பெருமாள் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதற்கான விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சீனிவாசன், மணியக்காரர் கிருஷ்ணகுமார், பட்டாச்சாரியார்கள், விழா குழுவினர் மற்றும் காஞ்சிபுரம் பகுதி மக்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

The post காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி விழா கொடியேற்றம் appeared first on Dinakaran.

Tags : VIKASI FESTIVAL ,VARADARAJA PERUMAL TEMPLE ,KANCHIPURA ,Kanchipuram ,Vikasi Pramorasava Festival ,Sami ,Varadarajab ,Kancheepuram ,Vikasi ,
× RELATED வைகுண்ட பெருமாள் கோயிலில் பாலாலயம்